அண்மையில் இந்து ஆங்கில நாளேட்டில் (மே 15, 2022) அரிய ஆனால் வியப்பூட்டும் செய்தியொன்று வெளிவந்தது.
“கர்நாடக மாநிலத்தின் அனந்தபுரா என்ற ஊரில் வாழும் இசுலாமியர்கள், வெள்ளிக்கிழமையன்று நடத்தும் தொழுகைக்குப்பின், இந்திய அரசியலமைப்பின் முகப்புரையை வாசிக்கின்றனர். வெள்ளிக்கிழமை இசுலாமியர்களின் அசன் ஓதல் முடிந்தவுடன், சமாத்தின் மௌலானா அவர்களின் சமய உரைக்குப்பின், உள்ளூர் வழக்குரைஞர் ஒருவர் இந்திய அரசியலமைப்பு பற்றி உரையொன்று நிகழ்த்துகிறார். தொழுகைக்கு வந்திருந்த அனைவர் கைகளிலும் அரசியல் சாசன நகல் உள்ளதாம். அரசியல் சாசன முகப்புரையை ஒருவர் வாசிக்க ஏனையோர் தொடர்கின்றனர்”. நாளிதழில் வந்த செய்தியின் சாரமிது. நாளும் ஐந்து முறை தொழுகை செய்வது எங்கள் ஆன்ம விருத்திக்கு பயன்படுவது போன்று, பிறந்த நாட்டை மதிக்க இவ்வாசிப்பு பயன்படுவதாக தொழுகையை வழிநடத்தும் மொளலானா கூறுகின்றார்.
கர்நாடகாவின் அனந்தபுரா நமக்கு தரும் செய்தி என்ன? மத அடிப்படைவாதத்தை எச்சூழலிலும் சமரசம் செய்யாதவர் என்று பேசப் பெறும் இசுலாமியர் தம் வழிபாட்டு நேரங்களில் இந்திய அரசியலமைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? அரசியலமைப்பின் முகப்புரைக்கு இந்தியக் குடிமக்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இந்தியர்களின் மீது எவ்வித பாகுபாடுமின்றி பாதுகாக்கும் கவசமே இந்திய அரசியல் சாசன முகப்புரை. இம்முகப்புரை ஜனநாயகம், சமத்துவம், சமயச்சார்பின்மை, இறையாண்மைமிக்க குடியரசாக உத்தரவாதமளிக்கிறது. வாழ்வின் உயர்ந்த இம்மதிப்பீடுகளின் வழி நீதி, சகோதரத்துவம் எனும் மதிப்பீடுகளைக் காக்கவும், அரசியல் சாசன முகப்புரை உத்தரவாதமளிக்கிறது. இம்மதிப்பீடுகள் மதங்கள் முன்மொழியும் கோட்பாடுகளுக்கு எதிரானது அல்ல; அரசியலமைப்புகள் இம்மதிப்பீடுகளைக் காக்கப்பெறவேண்டிய சித்தாந்தங்களாக ஏற்றுக்கொண்டமையாலே, மதங்களுக்கு அப்பாற்பட்ட மதிப்பீடுகளாக முகப்புரையின் மதிப்பீடுகளைக் கருதவேண்டிய அவசியமில்லை.
விடுதலை இறையியலை வேகமாகப் பேசி வந்த கிறித்தவ மறைப்பணியாளர்கள் கூட தம் பணித்தளத்தில் இம்மதிப்பீடுகளைப் பேச துணிவற்ற நிலையைத் தான் எங்கும் பார்க்கிறோம். இன்று நாம் உரத்துப்பேசும் மதச்சார்பின்மை எனும் மதிப்பீடு கிறிஸ்தவர்களின் வாயில் ஒலிக்கும் சொல்லாக இல்லை என்பது நிதர்சன மல்லவா? மனித உரிமைக்கான அர்த்தத்தையும் மதச்சார்பின்மை என்ற உலகளாவிய கோட்பாட்டின் ஊற்றுக்கண்ணாகிய கிறிஸ்தவம் தந்த கோட்பாட்டையும் எந்த மறையுரையிலாவது கேட்டிருக்கிறோமா? பிரபல மனித உரிமைப் போராளி நீதியரசர் கிருஷ்ணய்யர் அவர்கள் தன் உரையொன்றில் மதச்சார்பின்மை கோட்பாட்டை உலகுக்கு அளித்த பெருமை இயேசுவுக்கே உண்டென்பார்.
சீசருக்கு உரியதை சீசருக்கும், கடவுளுக்குரியதை கடவுளுக்கும் பிரித்து கொடுக்க சொன்ன இயேசு, சமயச் சார்பின்மைக்கு இலக்கணம் வகுத்தவர் என்பார் நீதியரசர். கிறித்தவம் வகுத்த உயிர்க் கோட்பாடுகளை எத்தனை பேர் உரத்துப் பேசுகிறோம். இந்திய அரசியலமைப்பு உத்தரவாதமளிக்கும் மதச்சுதந்திரம் காக்கப் பெறவில்லையெனில், இந்தியா சிதறுண்டு போகும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இந்தியாவுக்கு வருகை தந்தபோது கூறிச் சென்றார். இந்திய அரசியல் சாசனம் மதச் சுதந்திரத்தை காத்து நிற்கும் பெருங்கவசம் என்பதை நம்மில் புரிந்துகொண்டோர் யார்? மதச்சுதந்திரத்தை உள்ளடக் கிய மதச்சார்பின்மையும், மதச்சார்பின்மை எனும் மானுட உயர்மதிப்பீட்டின் உள்ளடக்கமாம் பாகுபாடு காட்டாமையை, சமத்துவத்தை காக்கும் திறன் மிக்க மதச்சார்பின்மைக்கு எத்தனை கிறிஸ்தவ நம்பிக்கையாளர்கள் முட்டு கொடுக்கின்றனர்? எத்தனை பேர் இதன் உள்ளடக்கத்தைப் புரிந்து கொண்டுள்ளனர்?
இந்தியாவில் திட்டமிட்டு வளர்க்கப்பட்டு வரும் மதவாதச் சூழலில் நாம் என்ன செய்யலாம் என்ற கேள்விக்கு, ஆயர்கள் மாமன்றங்களில், பொதுநிலையினர் பேரவைகளில் பேசப்படா பொருளில்லை. கோவையில் நடந்த தமிழக ஆயர்கள் பேரவையின் பொதுக்குழுவின் கூட்டமொன்றில் தமிழ்நாடு மற்றும் புதுவைப் பேரவையின் கூட்டமொன்றில் பேசும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போதைய தமிழக ஆயர் பேரவையின் தலைவராக மேதகு ஆயர் ரெமிஜியூஸ் இருந்தார். மதவாதத்தால் என்ன செய்யும் என்ற தலைப்பில் பேச அழைக்கப்பட்ட நான், இந்தியாவில் மதவாதம் வீழ்த்தப்பட்ட மனித உரிமைகள் பள்ளிகள் தோறும், கல்லூரிகள் தோறும் பாடமாக வேண்டும் என்ற பரிந்துரையை வைத்தேன். ஏற்கனவே மனித உரிமைப் பாதுகாப்புப் பணியில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்த எனக்கு இவ்வுரிமைச் சாசனங்களே மானுடம் காக்கும் கருவியாக இயலும் என்பதில் தீவிர நம்பிக்கைக் கொண்டிருந்தேன்.
ஏற்கனவே ஐக்கிய நாட்டு அவை 1995 ஆம் ஆண்டிலிருந்து, 2005 வரை மனித உரிமைக் கல்விக்கான பத்தாண்டுகள் என்று அறிவித்திருந்த நிலையில், குடிமைச்சங்கங்களும், ஜனநாயக நிறுவனங்களும் இவ்வாணையைக் கொண்டு செலுத்த அனுமதி அளித்த நிலையில், தமிழகக் கிறித்தவம் கண்டு கொள்ள வேண்டிய நிலையில் மதுரையை மையமாகக் கொண்ட ஒரு நிறுவனம் இத்திட்டத்தை ஆத்மார்த்தமாக முன்னெடுத்தது.
தமிழக துறவியர் பேரவை ஏற்றுக் கொண்டது. தமிழகமெங்கும் சுமார் 300 பங்குகளில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தமிழ் நாட்டில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் இத்திட்டம் அரசின் அனுமதியோடு 400 பள்ளிகளில் 10 வருடமாக நடத்தப்பட்டது.
நாட்டின் பண்பைக் காட்டும் அடையாளமான அரசியல் சாசனம் மட்டுமே, நம் மக்களின் தோன்றாத் துணையாயிருக்க முடியும். ஆனால், அரசியல் சாசனம் தரும் உரிமைக்கவசங்களின் அடிப்படையில்தான் நம் நிறுவனங்கள் இயங்குகின்றன என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல், இந்தியக் குடிமக்கள் மட்டுமல்லாமல், குடிமக்களுள் தனிக்கவனம் பெறும் மதச்சிறுபான்மையினர்கூட அறியாதே வாழ்கின்றனர். நாடெங்கும் மதவாத அரசுகள் வெகு துரிதமாக நிறைவேற்றி வரும் மதமாற்றுத்தடை சட்டங்களை எதிர்கொள்ளும் வலு இல்லாமல் போவதற்கு என்ன காரணம்? நம் மக்களிடம் இச்சட்டம் கிறித்தவர்களுக்கு எதிரானது என்ற கண்ணோட்டத்தில் எதிர்ப்புணர்வை உருவாக்கி வருகிறோமே தவிர, உரிமைக் கண்ணோட்டத்தில் எதிர்க்கும் ஆற்றலையும், திறனையும் வளர்க்கும் வகையில் எம்முயற்சியும் செய்யப்படவில்லை.
மதமாற்றம் என்ற பெயரில் கிறித்தவம் கொச்சைப்படுத்தப்படுகிறது. மறை போதகர்கள் அவமானப்படுத்தப்படுகின்றனர்.
இவையெல்லாம் மதவாதிகளால் திட்டமிட்டு முன்னெடுக்கப்படுகின்றபோது, சாதாரண கிறித்தவ விசுவாசிகள் எந்த மன நிலையில் ஏற்கின்றார்களோ, அந்த மன நிலை கூட கிறித்தவத்தை ஆள்வோரிடம் ஏற்படுவதில்லை. இவர்கள் சினங்கொள்வதில்லை, மட்டுமல்லாமல் தாங்கள் மதம்மாறுவதில்லை என்று சொல்வதில் கூட பெருமை கொள்கின்றனர். கட்டாய மதமாற்றம் எப்போதுமே சாத்தியமில்லை என்பது உண்மையாயிருக்க, மதமாற்றம் என்பதை குற்றமாகப் பார்க்கும் பார்வையை திட்டமிட்டு வளைத்து கிறித்தவ மறையாளர்களைக் குற்றவாளியாகச் சித்தரிக்கும் போக்கு வளர்ந்து வருகின்ற நிலையில், இப்போக்கை எதிர்கொள்வதற்கான உரிமை எனும் ஆயுதம் நம்மிடம் இல்லை என்பது மிகக் கேவலமான நிலையாகும்.
மனசாட்சியை அடிப்படை உரிமையாக்கும் அரசியல் அமைப்புச்சட்டம், மதச் சுதந்திரத்தோடு இணைத்துப் பேசுகின்ற உயர் பண்பை இங்கு பார்க்க தவறிவிட்டோம். திருமறை சட்டத்தை உரோம் மாநகர் வரை சென்று கற்றுவரும் குருக்கள், உள்ளூர்ச் சட்ட நுணுக்கங்களைக் கற்பதும் இல்லை, கற்றதை மக்களுக்குத் தெரியப்படுத்துவதும் இல்லை. கருத்துச்சுதந்திரத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மதச்சுதந்திரம் ஒரு குறிப்பிட்ட மதத்தை தழுவ, கடைப்பிடிக்க மட்டுமல்ல; போதிக்க அல்லது பிரச்சாரம் செய்யவும் உரிமை அளிக்கிறது. இந்திய அரசியல் நிர்ணய சபையில் மதச்சுதந்திரம் பற்றிய விவாதத்தில் பிரச்சாரம் செய்தல் என்ற பிரிவு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இந்து மத அமைப்புகளிள் மிகப்பெரிய சார்பாளர் என்று கருதப்பட்ட சி.டி. தேஷ்முக் அவர்களும் மதப்பிரச்சார உரிமைக்காக வாதிட்டார். கருத்துரிமையை வழங்கியுள்ள அரசியல் சாசனம் பேச்சுரிமையின் உள்ளடக்கமான போதிக்கும் உரிமையை மறுப்பதை மிகப் பெரிய முரணாகப் பார்த்ததன் பயன்தான் பிரச்சாரத்திற்கான உரிமை. அரசியல் நிர்ணய சபையில் இடம் பெற்றிருந்த கிறித்தவர் எவருமே இந்தக் கடுமையான நிலைபாட்டை எடுக்கவில்லை என்ற உண்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இன்று நாம் பேச பயப்படுகிறோம். எதிர்க்குரலுக்கு அஞ்சுகிறோம்.
இசுலாமியர்கள் அரசியலாக்கப்பட்டவர்கள் என்று கூறுவதில் முழு உண்மை இருப்பதாக சொல்ல முடியாது. மசூதிகளில் ஒலிஎழுப்ப தடை. மாற்றாக அனுமன் கீதம் எழுப்பப்பெறலாம். பெண்களின் ஹிஜாப் மறுக்கப்படலாம். இசுலாமியக் குடியிருப்புகள் தகர்க்கப்படலாம். வாரணாசி மசூதியில் சிவலிங்கம் இடம் பெறலாம். இச்சிவலிங்க பாதுகாப்பிற்கு நீதிமன்றம் அனுமதி அளிக்கலாம். 1949 இல் அன்றைய மசூதியில் வைக்கப்பட்ட இராமர் சிலை, அன்றைய நீதிமன்றத்தின் மாஜிஸ்ட்ரேட் அகற்ற அனுமதிக்கா நிலை இன்று காசியில் நிகழ்கிறது. நாளை இன்னொரு கோயிலாக அர்ச்சிக்க மோடி இருக்கவே செய்கிறார். இந்து ராஷ்டிரத்தை கட்டமைக்க காட்டும் துரிதத்திற்கு ஈடுகொடுக்க முடியுமா என்ற நிலை இன்று எழுந்துள்ளது. இன்று இந்துத்துவர்கள் காட்டும் அவசரத்தைப் பார்த்தால் காஷ்மீரின் தனி அந்தஸ்தை ஒற்றை ஆணையில், ஒரே நாளில் பறித்துவிட்டது போன்று, இந்திய குடிமக்களாகிய நாம் உருவாக்கிய ஜனநாயக, சமத்துவ, சமய சார்பற்ற இறையாண்மையோடு கூடிய குடியரசு மோடி சகாக்களினால் ஒரே நாளில் ஒற்றை ஆணையில் களவாடப்பட்டாலும், ஆச்சரியப்பட வேண்டியதிருக்காது.
மதவாதிகளின் இந்த அசுர வேகத்தை எப்படி எதிர் கொள்ளப்போகிறோம்?
உரிமைகளைக் கவசமாக்காமல் ஒன்றே, இன்றைய ஒரே நம்பிக்கை அரசியலமைப்புச் சட்டத்தை தூக்கிப்பிடிப்போம்.