Namvazhvu
குடந்தை ஞானி இந்தியாவில் குறையும் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை
Friday, 24 Jun 2022 13:31 pm
Namvazhvu

Namvazhvu

இந்தியாவில் உள்ள கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஏனெனில் கிறிஸ்துவ  சமூகத்தில் கருவுறுதல் விகிதம் சரிந்து வருவதே இதற்கு காரணம் என்று ஒன்றிய அரசு பதிவு செய்ததையடுத்து, கிறிஸ்தவர்கள் தங்கள் எண்ணிக்கையை குறித்து கவலையடைந்துள்ளனர்.

சமீபத்திய தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு (NFHS) அறிக்கையின்படி, கிறிஸ்தவர்களிடையே மொத்த கருவுறுதல் விகிதம் (TFR) 1992-93 இல் 2.87 சதவீதத்திலிருந்து 2019-21 இல் 1.88 சதவீதமாகக் குறைந்துள்ளது. 2011 தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 1.3 பில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகையில் 2.3 சதவீதம் கிறிஸ்தவர்கள் உள்ளனர். ஆனால் அவர்களின் மக்கள்தொகை மேலும் குறையும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்.

 இந்திய கத்தோலிக்க ஆயர்கள் மாநாட்டின் (CCBI) குடும்ப ஆணையத்தின் தலைவர் பேராயர் கல்லுபுரா, "முற்காலத்தில் கூட்டு குடும்பங்களாக இணைந்து பெரிய குடும்பங்களாக வாழ்வது வழக்கமாக இருந்தது. தற்போது மெத்த படித்தவர்கள் கூட சிறிய குடும்பங்களைத் தேர்ந்தெடுக்கும் போக்கை பொதுவாகக் காண்கிறோம். பல மறைமாவட்டங்கள் பெரிய குடும்பங்களை மேம்படுத்த, தங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்கின்றன. மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட பெற்றோருக்கு இலவச கல்வி மற்றும் பிற உதவிகளை வழங்குகின்றன. ஆனால் உயர்ந்த வாழ்க்கைச் செலவு மற்றும் முறையான வேலைவாய்ப்பு இல்லாததால் குடும்பங்கள் தங்கள் குழந்தைகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளன," என்று UCA செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

"இது நமது திருஅவையின் மிகப்பெரிய கவலைக்குரிய விஷயம். பல தாய்மார்கள் குழந்தைகளைப் பெற விரும்புவதில்லை, இது எதிர்காலத்தில் சிக்கல்களுக்கு வழிவகுக்கும். பலர் ஒரு குழந்தையுடன் நிறுத்திக்கொள்கிறார்கள். நவீனமயமாக்கலும் நமது மக்கள்தொகை வீழ்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. பல பெண்கள் குழந்தைகளைப் பெறுவதை விட, குறிப்பாக நகர்ப்புறங்களில் தங்கள் வேலைக்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள். கிராமப்புறங்களிலும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. முன்பெல்லாம் கிராமப்புறங்களில் ஒரு சராசரி குடும்பம் குறைந்தபட்சம் ஐந்து குழந்தைகளையாவது பெற்றிருந்தாலும் இன்று அது இரண்டு அல்லது மூன்றாகக் குறைந்துவிட்டது.  மேலும் மேற்கத்திய மாவட்டங்களுக்கு குடிபெயர்ந்தவர்கள் திரும்பி வருவதில்லை. இது நமது மக்கள் தொகை குறைவதற்கு மற்றொரு காரணம்," என்று CCBI யின் குடும்ப ஆணையத்தின் நிர்வாக செயலாளர் தந்தை மில்டன் கேப்ரியல் கோன்சால்வ்ஸ் UCA செய்தி நிறுவனத்திடம் கூறினார்.