இன்று உலகில் ஏறத்தாழ 35 கோடி கைம்பெண்கள் உள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. 2011 ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் கைம்பெண்களின் எண்ணிக்கை 4 கோடியே 32 இலட்சத்து 61 ஆயிரத்து 278 ஆகும். அதாவது இது நாட்டின் மொத்த பெண்களின் தொகையில் 7.37 விழுக்காடாகும். இது உலகிலேயே அதிகம் உள்ள கைம்பெண்களின் எண்ணிக்கையாகும். இலங்கை அரசின் புள்ளிவிவரப்படி, தமிழர் பெருமளவில் வாழ்கின்ற வடகிழக்கு மாநிலங்களில் 89,000 தமிழ் கைம்பெண்கள் இருக்கின்றனர். இவர்கள் வாழ்வாதாரத்துக்காக வளைகுடா நாடுகளுக்குப் பணிப்பெண்களாகச் சென்று கொத்தடிமையாகும் துயரத்தையும் எதிர்கொள்கின்றனர் என்று 2021 ஆம் ஆண்டு ஏப்ரலில் வெளியான ஒரு செய்தி கூறுகிறது. இலங்கையிலுள்ள தமிழ் கைம்பெண்கள், உள்நாட்டுப் போரில் காணாமல்போன துணைவர்கள் குறித்த விவரம் தெரிவிக்கப்படவேண்டும் என்று தொடர்ந்து அரசை விண்ணப்பித்து வருகின்றனர். உக்ரைனில் போர்ப் பகுதிகளில் ஏறத்தாழ 80 விழுக்காட்டுப் பெண்கள் தங்கள் கணவர்களை இழந்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது. "பொதுவாக கைம்பெண்கள், நீண்டகாலமாக அடிப்படை உரிமைகள் மற்றும் மாண்பை இழந்து, சமுதாயங்களின் ஆதரவின்றி கைவிடப்பட்ட அநாதைகளாய் வாழ்ந்து வருகின்றனர். ஆயுதம் ஏந்திய மோதல்கள், புலம்பெயர்வு, கோவிட்-19 பெருந்தொற்று போன்றவற்றால் கைம்பெண்களின் எண்ணிக்கை புதிதாக அதிகரித்துள்ளது. கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை உலக அளவில் பல குடும்பங்களைச் சிதைத்திருக்கிறது. முப்பதுகளிலும் நாற்பதுகளிலும் உள்ள பல இளம் பெண்களின் வாழ்க்கைத்துணைகளை இந்த பெருந்தொற்று பறித்துக்கொண்டுள்ளது" என்று பெருந்தொற்றில் கணவரை இழந்த 32 வயதான ரேணு என்பவர் BBC ஊடகத்திடம் இவ்வாறு கூறியிருக்கிறார்.
உலக கைம்பெண்கள் நாள்
எனவே கைம்பெண்களின் நிலை குறித்த விழிப்புணர்வை உருவாக்கி, அவர்களின் உரிமைகளை மீட்டெடுத்து, அவர்கள் மாண்புடன் வாழ வழியமைக்கும் நோக்கத்தில், ஐ.நா. நிறுவனம் 2010 ஆம் ஆண்டில் உலக கைம்பெண்கள் நாளை உருவாக்கி, ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 23 ஆம் தேதி அந்நாளைக் கடைப்பிடித்து வருகிறது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூன் 19 ஆம் தேதி, ஞாயிறு நண்பகலில் வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு ஆற்றிய மூவேளை செப உரைக்குப்பின், அம்மக்களிடம், போரினால் துன்புறும் மக்களுக்கு என்ன செய்கின்றீர்கள் என உங்களையே கேளுங்கள் என்று கூறினார்.