Namvazhvu
திருத்தந்தை பிரான்சிஸ் டிஜிட்டல் உலகில் திருஅவையின் வழிமுறைகள்
Friday, 24 Jun 2022 07:33 am
Namvazhvu

Namvazhvu

டிஜிட்டல் உலகம் திருஅவைக்கு முன்வைக்கும் பரிந்துரைகளும் தொழில்நுட்பங்களும் குறித்து விவரிக்கும் புதிய நூல் ஒன்றிற்கு திருத்தந்தை பிரான்சிஸ் முன்னுரை எழுதியுள்ளார்.

டிஜிட்டல் உலகில் திருஅவை குறித்து ஃபேபியோ போல்செட்டா என்பவரால் எழுதப்பட்டுள்ள நூலுக்கு முன்னுரை எழுதியுள்ள திருத்தந்தை, இன்றைய கோவிட்-19 பெருந்தொற்றுத் துயர்களிலிருந்து நம்மால் வெற்றிகரமாக வெளியேற முடியும் என்பதையும், தொழில்நுட்ப கருவிகளும், சமூக வலைத்தளங்களும் இதில் எவ்வளவு தூரம் பயனுடையதாக இருந்தன என்பதையும், அனுபவ ரீதியாக கண்டுள்ளோம் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

டிஜிட்டல் உலகில் செயல்பட்டுவரும் திருஅவை தன் அனுபவங்களை எவ்வகையில் சமூக வலைத்தளங்கள் வழியாக பகிரமுடியும் மற்றும் எத்தகைய தொழில்நுட்ப கருவிகளைப் பயன்படுத்த முடியும் என்பது குறித்த பரிந்துரைகளை முன்வைத்துள்ள இந்நூல், கத்தோலிக்க இணையதள வடிவமைப்பாளர்கள் குழுவினரின் அனுபவங்களைக்கொண்டு எழுதப்பட்டுள்ளது.

கோவிட் பெருந்தொற்றுக் காலங்களில் ஒருவரையொருவர் பார்க்க முடியாமலும், திருப்பலியில் நேரடியாக பங்கெடுக்க முடியாமலும் இருந்த காலத்தில், சமூக வலைத்தளங்கள் வழியாக நிகழ்நிலை, அதாவது ஆன்லைன் சந்திப்புக்களை நடத்த முடிந்தது, திருப்பலியை ஒளிபரப்ப முடிந்தது என்பதைக் குறித்து இந்த முன்னுரையில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சமுதாய உறவுகளை உயிரோட்டமாக வைத்திருப்பதில் இணையதளம் ஆற்றியுள்ள பங்களிப்பு குறித்துப் பாராட்டியுள்ளார்

.

இணையதளம் வழியாக கூட்டங்களை நடத்தி உறவுகளை உயிர்த்துடிப்புடையதாக வைத்திருந்தது, கொரோனா பெருந்தொற்று அவசர காலத்திற்குப் பின்னரும் தொடரும் என்ற நம்பிக்கையை திருத்தந்தை அந்நூலின் முன்னுரையில் வெளியிட்டுள்ளார்.

கத்தோலிக்க இணையதள வடிவமைப்பாளர்களுக்கு தன் நன்றியை வெளியிட்டுள்ள திருத்தந்தை, அவர்கள் தொடர்ந்து பங்குத்தள இளையோருக்கு பயிற்சி வழங்கியும், தொழில்நுட்ப ஆதரவு வழங்கியும் திருஅவைக்கு உதவவேண்டும் என கேட்டுள்ளார்.

முகம் முகமாகச் சந்தித்து உரையாடுவதற்கு இணையாக, இணையதளம் வழியான சந்திப்புக்களைக் குறிப்பிட முடியாது என்பதையும் சுட்டிக்காட்டும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கோவிட் காலத்தின்போது மக்கள் திரை வழியாக நேரடியாகப் பார்த்து செவிமடுக்க முடிந்ததை பாராட்டாமல் இருக்க முடியாது என மேலும் குறிப்பிட்டுள்ளார்.