Namvazhvu
பத்தாவது உலக குடும்பங்கள் மாநாட்டின் நிறைவாக திருத்தந்தை குடும்பங்களுக்கு விடுத்த மறைப்பணி ஆணை
Tuesday, 05 Jul 2022 09:33 am
Namvazhvu

Namvazhvu

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பத்தாவது உலக குடும்பங்கள் மாநாட்டின் நிறைவாக, குடும்பத்தில் மகிழ்ச்சியோடு வாழ்வதன் அழகை அறிவிக்குமாறு, அனைத்துக் குடும்பங்களுக்கும் அழைப்புவிடுத்துள்ளார். ஜூன் 25 ஆம் தேதி, சனிக்கிழமை வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில், பத்தாவது உலக குடும்பங்கள் மாநாட்டின் பிரதிநிதிகளுக்கு கர்தினால் கெவின் பெரல் அவர்கள் நிறைவேற்றிய திருப்பலியில், திருத்தந்தை பிரான்சிஸ் பங்குகொண்டு மறையுரையாற்றினார்.

இத்திருப்பலியின் இறுதியில், அதில் பங்குகொண்ட குடும்பங்களுக்கு, திருத்தந்தை விடுத்த மறைப்பணி ஆணையும் விநியோகிக்கப்பட்டது. இது, ஜூன் 26 ஆம் தேதி, ஞாயிறு மூவேளை செப உரையின்போதும் விநியோகிக்கப்பட்டது. “மகிழ்ச்சியோடு குடும்பத்தில் வாழ்வதன் அழகை அறிவியுங்கள், கிறிஸ்தவத் திருமணத்தின் அருளை சிறாருக்கும், இளையோருக்கும் அறிவியுங்கள்” என்பதே திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கத்தோலிக்க குடும்பங்களுக்கு விடுத்த கட்டளையாகும். குடும்பத்தை மகிழ்ச்சியோடு நடத்துவது குறித்து அறிந்தவர்களால், இளம் குடும்பங்கள் வழிநடத்தப்படவேண்டும் மற்றும் நன்றாக உருவாக்கப்பட்ட குடும்பங்கள் மற்றவரின் பயணத்தில் உடனிருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை, பாதையிழந்த குடும்பங்கள், மனக்கவலையால் ஆட்கொள்ளப்படாமல், கடவுள் அவர்கள் மீது வைத்திருக்கும் அன்பில் நம்பிக்கை வைக்குமாறும், தினமும் தூய ஆவியாரின் உதவியை இறைஞ்சுமாறும் ஊக்கப்படுத்தினார்.

வாழ்க்கையில் எதுவுமே இல்லாதவர்களுக்கு நம்பிக்கையைக் கொடுங்கள். அவர்களோடு உறவுகளை உருவாக்கி, அன்பைப் பொழிந்து, உயிருள்ள கிறிஸ்துவின் அடையாளங்களாக இருங்கள். ஆண்டவர் கேட்பதற்கு அச்சமின்றி தாராள மனதோடு பதிலளியுங்கள் என்று திருத்தந்தை பிரான்சிஸ் கத்தோலிக்க குடும்பங்களுக்கு கூறியுள்ளார்.

கிறிஸ்துவுக்குத் திறந்தமனதாய் இருந்து, அமைதியான இறைவேண்டலில் அவரது குரலைக் கேளுங்கள். தனிமையில் வாடுவோர், புலம்பெயர்ந்தோர், கைவிடப்பட்டோருடன் உடன்பயணியுங்கள் என்று குடும்பங்களுக்கு அழைப்புவிடுத்த திருத்தந்தை, உடன்பிறந்த உணர்வு அதிகமாகவுள்ள உலகின் விதையாக இருங்கள், பெரிய இதயங்களைக்கொண்ட குடும்பங்களாக, திருஅவையின் வரவேற்பு முகமாக இருங்கள் என்றும் கூறினார்.

இத்திருப்பலியின் இறுதியில், அடுத்து உலக குடும்பங்கள் சந்திப்பு, குடும்பங்களின் யூபிலியாக இருக்கும். அது, 2025 ஆம் ஆண்டில் உரோம் நகரில் யூபிலி ஆண்டு நிகழ்வில் நடைபெறும். 11வது உலக குடும்பங்கள் மாநாடு, 2028 ஆம் ஆண்டில் நடைபெறும் என்று, பொதுநிலையினர், குடும்பம், மற்றும், வாழ்வு திருப்பீட அவையின் தலைவரான கர்தினால் கெவின் பெரல் அவர்கள் அறிவித்தார்.