Namvazhvu
குடந்தை ஞானி புனித தேவசகாயம் -அனைவருக்கும் ஒரு சவால்!
Wednesday, 01 Jun 2022 06:48 am
Namvazhvu

Namvazhvu

தமிழகத்தின் முதல் புனிதர்! இந்திய பொதுநிலையினரில்  முதல் பொதுநிலையினர்  புனிதர்! முதல் இல்லறப் புனிதர்! அத்தனைப் பேறுகளும் அடைமொழிகளும் ‘புனித தேவசகாயம்’ அவர்களை புனிதர்களின் வரலாற்றில், வரலாற்றை வென்றவர்களின் வரிசையில் இப்புனிதரை முதன்மைப்படுத்தினாலும், அவர் தமிழகத் திரு அவைக்கும், இந்தியத் திருஅவைக்கும், இந்தியச் சமூகத்திற்கும், தலைதூக்கும் இன்றைய வலது சாரி அரசியலுக்கும், அருள்பணியாளர்களுக்கும், பொதுநிலையினருக்கும், கத்தோலிக்க இல்வாழ்க்கை தம்பதியினருக்கும் முன்வைக்கும் சவால்கள் ஏராளம். இவரது வரலாற்றைப் படிக்கும் ஒவ்வொருவரும் பெருமூச்சு விடுவதோடு நில்லாமல், சீர்தூக்கிய சிந்தனை மேலோங்க, தன் வாழ்வை செழுமைப்படுத்த வேண்டும். 200 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த புனித தேவசகாயத்தின் பாடுகளின் பாதை, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த அவர் விசுவசித்த ஆண்டவர் இயேசுவின் கல்வாரிப்பாதையோடு ஒன்றிப்பதும் ஒருமைப்படுவதும் சிந்திக்க வேண்டிய ஒன்று.

ஆண்டவருக்கோ 33, புனிதருக்கோ 40. துன்புறும் ஊழியன், கெத்சமனி அனுபவம், கசையடிகள், எருமைமீது பயணம், ஐந்து (குண்டு) காயம், ஆளுநர்களிடம் அலைகழிப்பு, பொய்யான குற்றச்சாட்டு, பிலாத்து = மார்த்தாண்ட வர்மா, பரிசேயர் = அந்தணர், வெறித்தனமான படைவீரர்கள், அன்னை மரியின் உடனிருப்பு, அதே பெரிய வெள்ளிக்கிழமை, உரோமை = வலதுசாரி வெறுப்பு அரசியல் , கல்வாரி = ஆரல் காற்றாடிமலை என்று ஒற்றுமைகள் இழையோடும். இயேசு மூன்று ஆண்டுகள் இறையாட்சிப் பணி ஆற்றினார் என்றால் புனித தேவசகாயமே (1749-1752) மறைசாட்சிப் பணி ஆற்றினார். இந்த மூன்றாண்டு கால மறைசாட்சிய வாழ்வில் இவர் செய்த ஏராளமான புதுமைகளும் உண்டு.

ஒட்டுமொத்தத்தில் இவரது வரலாறு, வாசிப்பவரை இயேசுவுக்காக வாழ்வதற்கும் அவருக்காகவே தம் வாழ்வை இழப்பதற்கும் நிச்சயம் தூண்டியெழுப்பும். இவர் ஏழே ஏழு ஆண்டு தம் கிறிஸ்தவ வாழ்க்கையில் ஏழு ஆண்டு எழுபது ஆண்டுகளுக்கு பலன் தரும் வகையில் தன்னையே அதிசிறந்த கோதுமை மணியாய் வளர்த்துள்ளார்; மணியடிச்சான் பாறையின் விழும் மறைச்சாட்சி மணியின் எதிரொலி நம் மனதில் மட்டுமல்ல.. இந்தியாவெங்கும், உலகெங்கும் ஓய்வின்றி எதிரொலிக்கிறது. இவர்தம் புனிதர்பட்டத்தின்போது வத்திக்கானின் புனித பேதுரு பேராலய மணியின் சாட்சி, நம் ஆரல்வாய்மொழி காற்றாடிமலையின் நீட்சிதான். புலியூர்க்குறிச்சியின் இவர் மண்டியிட்டு செபித்து பாறையில் வரவழைத்து இன்றும் வழிந்தோடும் அந்த அற்புத நீருற்று இந்தியாவை நனைக்க வேண்டும். அண்ணாமலைகளையும் ராசாக்களையும் இந்த ஒற்றை மறைசாட்சி புனித தேவசகாயத்தின் வாழ்க்கை நொறுக்கும்; ஒடுக்கும். வலதுசாரித்தனத்தின் நீலத்தை (விஷத்தை) குமரிக் கண்ட தேவசகாயத்தின் மறைசாட்சியம் குரல்வளையோடு நிறுத்தும். புராணம் ஒருபோதும் நீடித்து நிலைக்காது. வரலாறு மட்டுமே நிலைக்கும். நீலகண்டன் லாசர் ஆவார். இவர் பிறப்பினால் நீலகண்டன்; இறப்பினால் இறவா தேவசகாயம். தேவ + சகாயம்! இறை உதவி!

காற்றாடி மலை தழுவி வரும் புனித தேவசகாயத்தின் உயிர்க்காற்று, தமிழகத் திரு அவைக்கும் இந்தியத் திரு அவைக்கும் சுவாசமாக வேண்டும். குறைந்துவரும் அதன் ஆக்ஸிஜன் அளவு இன்னும் கூட வேண்டும். புனித தேவசகாயம் - ஒரு மந்திரச் சொல்! புனித தேவசகாயம் - இந்தியக் கிறிஸ்தவத்திற்கு மாபெரும் சவால்! புனித தேவசகாயம் - தமிழகத் திரு அவைக்கு தனிப்பெரும் வேர்! புனித தேவசகாயம் - மறைசாட்சிகளுக்கெல்லாம் மணிமகுடம்! புனித வலதுசாரி அரசியலுக்கு சிம்ம சொப்பனம்!

அவர்தம் பெயர் தேர்வே இவர்தம் தெளிவுக்குச் சான்று. தனக்கு தேவசகாயம் (லாசர்) தன் மனைவிக்கு ஞானப்பூ (தெரசம்மாள்)! அவர் மிகவும் நேசித்த மூத்த மொழி, தாய்மொழி தமிழில் ‘லாசர்’ என்ற பெயருக்கு தமிழ்ப்படுத்தி ‘தேவசகாயம்’ என்ற தேர்வே ஒரு சவால்தான். ‘பார்கவி’ மரித்து, மலர்ந்த ஞானப்பூ! இன்று நாம் ஆங்கில மோகத்தில் புரியாத, உச்சரிக்க இயலாத பெயர்களையெல்லாம் தேர்வு செய்து, மொழிக்கும் இனத்திற்கும் செய்யும் துரோகத்திற்கு திருமுழுக்குப்பெற்றபோது தேர்ந்துகொண்ட பெயரே - தேவசகாயமே - நமக்கு முதல் சவால். இவர்தம் புனிதர்பட்ட நிகழ்வுகளின்போது வத்திக்கானின் தொடங்கிய தமிழ்த்தாய் வாழ்த்தே இப்புனிதரின் தமிழ்ப்பற்றுக்கு கைங்கர்யம் கூறியதோ?! என்னவோ?! இறைத்திருவுளம்! இறை உதவி!

திருமுழுக்குப்பெற்று கிறிஸ்தவராக வாழ்ந்த ஏழு ஆண்டுகளில் திருமறை மீதான இவர்தம் ஆர்வம், திருப்பலியில் பங்கெடுப்பதில் அடைந்த ஆனந்தம், 36 கிலோமீட்டர் நடந்து நடந்து ஞாயிறுதோறும் திருப்பலியில் பங்கேற்ற பாங்கு, ஒப்புரவு அருள்சாதனம் உட்பட திருவருள்சாதனங்களில் கொண்ட தொடர் ஈடுபாடு, பக்தி, செபம், அத்தனையும் நமக்குச் சவால்தான். எல்லாவற்றிற்கும் மேலாக, இவர்தம் சாட்சிய வாழ்வு, மறைபரப்புமீதான ஆர்வம்! ‘இயேசுவே மீட்பர்!’ என்பதை அனைவருக்கும் அறிவித்து, கிறிஸ்தவத்திற்குள் அவர்களைக் கொண்டு சேர்க்கும் திருத்தூதுப்பணி. இவர் எல்லாரையும் கிறிஸ்தவர் ஆக்கிவிடுவாரோ என்ற பயம்தான் பரிசேயத்தனத்தோடு அந்தணர்களை அவருக்கு எதிராக செயல்படத் தூண்டியது. குழந்தை திருமுழுக்கில் கிறிஸ்தவராகி.. உண்மையில் கிறிஸ்து + அவராக வாழாத நமக்கு, புனித தேவசகாயம் ஒரு சவால்தான். உலகெங்கும் சென்று நற்செய்தி பறைசாற்றுங்கள் என்பதை வாழ்வாக்கால், ஆண்டிற்கொருமுறை பெயரளவுக்கு மறைபரப்பு ஞாயிறு என்று நின்றுவிடும் நமக்கு அவர் எப்போதும் சவால்தான்.

சாதிய படியமைப்பில் திளைத்த இந்தியச் சமூகத்தில் வேரூன்றிய கிறிஸ்தவம் சாதியத்திற்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. கல்வி கொடுத்து ஒடுக்கப்பட்டோர் கரை சேர அது துடுப்பானது! தெருக்களில் நுழைய அனுமதிக்கப்படாதவர்களை ஆலயத்தில் நுழைய அனுமதித்து அனைவருக்கும் வழியானது. சாதியத்தின் சல்லிவேர்கள் தனக்குள் புகுவதற்கு காலப்போக்கில் கிறிஸ்தவம் தன்னை அனுமதித்தாலும், சாதியற்ற சமத்துவ நிலைக்கு கிறிஸ்தவம் ஆணிவேராக இருந்தது, இருக்கிறது, இருக்க முயற்சித்தது என்பதை எவரும் மறுக்க இயலாது. ஒடுக்கப்பட்டோரின், ஓரங்கட்டப்பட்டோரின் சமயமாக கிறிஸ்தவம் கருதப்பட்ட அந்தக் காலக் கட்டங்களில், உயர்சாதியில் பிறந்த இவர், அனைத்தையும் கிறிஸ்துவின் பொருட்டு குப்பையெனக் கருதி, சாமானியர்களோடு சகஜமாகப் பழகி, அரசவை முதல் அந்தணர் வரை, கோத்திரத்தார் முதல் குடும்பத்தார் வரை அனைவரும் ஏளனப்படுத்தியபோதும் எதைப்பற்றியும் கவலைப்படாமல், என்பொருட்டு எந்தக் கிறிஸ்தவரும் ஒடுக்கப்படக்கூடாது என்பதில் தெளிவாக இருந்து, தான் துன்பப்பட்டாலும், தன் மதத்தைச் சார்ந்த எவரும் துன்புறக்கூடாது என்று அறவழியில் செயல்பட்ட தேவசகாயம் அனைவருக்கும் சவால்தான். சாதியற்ற சமநிலை கிறிஸ்தவத்திற்கு, இந்தச் ‘சமத்துவப் புனிதர்’ மிகப்பெரிய சவால்தான்.

தன் திருமுழுக்குப் பெயரில் தன் சமயச் சாயலை நீக்கி, ஏதோ ஒரு வகையில் அரசிடமிருந்து சலுகை பெற, பெயரளவு கிறிஸ்தவர்களுக்கு தேவசகாயம் சவால்தான். திருமுழுக்குப் பெற்ற நாள் முதல் தன் தேவசகாயம் என்னும் பெயரை மறைக்காமல், சாட்சியாக வாழ்ந்து, சளைக்காமல் உண்மைக் கடவுளைப் பற்றி நற்செய்தி பறைசாற்றி, மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து, இறுதியில் இரத்தம் சிந்திய புனித தேவசகாயம் எப்போதும் சவால்தான்.

வலதுசாரிகளின் தாய்மதம் திரும்புங்கள் (கர்வாப்சி) என்ற வாதத்திற்கும், நமக்குப் பகை முரணாகி, தாய்மதம் திரும்பியுள்ள சீமான்களின் சைவத்துக்கு வாருங்கள் என்ற கூவலுக்கும் புனித தேவசகாயம் எப்போதும் சவால்தான். வதைத்தாலும் உதைத்தாலும் சிதைத்தாலும் ஒருபோதும் என் ஆண்டவரை மறுதலியேன் என்ற தன் இன்னுயிரை ஈந்த புனித தேவசகாயம், வரவுள்ள வேதகலாபனை காலத்திற்கு கிறிஸ்தவர்களாகிய நமக்கெல்லாம் சவால்தான்.

அருள்நிலையினரின் மேலாதிக்கமும் குருத்துவ வல்லாதிக்கமும் இரண்டாம் வத்திக்கான் சங்கத்திற்குப் பிறகும் கத்தோலிக்கத் திரு அவையில் நீடிக்கும் இந்தக் காலக்கட்டங்களில் இந்தியாவின் முதல் பொதுநிலையினர் புனிதர், இல்லறப் புனிதர் புனித தேவசகாயம், குருக்களுக்கும் ஆயர்களுக்கும் அருள்சகோதரிகளுக்கும் சவால்தான்.  கூட்டியக்கப்பாதையில் அனைவரும் இணைந்து ஒருமித்து பயணிக்க திருத்தந்தை பிரான்சிஸ் விரும்பும் இந்நாட்களில், முதல் இந்திய பொதுநிலையினப் புனிதர், புனித தேவசகாயம் ஒரு சவால்தான்.

முட்டு இடிச்சான் பாறையின் நீரும், நாஞ்சில் நட்டாலம் நிலத்தின் பரப்பும், ஆரல்வாய் காற்றாடி மலையின் இரத்தம் தழுவிய காற்றும், கிறிஸ்துவின் மீது அவர்கொண்ட விசுவாச நெருப்பும், மணியடிச்சான் பாறையிலிருந்து வெளியில் பரவும் மணியோசையும், ஆக மேற்கண்ட புனித தேவசகாயத்தின் ஐவகை குணங்களும் அனைவருக்கும் சவால்தான். உரோமையின் புனித செபஸ்தியாரைப் பின்பற்றி, இந்தியாவின் நட்டாலம் முதல் காற்றாடி மலை வரை, கிறிஸ்தவராக வாழ்ந்து, மறைசாட்சியாக மடிந்த புனித தேவசகாயம், இனிவரும் காலம் முழுவதற்கும் சவாலாகவே நீடிப்பார்.

இந்தச் சவாலை சமாளிக்க வேண்டுமென்றால், புனித தேவசகாயத்தின் வழியில் பொதுநிலையினர் - இறைமக்கள்  இயக்கம் மூன்றாம் சபை போல் கட்டமைக்கப்பட்டு தேசமெங்கும் பரவலாக்கப்பட வேண்டும்.

புனித தேவசகாயமே!

எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!