திருப்பலி முன்னுரை
நாம் இன்று, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் விண்ணேற்றப் பெருவிழாவினை கொண்டாடி மகிழ்கின்றோம். தான் இறந்த பிறகு, சிதறிப்போன சீடர்களை, தனது உயிர்ப்பிற்குப்பிறகு ஒன்று சேர்க்கிறார். தான் விண்ணேற்றம் அடையும் நேரம் வரை, அவர்களுக்குத் தோன்றி, அறிவுரைகளையும், ஆசிகளையும் வழங்கி, அவர்களை திடப்படுத்துகிறார். தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு, தந்தை கடவுளின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் வரை, எருசலேமை விட்டு நீங்காமல், அங்கேயே தங்கி இருங்கள் என்று அவர்களுக்கு ஆசியளித்து, விண்ணேற்றம் அடைகிறார். ஆண்டவர் இயேசு எருசலேமிலிருந்து விண்ணேற்றம் அடையவில்லை. மாறாக, பெத்தானியாவிலிருந்து விண்ணேற்றமடைகிறார். இந்த பெத்தானியாவில்தான் இறந்துபோன தன் நண்பன் லாசருக்காக அழுது, உன் சகோதரன் நிச்சயமாக உயிர்த்தெழுவான் என்று, மார்த்தாவுக்கு வாக்குறுதியும் தந்து, இறந்துபோன அவரை உயிர்ப்பித்தார்.இப்பொழுது இந்தப் பெத்தானியாவிலிருந்தே ஆண்டவர் இயேசு விண்ணேற்றமடைகிறார். சிலுவை சுமந்து, பாடுகள்பட்டு, இறப்பதற்காக பெத்தானியாவிலிருந்து எருசலேமை நோக்கிச் சென்ற இறைவன், தனது உயிர்ப்பிற்குப்பின்பு, விண்ணேற்றமடைய, எருசலேமிலிருந்து பெத்தானியாவை நோக்கி வருகிறார். துன்பமின்றி இன்பம் இல்லை, தாழ்வு இன்றி உயர்வு இல்லை, இறப்பு இன்றி ஏற்றம் இல்லை என்பதை தன் சீடர்களுக்கு உணர்த்துகிறார். உயிர்த்து, விண்ணேற்றமடைந்த இந்த இறைவனின் சகோதரர், சகோதரிகளாக இருக்கும் நாம், தந்தை கடவுளின் வாக்குறுதிகளை நிறைவேற்ற, இவரைப்போல எதற்கும் தயாராக இருக்கின்றோமா என்று சிந்தித்தவர்களாய், இப்பெருவிழாத் திருப்பலியில் பக்தியோடு பங்கு பெறுவோம்.
முதல் வாசக முன்னுரை
ஆண்டவர் இயேசு, தான் விண்ணேற்றம் அடையும் நாள் வரை, தாம் உயிரோடு இருப்பதை தமது சீடர்களுக்கு காண்பிக்கும் பொருட்டு, அவர்களுக்குத் தோன்றி, தந்தைக் கடவுளின் வாக்குறுதி நிறைவேறும் வரை காத்திருங்கள் என்று கூறுவதை இம்முதல் வாசகத்தில் கேட்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை
மனிதரின் கைகளால் உருவாக்கப்பட்ட தூயகத்திற்குள் அல்ல; மாறாக, தந்தை கடவுளால் உருவாக்கப்பட்ட திருத் தூயகத்திற்குள்ஆண்டவர் இயேசு நுழைந்திருக்கிறார், நாம் நுழைவதற்கும் அவர் வாயிலாக இருக்கிறார் என்று கூறும் இவ்விரண்டாம் வாசகத்தைக் கேட்போம்.
மன்றாட்டுகள்
1. எங்கள் விண்ணகத் தந்தையே! உம் திருமகனின் விண்ணேற்றப் பெருவிழாவினை கொண்டாடும் உம் திரு அவையினர், அவரது உயிர்ப்பு மற்றும் விண்ணேற்றத்தினை, உலகின் கடையெல்லைவரை தங்கள் சாட்சிய வாழ்வு வழி அறிவித்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. எல்லாம் வல்லவரே! நீர் ஒருவரே உலகின் உண்மையான தலைவர், நீர் இன்றி எதுவும் இயங்காது என்பதை எம் நாட்டுத் தலைவர்கள் உணர்ந்து, தங்கள் மக்களை நல்வழியில் நடத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. எங்கள் அன்புத் தந்தையே! எங்களது பங்கிலும், குடும்பங்களிலும், எங்கள் சொற்களும், செயல்களும் பிறருக்கு உமது ஆசியை அளிப்பதாக அமைந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. எங்களை காப்பவரே! உம் திருமகனின் விண்ணேற்றப் பெருவிழாவினை கொண்டாடும் இந்நேரத்தில், எங்களது ஏக்கங்கள், எண்ணங்கள் அனைத்தும் நீர் வாழும் வான்வீட்டை நோக்கியே அமைந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5. எங்கள் பரம் பொருளே! உம் திரு மகனைப்போல, உமது வாக்குறுதிகளை நிறைவேற்றவும், உமது பணிக்காக தங்கள் வாழ்வை அர்ப்பணிக்கும் நல்லெண்ணம் கொண்டவர்களாகவும், எம் இளைஞர்கள் வாழ்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.