Namvazhvu
குடந்தை ஞானி மறைப்பணித்தள மறைமாவட்டங்களுக்கு திரு அவையின் உதவி தேவை
Thursday, 09 Jun 2022 05:59 am
Namvazhvu

Namvazhvu

திரு அவையில் சிறார் பாலியலுக்குப் பயன்படுத்தப்படுவதைத் தடைசெய்வது குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஆணையை நடைமுறைப்படுத்த, திரு அவை, மறைப்பணித்தள மறைமாவட்டங்களுக்கு வல்லுநர்களைக் கொடுத்து உதவவேண்டும் என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

திரு அவையில் சிறார் பாதுகாப்பு குறித்து மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் பற்றி, KTO பிரெஞ்சு தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த, நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவர் கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள், தனது பேராயமும், கத்தோலிக்க ஆயர் பேரவைகளோடு இணைந்து இந்நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

காலங்காலமாய் இயங்கிவரும் தலத்திரு அவைகளுக்கு, சிறார் பாதுகாப்பு குறித்த நடவடிக்கைகளை நடத்த, பணிக்குழுக்கள், ஆணையங்கள் போன்றவற்றை உருவாக்க எளிதாக இருக்கலாம். ஏனென்றால், அத்திரு அவைகளிடம் இத்துறையில் பயிற்சிபெற்றவர்கள் உள்ளனர் என்றும், கர்தினால் தாக்லே அவர்கள் எடுத்துரைத்துள்ளார்ஆனால், இளம் தலத்திரு அவைகளுக்கு, குறிப்பாக, தற்போதுதான் வளர்ந்துவரும் இளம் தலத்திரு அவைகளுக்கு, உளவியல் வல்லுநர்கள், திரு அவை சட்ட வழக்கறிஞர்கள் போன்றோர் தேவைப்படுகின்றனர் எனவும் கர்தினால் தாக்லே அவர்கள் கூறியுள்ளார்.

இந்நிலையில்தான் உலகளாவியத் திரு அவை, ஒன்று மற்றொன்றுக்கு உதவ முடியும் என்றும், வல்லுநர்களைக் கொண்டிருக்கும் தலத்திரு அவைகள், உலகின் மற்ற பகுதிகளில் மனித வளங்களை உருவாக்க உதவ முடியும் என்றும் கர்தினால் தாக்லே அவர்கள் கூறியுள்ளார். கர்தினால் தாக்லே அவர்கள், KTO  தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியை, மே 25 ஆம் தேதி புதனன்று, அத்தொலைக்காட்சி நிறுவனம் யூடியூப்பிலும் பிரசுரித்துள்ளது. இப்பேட்டியில், ஏழ்மை, உக்ரைன் போர், பவுலின் ஜாரிக்காட்டை அருளாளராக அறிவித்தது போன்ற விவகாரங்கள் பற்றிய கருத்துகளையும், கர்தினால் தாக்லே அவர்கள் பகிர்ந்துகொண்டுள்ளார்.

200 ஆண்டுகளுக்குமுன்பு, திரு அவையில் நற்செய்தி அறிவிப்புப்பணி அமைப்பை உருவாக்கிய 23 வயது நிரம்பிய பிரெஞ்சு இளம்பெண் பவுலின் ஜாரிக்காட், மே 22 ஆம் தேதி, கடந்த ஞாயிறன்று லியோன் நகரில் அருளாளராக அறிவிக்கப்பட்டார். இந்நிகழ்வை கர்தினால் தாக்லே அவர்கள் தலைமையேற்று நிறைவேற்றினார்.