Namvazhvu
அருள்பணி. P. ஜான் பால் ஆண்டின் பொதுக்காலம் 15 ஆம் ஞாயிறு இச 30:10-14, கொலோ 1:15-20, லூக் 10:25-37
Thursday, 30 Jun 2022 12:28 pm
Namvazhvu

Namvazhvu

திருப்பலி முன்னுரை

இன்று நாம் பொதுக்காலத்தின் 15 ஆம் ஞாயிறு வழிபாட்டை சிறப்பிக்கின்றோம். எனக்கு அடுத்திருப்பவர் யார்? என்று திருச்சட்ட அறிஞர்கள் ஆண்டவர் இயேசுவிடம் எழுப்பிய வினாவிற்கு, ஆண்டவர் இயேசு நல்ல சமாரியர் உவமையைச் சொல்லி, பிறர் மீது இரக்கம் காட்டுபவரே எனக்கு அடுத்திருப்பவர் என்ற விடையையும், அந்த திருச்சட்ட அறிஞரிடமிருந்தே பெறுகிறார். யூதர்களைப் பொறுத்தவரை தனக்கு அயலான் என்பவன் அல்லது தனக்கு அடுத்திருப்பவன் என்பவன், மற்றொரு யூதன்தான் என்பதை, அவர்கள் சிறுபிள்ளைகளாக இருக்கும்பொழுதே, அவர்களுக்கு சொல்லி வளர்ப்பது வழக்கம். எனவே, யூதர் அன்றி வேறு எவரையும் அன்பு செய்யக் கூடாது, வேறு எவருக்கும் உதவி செய்யக்கூடாது, வேறு எவர் மீதும் இரக்கம் காட்டக்கூடாது என்பது இவர்களின் ஆழ்மனதில் புகுத்தப்பட்ட பாடம். இந்த பழைய பாடத்தை ஒழித்து, ஒரு புதிய பாடத்தை ஆண்டவர் இயேசு இந்த யூதர்களுக்கு புகட்டுகிறார். எழுத்து வடிவில் இருக்கும் சட்டத்தை மனப்பாடம் செய்பவர் அயலான் அல்ல; மாறாக, அதற்கு வடிவம் தருபவரே அயலான் என்னும் கருத்தை நல்ல சமாரியர் உவமை மூலமாக கற்பிக்கின்றார். ஆண்டவரின் அன்புக்கட்டளைகளை நன்கு பயின்ற யூத குருவும், யூத லேவியும் விலகிச்செல்ல, அந்நியராக கருதப்பட்ட சமாரியர் ஆண்டவரின் கட்டளைகளுக்கு உருவம் தந்து, அயலானாக மாறுகிறார். எவர் ஒருவர் ஆண்டவரின் வார்த்தைக்கு உருகொடுக்கிறாரோ, எவர் ஒருவர் ஆண்டவரின் விருப்பத்தை நிறைவேற்றுகிறாரோ அவரே ஆண்டவர் விரும்பும் அயலான் என்ற எண்ணத்தோடு இத்திருப்பலியில் பக்தியோடு பங்கு பெறுவோம்.

முதல் வாசக முன்னுரை

ஆண்டவரின் குரலுக்குச் செவி கொடுங்கள், அவரது கட்டளைகளையும், நியமங்களையும் கடைபிடியுங்கள், அவரது வார்த்தையை நிறைவேற்றுங்கள். ஏனெனில், அது உமது வாயின் அருகே, இதயத்தின் அருகே இருக்கிறது என்றுரைக்கும் இம்முதல் வாசகத்தைக் கேட்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

படைக்கப்பட்ட அனைத்திற்கும் ஆண்டவர் இயேசுவே தலைப்பேறு. ஆண்டவர் இயேசு வழியாக விண்ணில் உள்ளவையும், மண்ணில் உள்ளவையும் படைக்கப்பட்டு, அவர் வழியாகவே அனைத்தும் தந்தைக் கடவுளோடு இணைக்கப்பட்டன என்று கூறும் இவ்விரண்டாம் வாசகத்தைக் கேட்போம்.

மன்றாட்டுகள்

1. எங்கள் அன்புத் தந்தையே! உமது திரு அவையை வழிநடத்தும் திருப்பணியாளர்கள், உம் மந்தைகளை முழு உள்ளத்தோடும், முழு ஆன்மாவோடும் அன்பு செய்து, உம்மை நோக்கி அழைத்து வந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. எங்கள் விண்ணகத் தந்தையே! நாட்டை ஆளும் தலைவர்கள், துன்பத் துயரங்களில் வாழும் நாட்டு மக்களைக் கண்டு விலகிச் செல்லாமல், அவர்களுக்கு வேண்டிய அனைத்தையும் தந்து, நல்லாட்சி புரிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. வார்த்தையால் அனைத்தையும் படைத்தவரே! உமது வார்த்தை எங்கள் இதயத்தில், எங்கள் வாயில் இருக்கிறது என்பதை உணர்ந்து, அதற்கு செயல் வடிவம் தந்து, உமக்கு உகந்த மக்களாக நாங்கள் வாழ்ந்திடவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. நலம் தருபவரே! உடல், உள்ள நோய்களால் அவதியுறும் மக்களை கண்டு, பாராமுகமாய் இராமல், அவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்திடும் நல்ல சமாரியர்களாக நாங்கள் மாறிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. காக்கின்ற கடவுளே! எம் நாட்டையும், எங்களையும் காப்பதற்காக, தங்கள் குடும்பங்களையும், குழந்தைகளையும் மறந்து, எமது நாட்டின் எல்லையோரங்களில், பனியிலும், கடுங்குளிரிலும் பணிபுரியும் ராணுவ வீரர்களுக்கு, நீர் உமது காவல் தூதர்களை துணையாய் தந்து, அவர்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.