முழுமையான அக்கறை
இன்றைய நாளில் நாம் ஆண்டவராகிய கிறிஸ்துவின் திருவுடல், திருஇரத்தப் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். நம் ஆண்டவராகிய கிறிஸ்து தன் உடலோடும், இரத்தத்தோடும் அப்ப, இரசத்தில் வீற்றிருக்கிறார் என்ற மறைபொருளே இன்றைய திருநாளின் பின்புலத்தில் இருக்கிறது. இருந்தாலும், இந்த நாள் மனிதர்கள் மிக அடிப்படையான ஓர் உணர்வான பசியோடு தொடர்புடையது. பசி என்ற மனித உணர்வை எதிர்கொள்கின்ற கடவுள், மனிதர்களின் ஆன்மாவிற்கு மட்டுமல்லாமல், உடலுக்கும் உணவு கொடுக்கிறார் என்பதே மறைபொருளின் நீட்சி.
இன்றைய முதல் வாசகத்தில் (காண். தொநூ 14:18-20) ஆபிராமும் அவருடைய சகோதரர் லோத்தும் நான்கு அரசர்களை வெற்றிகொண்ட நிறைவுப் பகுதியை வாசிக்கின்றோம். இந்த நான்கு அரசர்களும் லோத்து மற்றும் அவருடைய ஆள்களைக் கொண்டு, அவரையும் அவருடைய உடைமைகள் மற்றும் கால்நடைகளையும் சிறைப்பிடிக்கின்றனர் (காண். தொநூ 14:12). அவர்கள் தன்னைவிட வலிமை வாய்ந்தவர்களாக இருந்தாலும், தன்னுடைய துணிச்சலாலும், இராணுவ யுக்தியாலும் ஆபிராம் அவர்களைத் தோற்கடிக்கின்றார். தோற்கடித்து வீடு திரும்பும்போது, உள்நாட்டுக்காரர்கள் அவரை சிறப்பாக வரவேற்கின்றனர். உள்நாட்டின் அரசராக இருந்த சாலேம் அரசர் மெல்கிசெதேக்கும் அங்கே வந்து ஆபிராமை வாழ்த்துகின்றார். ‘மெல்கிசெதேக்கு’ என்பது ஓர் உருவகப் பெயர். ‘நீதியின் அரசர்’ என்பது இதன் பொருள். மேலும், ‘சாலேம்’ என்றால் ‘அமைதி.’ இவ்வாறாக, மெல்கிசெதேக்கு நீதியின், அமைதியின் அரசராக இருக்கும் இவர், உன்னத கடவுளின் அர்ச்சகராகவும் இருக்கிறார். அருள்பணியாளரின் முதல் ஆசீர் இப்பகுதியில்தான் வருகிறது. ஆபிராமிற்கு ஆசி வழங்குகின்ற இவர், ஆபிராமை வாழ்த்துவதோடு, ஆபிராமிற்கு வெற்றியைத் தந்த உன்னத கடவுளுக்கும் வாழ்த்துக் கூறுகிறார். மேலும், அப்பமும், திராட்சை இரசமும் கொடுத்து ஆபிராமையும், அவருடன் வந்தவர்களையும் வரவேற்கின்றார். போரினாலும், பசியாலும் துவண்டு போயிருந்த ஆபிராமுக்கும், அவருடைய வீரர்களுக்கும் இவ்வுணவு ஊட்டம் தருவதாக இருந்திருக்கும்.
ஆபிராமுக்கு மெல்கிசெதேக்கு அளித்த வரவேற்பு அவருடைய முழுமையான அக்கறையை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. ஆபிராமையும், கடவுளையும் வாழ்த்தியதன் வழியாக, ஆபிராமின் வெற்றிக்குக் காரணம் உன்னத கடவுளே என்று வெற்றியின் ஆன்மீக அடித்தளத்தைக் கோடிட்டுக் காட்டுகிறார் மெல்கிசெதேக்கு. உன்னத கடவுள் ஆபிராமோடு உடன் இருந்ததால்தான் அவரால் போரில் வெற்றிபெற முடிந்தது. உன்னத கடவுளே அந்நான்கு அரசர்களையும் ஆபிராமின் கைகளில் ஒப்புவித்தார். மேலும், ஆபிராமுக்கு அப்பமும், திராட்சை இரசமும் கொடுத்ததன் வழியாக ஆபிராம் மற்றும் அவரோடு உடனிருந்தவர்களின் உடல் தேவையையும் நிறைவேற்றுகிறார் மெல்கிசெதேக்கு. இவ்வாறாக, கடவுள் அவருடைய விருப்பத்தை நிறைவேற்றுபவர்களின் ஆன்மாவுக்கும், உடலுக்கும் உணவு தந்து முழுமையாக அக்கறை காட்டுகிறார் என்பதை மெல்கிசெதேக்கின் செயல் நமக்குச் சுட்டிக்காட்டுகிறது.
இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 1 கொரி 11:23-26), பவுல், ஆண்டவரின் இறுதி இராவுணவு எப்படிக் கொண்டாடப்பட வேண்டும் என கொரிந்தியத் திரு அவைக்கு அறிவுறுத்துகின்றார். இதன் பின்புலத்தில் இருப்பது கொரிந்து நகர மக்களின் பிறழ்வான செயல்பாடு. அது என்ன பிறழ்வான செயல்பாடு? இயேசுவின் இறுதி இராவுணவை நினைவுகூரும் வகையில் கொரிந்து நகர மக்கள் கூடி விருந்து உண்டனர். அந்த விருந்திற்கு ஆன்மீக மற்றும் சமூக அர்த்தம் இருந்தது. ஆன்மீக அர்த்தம் என்னவென்றால், அவர்கள் கூடி வரும் போது அந்த இடம் கூட்டு செபத்திற்கான இடமாகவும், இயேசுவின் பாடுகள் மற்றும் உயிர்ப்பு பற்றிய அறிவைப் பெறுகின்ற இடமாகவும் மாறியது. சமூக அர்த்தம் என்னவென்றால், உணவையும், பானத்தையும் சாதாரண மக்களோடு பகிர்ந்துகொள்ளும் இடமாக அது இருந்தது.
ஆனால், காலப்போக்கில் ஆன்மீக அர்த்தம் மறைய ஆரம்பித்தது. பணக்காரர்கள் சிலர் தாங்கள் கொண்டு வந்ததை உண்டு, குடித்து, மது மயக்கத்தில் இருந்ததோடு ஏழைகளுக்கும், எளியவர்களுக்கும் உணவு கிடைக்காமல் செய்துவிட்டனர். வேலை முடிந்து வந்து பார்க்கின்ற ஏழைகளும், அடிமைகளும் ஒன்றும் கிடைக்காமல் பசியால் வாடினர். ஆக, கிறிஸ்துவை மையமாக வைத்திருந்த கூடுகை மதுபானக் கூடுகையாக மாறிப் போனது (காண். 1 கொரி 11:17-22).
இந்தப் பின்புலத்தில் அவர்களுக்கு அறிவுறுத்துகின்ற பவுல், கூடுகையின் நோக்கம் இயேசுவின் பாடுகளையும், தியாகத்தையும் நினைவுகூறுவதே என்று நினைவூட்டுகிறார். இயேசு செய்ததை தாங்கள் செய்யும்போது அதனால் ஆன்மீக ஊட்டம் பெறுகிறார்கள் என்றும், இதை அவர்கள் இயேசு வரும் நாள் மட்டும் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றார். ஆன்மீக அப்பமானது சாதாரண உணவிற்கு முன் அல்லது பின் உண்ணப்பட்டது. இப்படிப்பட்ட இடங்களில்தான் சாதாரண மக்கள் நல்ல விருந்து உண்ணும் வாய்ப்பு பெற்றனர். ஆக, நற்கருணைக் கொண்டாட்டத்தின் நோக்கம் ஆன்மீக உணவு என்றாலும், உடல்சார் உணவும் பகிர்வும் முக்கியம் என்பதை அறிவுறுத்துகின்ற பவுல், ஒன்று மற்றதை விலக்கிவிட முடியாது என்கிறார். ஆக, ஆன்மீக அக்கறையும், உடல்சார் அக்கறையும் இணைந்தே செல்வதே முழுமையான அக்கறை.
இன்றைய நற்செய்தி (காண். லூக் 9:11-17), இயேசு அப்பம் பலுகும் நிகழ்வை லூக்கா பதிவு செய்யும் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. எல்லா நற்செய்தியாளர்களும் ஏறக்குறைய ஒருமித்த கருத்தோடு எழுதப்படும் அறிகுறி இது ஒன்றுதான். தன்னுடைய போதனையைக் கேட்க வந்த மக்களுக்கு இயேசு உணவளிக்கின்றார். ஆக, ஆன்மாவுக்குப் பயன்படும் தன்னுடைய போதனையைப் போல, உடலுக்குப் பயன்படும் உணவும் முக்கியமானது என்பதை உணர்கின்ற இயேசு, அவர்களுக்குக் காட்டும் முழுமையான அக்கறையின் வெளிப்பாடே இந்த அற்புதம்.
இயேசு உணவளிக்கும் நிகழ்வு இரண்டு விடயங்களை அடிக்கோடிடுகிறது: ஒன்று, அப்பத்தை பலுகச் செய்யுமுன் இயேசு கடவுளுக்கு நன்றி கூறி செபிக்கிறார். உணவு என்பது கடவுளின் கொடை. அவரே, ஊட்டம் அனைத்தின் ஊற்று. இரண்டு, சீடர்களே உணவைப் பகிர்ந்து கொடுக்கிறார்கள். ஆக, கடவுளிடமிருந்து வருகின்ற உணவு மனிதர்கள் கைகளால் பகிரப்படுகின்றது. இங்கே, ஆன்மாவும் உடலும் ஒருசேர ஊட்டம் பெறுகிறது. தன்னுடைய திருத்தூதர்கள் பிற்காலத்தில் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் இயேசு இதன்வழியாக அவர்களுக்குக் கற்பிக்கிறார். ஆகையால்தான், திருத்தூதர் பணிகள் நூலில் கைம்பெண்கள் விருந்தில் கண்டுகொள்ளப்படாமல் இருந்தபோது திருத்தூதர்கள் உடனடியாகச் செயல்பட்டு திருத்தொண்டர்களை ஏற்படுத்துகின்றனர் (காண். திப 4:32-37).
ஆன்மாவின் அக்கறையும், உடலின் அக்கறையும் இணைந்தே செல்கின்றன என்பதை இன்றைய இறைவார்த்தை வழிபாடு இனிதே நமக்குக் கற்பிக்கிறது. ஆபிராமின் வெற்றி கடவுளிடமிருந்தே வருகிறது என்று அவருக்கு நினைவூட்டுகிற மெல்கிசெதேக்கு ஆபிராமின் உடல் தேவைக்கான அப்பத்தையும் திராட்சை இரசத்தையும் வழங்குகின்றார். ஆண்டவருடைய பாடுகளின் உயிர்ப்பின் நினைவுகூறுதலோடு, எளியவர்க்கு உணவளிப்பதும் நற்கருணையின் நோக்கம் எனக் கொரிந்து நகரத் திரு அவைக்கு வலியுறுத்துகிறார் பவுல் (காண். 1 கொரி 11:33). இயேசு தன்னுடைய இறையாட்சிப் போதனையைப் பற்றிக் கருத்தாய் இருந்தாலும், பசியால் வாடிய மக்களுக்கு உணவு தருகின்றார். ஆக, கடவுளின் அக்கறை ஆன்மாவையும், உடலையும் தழுவிய முழுமையான அக்கறையாக இருக்கிறது. இறைமனிதர்களான மெல்கிசெதேக்கு, பவுல், இயேசு போல, ஆன்மா-உடல் என்னும் முழுமையான அக்கறையைக் காட்டும் இஸ்ரயேல் அரசனையும், நம்மையும், “மெல்கிசெதேக்கின் முறைமைப்படி நீர் என்றென்றும் குருவே” என அழைக்கிறது இன்றைய பதிலுரைப் பாடல் (திபா 110).
இன்றைய திருநாள் நமக்கு வைக்கும் பாடங்கள் எவை?
1. தேவையை அறிதலும், அக்கறை காட்டுதலும்
பசியால் இருக்கும் ஒருவருக்கு உணவும், நாடோடியாய் இருக்கும் ஒருவருக்கு பாதுகாப்பும், தனிமையாய் இருக்கும் ஒருவருக்கு அன்பும், தாழ்வு மனப்பான்மையில் இருக்கும் ஒருவருக்கு தன்மதிப்பும் தேவையாக இருக்கிறது. ஒவ்வொரு தேவையும் நிறைவு செய்யப்பட வேண்டும். தேவைகளில் ஆன்மா வேறு, உடல் வேறு என்றல்ல; பசியால் இருக்கும் வயிற்றுக்கு உணவுதான் முக்கியமே தவிர, கடவுள் பற்றிய போதனை முக்கியமல்ல; ஆக, இன்று உடலையும், ஆன்மாவையும் நாம் ஒருசேர முக்கியமாக எடுத்து அக்கறை காட்ட வேண்டும். பல நேரங்களில் நம் ஆன்மாவைக் காக்கும் முயற்சியில் உடலை வதைக்கிறோம், வருத்துகிறோம். உடல் என்பது பாவத்தின் காரணி என்றும், பாவத்திற்கான வழி என்றும் கருதுகின்றோம். இது தவறு. உடல் இல்லாமல் நம் ஆன்மா இருக்க முடியாது. ஆன்மா இல்லாமல் உடல் உயிரற்றதாகிவிடும். இரண்டும் ஒன்று மற்றொன்றை நிரப்பக்கூடியது. ஆக, இரண்டும் சரியான விகிதத்தில் கவனிக்கப்பட வேண்டும். நற்கருணை நாம் பசிக்காக சாப்பிடவில்லை என்றாலும், அதில் உடலுக்கான உணவுதான் முதலில் இருக்கிறது. நற்கருணையை மட்டுமே உண்டு உயிர்வாழ்ந்த புனிதர்கள், மனிதர்கள் இந்த உலகில் இருந்திருக்கிறார்கள். ஆக, இன்று நான் என் உடல்மேல் எப்படி அக்கறை காட்டுகிறேன்? என்பது முதல் கேள்வி. அத்தோடு இணைந்து, எனக்கு அருகிருப்பவரின் உடலை நான் எப்படிப் பார்க்கிறேன்? உடலை வெறும் பொருளாகப் பார்த்து அதை அடைய விரும்புகிறேனா? அல்லது உடலை நான் தீண்டத்தகாதவர் என்ற சாதீய அடிப்படையில் பார்க்கிறேனா? அல்லது குழந்தையின் உடலைப் பார்த்துவிட்டு, அவர்கள் வளர்ச்சியற்றவர்கள் என்று அவர்களை நடத்துகிறேனா? அல்லது பசி, நோய், முதுமை என்று உடல்சார் துன்பம் கொண்டவர்களை நான் எப்படி அணுகுகிறேன்?
அக்கறை காட்டுதல் என்பது கொடுத்தல். கொடுத்தல் எப்போதும் திரும்பப் பெறப்படுவதில்லை. அப்பமும் இரசமும் கொடுத்த மெல்கிசெதேக்கு அதைத் திரும்பப் பெறுவதில்லை. பத்தில் ஒரு பகுதி கொடுத்த ஆபிராம் அதைத் திரும்பப் பெறுவதில்லை. இயேசுவின் உடலாகவும் இரத்தமாகவும் மாறிய அப்பமும் இரசமும் திரும்ப பழைய நிலைக்குச் செல்வதில்லை. கொடுத்தல் ஒரு வழிதான். தன்னைப் பின்பற்றிய மக்களுக்கு உணவளித்த இயேசு திரும்பப் பெறுவதில்லை. வழியில் காயம்பட்டுக் கிடந்தவனுக்கு செய்த உதவியை நல்ல சமாரியன் திரும்பப் பெறுவதில்லை. கொடுத்தல் எப்போதும் ஒருவழிப் பயணமாகவே இருக்க வேண்டும். அப்போதுதான் கொடுத்தலில் நிறைவு இருக்கும். நற்கருணை காட்டும் அக்கறை இதுதான். ஆன்மா-உடல் என்று முழுமையான அக்கறையை நான் எனக்கும் பிறருக்கும் கொடுக்கிறேனா?
2. வினைச்சொற்கள்
ஒரு குறிப்பிட்ட பலிபீடத்தில், ஒரு குறிப்பிட்ட ஆடை அணிந்து, ஒரு குறிப்பிட்ட வழிபாட்டு ஃபார்முலாவை, ஒரு குறிப்பிட்ட டிகிரி கோணத்தில் நின்று சொல்லிக் கைகளை விரித்தால், அப்பமும், இரசமும், இயேசுவின் உடலாகவும், இரத்தமாகவும் மாறிவிடும் என்ற மேஜிக் சிந்தனையை நாம் விட வேண்டும். இந்த மேஜிக் சிந்தனை பல நேரங்களில் அருள்பணியாளரையும், மக்களையும் இயேசுவிடமிருந்து அந்நியமாக்கிவிடுகிறது. அதாவது, அருள்பணியாளராகிய நான், உடல் அல்லது மனதளவில் என் வாழ்க்கை நிலைக்குத் தகுதியற்று இருந்தாலும், கைகளை விரித்து மந்திரம் சொன்னால் அப்பம் இயேசுவின் உடலாகிவிடும் என்றால், என்னில் மாற்றம் வருவது சாத்தியமா? இல்லை. நான் எப்படி இருந்தாலும், எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தாலும், மந்திரம் சொல்லி, கைகளை விரித்தால் எல்லாம் நடந்துவிடும் என்று நான் நினைப்பது தவறல்லவா? அதேபோலவே, இந்த அப்பம் பிட்குதலில் பங்கேற்கும் மக்களும் இதை ஒரு மேஜிக் நிகழ்வாகக் கருதக் கூடாது. அப்படி மேஜிக்காக நினைக்கும்போது, நாம் நம் வழிபாட்டு முறைமைகள் மற்றும் சடங்குகளுக்கு அடிமையாகிவிடுகிறோம். ஒன்பது நாள் நற்கருணை உட்கொண்டால் நான் கேட்டது நடக்கும் என்றெல்லாம் சொல்லத் தொடங்கிவிடுகின்றோம். நற்கருணை விடுதலையின் விருந்து. அதை நாம் ஒரு சடங்காகப் பார்த்து அந்தச் சடங்கிற்கு அடிமையாகிவிடக்கூடாது.
நற்கருணை வழிபாட்டை நடத்தும் அருள்நிலை இனியவரும், அதில் பங்கேற்கும் பொதுநிலை இனியவர்களும் இன்றைய நற்செய்தியில் நாம் காணும் ஐந்து வினைச்சொற்களை வாழ்வாக்குபவர்களாக இருக்க வேண்டும். அந்த ஐந்து சொற்கள் எவை? ‘எடுத்தல்,’ ‘அண்ணாந்து பார்த்தல்,’ ‘ஆசி கூறுதல்,’ ‘உடைத்தல்,’ ‘கொடுத்தல்’ இந்த ஐந்து சொற்களும், இயேசுவின் பிறப்பு, பணி, இறப்பு என்னும் மூன்று நிகழ்வுகளையும் உள்ளடக்கி நிற்கிறது. இயேசு மனுவுரு ‘எடுத்தார்’ ‘அண்ணாந்து பார்த்து’, தன் தந்தையோடு இணைந்திருந்தார் எந்நேரமும் ‘இறைவனைப் புகழ்ந்து அவரை ஆசீர்வதித்தார்’, தன் வாழ்வு முழுவதும் மற்றவர்களுக்காக தன்னை ‘உடைத்தார்’ இறுதியில், தன்னையே நமக்காகக் ‘கொடுத்தார்’.
இந்த ஐந்து சொற்களில் இன்று நமக்கு அதிகம் தேவைப்படுவது ‘அண்ணாந்து பார்ப்பது’ ஏன்?
இன்றைய நம் தொடுதிரைக் கலாச்சாரம் நம்மை ‘குனிந்தே பார்ப்பவர்களாக’ மாற்றிவிட்டது. எல்லாவற்றையும் சின்ன சின்ன செயலிகளைக் (ஆப்ஸ்) கொண்டு செய்து முடிக்க நமக்குக் கற்றுக்கொடுக்கிறது ஸ்மார்ட்ஃபோன். ‘உனக்கு யார் துணையும் வேண்டாம் - கடவுளும் வேண்டாம், மனிதர்களும் வேண்டாம். என்னையே பார்த்துக் கொண்டிரு. உனக்கு எல்லாம் நடக்கும்’ என்று சொல்கிறது தொடுதிரை என்னும் மாயக்கண்ணாடி. அந்த மாயக்கண்ணாடியில் நாம் பார்க்கும் ஒவ்வொரு நிமிடமும், குனிந்து பார்க்கும் ஒவ்வொரு நிமிடமும், நாம் கடவுளுக்கும், மற்றவர்களுக்கும், ஏன், நமக்கு நாமே அந்நியமாகிவிடுகின்றோம். இக்கண்ணாடியை விட்டுவிட வேண்டும் என நான் சொல்லவில்லை. அப்பப்போ அண்ணாந்து பார்க்க வேண்டும் என்றே நான் சொல்கிறேன்.
3. ‘யாரைப் போல பேசுகிறேன்?’
‘எல்லாரையும் போகச் சொல்லுங்க!’ ‘இருட்டாயிடுச்சு!’ ‘இது பாலை நிலம்!’ ‘பாம்பு, பல்லியெல்லாம் வந்துடும்!’ ‘இங்க சாப்பாடு ஒன்றுமில்லை!’ என்று இயேசுவுக்கு ரிமைண்டர் கொடுக்கின்றனர் சீடர்கள். ‘நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்’ என்று கட்டளை கொடுக்கின்றார் இயேசு.
இன்று நாம் இயேசுவைச் சந்தித்தபின், உட்கொண்டபின் அவரிடம் செபிக்கின்றோம். நம் செபங்கள் எல்லாம் ரிமைண்டர்களாகவே இருக்கின்றன. ‘எனக்கு அது இல்லை, இது இல்லை. அவன் சரியில்லை, இவள் சரியில்லை, க்ளைமேட் சரியில்லை, சாப்பாடு சரியில்லை, சுகர் கூடிடுச்சு, பிரஷர் கூடிடுச்சு, காசு இல்லை’ - இப்படிப்பட்ட ரிமைண்டர்களை நாம் அவருக்குக் கொடுக்கும்போது, அவர் சொல்லும் பதில் என்ன தெரியுமா? ‘நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்!’ நாம்தான் பார்க்க வேண்டும் நம் வாழ்க்கையை. ஆனால், அதில் என்ன அற்புதம் என்றால், நாம் நம் வாழ்வைப் பார்க்கத் தொடங்கிய உடனே அவர் அற்புதம் செய்யத் தொடங்குகிறார். ‘ஆண்டவரே, இங்க பாருங்க ஐந்து அப்பங்கள், இரண்டு மீன்கள் இருக்கு!’ என்று சொன்னவுடன், அவர் ‘எல்லாரையும் அமரச் சொல்லுங்கள்’ என அற்புதம் செய்கின்றார்.
ஆக, நற்கருணையை உண்டபின் நம் பதிலும் இப்படித்தான் இருக்க வேண்டும்: ‘ஆண்டவரே, இங்க பாருங்க சுகர் மாத்திரை இருக்கு!’ ‘ஆண்டவரே, இங்க பாருங்க பர்சில் கொஞ்சம் பணம் இருக்கு!’ ‘ஆண்டவரே, இங்க பாருங்க, கொஞ்சம் அரிசி இருக்கு!’ என நம்மிடம் இருப்பவற்றை அவர்முன் கொண்டுவர வேண்டும். இல்லாத ஒன்றிலிருந்து புதிதாக புறப்பட்டு வருவது அல்ல நற்கருணை. ஏற்கனவே இருக்கும் அப்பமும், இரசமும் உருமாறுவதே நற்கருணை. ஆக, நம்மிடம் இருக்கும் ஒன்றிலிருந்துதான் அவரின் அற்புதம் தொடங்கும்.
இறுதியாக,
உணவு - மனித வாழ்வின் கையறுநிலையைக் குறிக்கும் ஒரு குறியீடு. பசி, தாகம் என்னும் உணர்வுகள்தாம் நாம் மற்றவர்களைச் சார்ந்து நிற்கிறோம் என்பதை நமக்கு நினைவுபடுத்திக்கொண்டே இருக்கின்றன. இந்த இரண்டு உணர்வுகளின் நீட்சிகள்தாம் மற்ற எல்லா உணர்வுகளும். இந்த அடிப்படை உணர்வுகளை நிறைவு செய்யத் தேவையான உணவு என்ற குறியீட்டையே தன் நிலையான உடன்படிக்கையின் அடையாளமாகத் தெரிந்துகொள்கிறார் இயேசு. ஆன்மாவும் உடலும் இணைவது உணவில்தான்.
நமக்குப் பசி இருக்கும் வரை இந்த உணவின் தேவை இருக்கும்! கையை நீட்டி இவரை உணவாகக் கொள்ளுமுன், என் கையை நீட்டி மற்றவருக்கு என்னையே உணவாக நான் தந்தால், நானும் அவரின் திருவுடல், திருஇரத்தமே!