Namvazhvu
ஆண்டின் பொதுக்காலம் 17 ஆம் ஞாயிறு தொநூ 18:20-32, கொலோ 2:12-14, லூக் 11:1-13
Thursday, 14 Jul 2022 10:08 am
Namvazhvu

Namvazhvu

விரல் தொடும் குரல்!

செபம் அல்லது இறைவேண்டல். இந்த வார்த்தைகளைக் கேட்டவுடன் என்னில் நிறையக் கேள்விகள் எழுவது உண்டு: எதற்காக நாம் செபிக்க வேண்டும்? கடவுள் எல்லாவற்றையும் அறிந்தவர் என்றால், அவர் நம்மைப் பாதுகாப்பவர் என்றால், அந்த வேலையை அவர் சரியாகச் செய்யலாமே! நாம் தினமும் அவரிடம், ‘என்னைக் காப்பாற்று!’ என்று, நினைவுபடுத்திக்கொண்டே இருக்க வேண்டுமா? கடவுள் தம்மிடம் செபிப்பவர்களைப் பாதுகாக்கிறார், செபிக்காதவர்களை அழிக்கின்றார் என்றால், அவரின் கடவுள் குணம் நம் செபத்தால் வரையறை செய்யப்பட்டதா? தம்மைப் புகழாதவர்களை அவர் பழிவாங்குகின்றார் என்றால், மனிதரைப் போலத்தானே அவரும் செயல்படுகிறார். இல்லையா? நம் வாழ்வில் நடக்கும் எல்லாம் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுவிட்டன. அப்படி இருக்க நம் செபம் நம் வாழ்வின் போக்கை எப்படி மாற்ற முடியும்? செபிப்பது என்றால், எப்படி செபிப்பது? திரு அவை வரையறுத்துக் கொடுத்த செபங்கள் வழியாகவா? அல்லது நானாக என் மனதின் ஆழத்திலிருந்தா? அமைதியாக செபிப்பது சரியா? சத்தம் போட்டு செபிப்பது சரியா? கடவுள் எல்லா இடத்திலும் இருக்கிறார் என்றால், நான் ஏன் ஆலயத்திற்கு வந்து செபிக்க வேண்டும்? என் வீட்டிலும், நான் பயணம் செய்யுமிடத்திலும், பணி செய்யுமிடத்திலும் இயல்பாக செய்யும் செபத்தை அவர் கேட்க மாட்டாரா?

நிற்க...

விடைகளை விட கேள்விகளே நிறைய இருப்பது போலத் தோன்றினாலும், இன்றைய இறைவார்த்தை வழிபாடு சொல்லும் சுருக்கமான விடைகள் இரண்டு அவை:

ஒன்று : இறைவேண்டல் அல்லது செபம் என்பது ஒரு உறவு. இறைவனைத் தந்தையாகவும், நம்மையே மகனாகவும், மகளாகவும் பாவித்து ஒருவர் மற்றவரோடு பேசிக்கொள்ளும் உரையாடல் தளமே செபம்.

இரண்டு : சிரிப்பு, சிந்தனை போன்ற உணர்வுகள் எப்படி மனித இனத்திற்கு மட்டுமே உரித்தானதோ அப்படியே செபமும், மனித இனத்திற்கு மட்டுமே உரித்தானது. கோழிகள் செபம் செய்வதாகவோ, நாய்க்குட்டிகள் முழங்கால்படியிட்டு இறைவேண்டல் செய்வதாகவோ நாம் பார்த்ததில்லை. ஏனெனில், அவை தங்களின் வரையறையை (லிமிட்) அனுபவிக்க முடியாது. நம்மால் மட்டுமே நம் வரையறையை அனுபவிக்க முடியும். நம்மால் நம் வரையறையை அனுபவிப்பது மட்டுமல்லாமல்; அந்த வரையறையைக் கடந்து சிந்திக்கவும் முடியும். எடுத்துக்காட்டாக, நான் ஒருவரிடம் ரூ.1 லட்சம் கடன் பட்டிருக்கிறேன் என வைத்துக்கொள்வோம். அதை திருப்பிச் செலுத்த இன்றே கடைசி நாள். ஆனால், என்னிடம் இன்று வெறும் 10 ரூபாய் மட்டுமே இருக்கின்றது. இந்த 10 ரூபாய்க்கு மேல் என்னால் ஒரு ரூபாய் கூட இன்று புரட்ட முடியாது என்பது, என் வரையறை அனுபவம். அதே வேளையில், இன்று நான் கடனைத் திரும்ப செலுத்தாததால் நாளை நான் சிறைக்கு அனுப்பப்படுவேன் என்று, நாளை நடப்பதை இன்றே என்னால் சிந்திக்க முடியும். என் வரையறையைக் கடந்து சிந்திக்க என்னால் முடியும்போது, நான் என்னை அறியாமாலே என் மனத்தை இறைவனிடம் எழுப்புகின்றேன். இதுவே இறைவேண்டல்.

மம்ரே என்ற இடத்தின் தேவதாரு மரங்கள் அருகே ஆபிரகாமை மூன்று மனிதர்கள் சந்தித்ததை கடந்த ஞாயிறன்று வாசிக்கக் கேட்டோம். அந்த நிகழ்வின் தொடர்ச்சியே இன்றைய முதல் வாசகம் (காண். தொநூ 18:20-32). ஆபிரகாமைச் சந்தித்த மனிதர்கள் நேராக சோதோம், கொமோரா நகரங்கள் நோக்கிச் செல்கின்றனர். அந்த இரண்டு நகரங்களிலும் பாவம் குறிப்பாக, பாலியல் பிறழ்வு பெருகியிருந்ததால், அதை அழிக்கப் புறப்பட்டுச் செல்கின்றனர் இந்த இறைமனிதர்கள். அவர்கள் அவ்விதம் போய்க்கொண்டிருக்க, சோதோம்-கொமோரா அழிவைப் பற்றி கடவுள் ஆபிரகாமுக்கு வெளிப்படுத்துவதும், சோதோம்-கொமோரா நகரங்களின் நீதிமான்களுக்காக ஆபிரகாம் இறைவனிடம் பரிந்து பேசுவதுமே இன்றைய முதல் வாசகம்.

மூன்று தூதர்கள் ஆபிரகாமின் இல்லத்திற்கு வந்திருந்தாலும் (காண். தொநூ 18:2), சோதோம்-கொமோரா நகரங்களை நோக்கிச் சென்ற தூதர்கள் இரண்டுபேர் (காண். தொநூ 19:1) மட்டுமே. மூன்றாம் நபராகிய கடவுளே அல்லது அவரின் தூதரே இப்போது ஆபிராமுடன் உரையாடுபவர். ஆபிரகாம் நீதிமானாகவும், நேர்மையாளராகவும் இருந்ததால், கடவுள் தாம் செய்யவிருப்பதை அவருக்கு வெளிப்படுத்துகின்றார் (காண். தொநூ 18:19). ஆபிரகாம் இறைவன் திருமுன் நின்று கொண்டிருப்பது அவரின் பரிந்து பேசும் செயலையும், இறைவேண்டலையும் அடையாளப்படுத்துகிறது.

“தீயவரோடு நீதிமான்களையும் சேர்த்து அழித்துவிடுவீரோ?” என்று, தொடங்குகிறது ஆபிரகாமின் உரையாடல். இந்தக் கேள்வியின் பின்புலத்தில் இருப்பது முதல் ஏற்பாட்டு தோரா நூல்களின் இறையியல். ‘தீயவர்கள் அழிவார்கள். நீதிமான்கள் வாழ்வார்கள்’ என்றும் ‘தீயவர்களை அழிக்கும் கடவுள் நீதிமான்களை அழிக்க மாட்டார்’ என்பதே அந்த இறையியல். ஆக, பாவம் செய்தால் அழிவு. நீதியாக நடந்தால் வாழ்வு. இந்தப் பின்புலத்தில் 50 நீதிமான்கள், 45 நீதிமான்கள், 40 நீதிமான்கள், 30 நீதிமான்கள், 20 நீதிமான்கள், 10 நீதிமான்கள் இருந்தாலும் அந்நகரங்களை அழித்து விடுவீரோ என்று பேரம் பேசுகின்றார் ஆபிரகாம். ‘10 நீதிமான்கள் இருந்தால்கூட அந்நகரங்களை அழிக்க மாட்டேன்’ என வாக்குறுதி தருகின்றார் இறைவன்.

ஆபிரகாமின் இந்த உரையாடல் அல்லது செபம், அவருக்கும் இறைவனுக்கும் இருந்த உறவின் நெருக்கத்தைச் சுட்டிக் காட்டுகின்றது. ஆனால், ஆபிரகாமின் செபம் கடவுளின் மனத்தை மாற்றவில்லை. நகரங்களை அழிப்பதற்காக தூதர்கள் புறப்பட்டுச் செல்கின்றனர். 10 நீதிமான்கள் கூட அந்நகரங்களில் இல்லை என்பதைக் காட்டவே இந்நிகழ்வு எழுதப்பட்டது போல இருக்கிறது.

ஆபிரகாம் கடவுளின் முன்னிலையில் நின்று, இறைவனிடம் பரிந்து பேசினாலும், கடவுளுக்கும் அவருக்கும் இடையே ஒரு திரை இருக்கின்றது. இந்தத் திரை இயேசுவின் இறப்பு மற்றும் உயிர்ப்பின் வழியாக அகற்றப்பட்டுவிட்டது என்கிறது, இன்றைய இரண்டாம் வாசகம் (காண். கொலோ 2:12-14). ‘கிறிஸ்துவால் வரும் நிறைவாழ்வு’ பற்றி கொலோசை நகரத் திரு அவைக்கு அறிவுறுத்தும் பவுல், திருமுழுக்கின் வழியாக கிறிஸ்துவோடு இறந்தவர்கள், அவரோடு உயிர்பெற்று எழுந்துள்ளார்கள் எனவும் சொல்லிவிட்டு, ‘இறப்பு’, ‘கடன் பத்திரம்’ என்ற இரண்டு உருவகங்கள் வழியாக, இறைவனுக்கும், மனிதருக்கும் நடுவே இருக்கும் திரை அகற்றப்பட்டதை விளக்குகின்றார்.

இறப்பு என்பது ஒரு திரை. ஏனெனில், அந்தத் திரைக்குப் பின் என்ன நடக்கும் என்பது நமக்குத் தெரியாது. ஆனால், கிறிஸ்துவை அறிந்தவர்கள் அவரோடு இறப்பதால், அவர் உயிர்ப்பைக் கண்டுகொண்டதுபோல இவர்களும் கண்டுகொள்வார்கள். அதுபோல, கடன் பத்திரம் என்பது ஒப்பந்த விதிகள் கொண்டது. ஒப்பந்தம் கடவுள்-மனித உறவுக்கு நடுவே திரையாக இருக்கின்றது. கிறிஸ்து நம் குற்றங்களை மன்னித்ததால் அந்த கடன் பத்திரம் கிழிக்கப்பட்டு, திரை அகற்றப்படுகிறது.

இவ்வாறாக, முதல் ஏற்பாட்டில் இறைவனுக்கும், மனிதருக்குமிடையே நின்ற திரை கிறிஸ்து வழியாக கிழிக்கப்பட்டதால்தான், நம்மால் கடவுளை ‘அப்பா, தந்தையே’ என அழைக்க முடிகிறது.

‘தந்தையே’ எனக் கடவுளை அழைத்து, அவரோடு உரையாடுதல் பற்றியும், அந்த உரையாடலுக்குத் தேவையான காரணிகள் பற்றியும் சொல்கிறது இன்றைய நற்செய்தி வாசகம் (காண். லூக் 11:1-13). இன்றைய நற்செய்தி வாசகம் மூன்று பிரிவுகளாக உள்ளது: (அ) ஆண்டவர் கற்றுக்கொடுத்த செபம்: தந்தையே உமது பெயர் ... (காண். லூக் 11:2-4), (ஆ) வெட்கமில்லாத நண்பர் பற்றிய உவமை (காண். லூக் 11:5-8) மற்றும் (இ) கடவுள் நம் செபங்களைக் கேட்கிறார் என்ற வாக்குறுதி (காண். லூக் 11:9-13).

இயேசு தன் சீடர்களுக்கு செபிக்கக் கற்றுக் கொடுக்கும் நிகழ்வு மத்தேயு நற்செய்தியில் மலைப்பொழிவின் ஒரு பகுதியாக (மத் 6:9-13) இருக்கிறது. ஆனால், லூக்காவில் அப்படி இல்லை. இயேசுவை ‘இறைவனிடம் வேண்டிக்கொண்டிருப்பவராக’ (11:1) முன்வைத்து, அந்த இறைவேண்டலின் தொடர்ச்சியாக அவர் தன் சீடர்களுக்குச் செபிக்கக் கற்றுக்கொடுப்பதாக எழுதுகின்றார் லூக்கா. ‘எங்கள்,’ ‘விண்ணகத்திலிருக்கும்,’ ‘உம் திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக,’ ‘எங்களைத் தீமையிலிருந்து விடுவித்தருளும்’ என்னும் சொல்லாடல்கள் லூக்கா எழுதும் செபத்தில் இல்லை. இரண்டு புகழ்ச்சி (‘தூயது உம் பெயர்,’ ‘உமது ஆட்சி வருக,’ மூன்று விண்ணப்பம் (‘உணவு,’ ‘மன்னிப்பு,’ ‘விடுதலை’) என இரண்டு பகுதிகளாக அமைந்திருக்கிறது லூக்காவின் செபம். இறைவனின் மேன்மையை அறிக்கையிடுவதும், அவரிடம் நம் உடல், உள்ள நலனுக்காக வேண்டுவதாகவும் இருக்கின்றது இச் செபம்.

செபத்தைக் கற்றுக்கொடுத்த இயேசு, தொடர்ந்து ஓர் உவமையைச் சொல்கின்றார். இரண்டு நண்பர்கள். ஒரு நண்பருக்கு அப்பம் தேவையாக இருக்கின்றது. அதைக் கடனாகப் பெறுவதற்காக மற்ற நண்பரின் வீட்டுக் கதவைத் தட்டுகிறார். முதலில் எழ மறுக்கும் அந்நண்பர், இந்நண்பரின் விடாத தட்டுதலால், ‘நட்பின் பொருட்டு அல்ல; மாறாக, தொல்லையின் பொருட்டு அப்பங்களைக் கடன் கொடுக்கிறார்!’ (11:8). இங்கே நாம் பார்க்க வேண்டிய ஒரு கிரேக்க வார்த்தை ‘அநைடெய்யா’. இதை ‘விடாமுயற்சி,’ ‘துணிச்சல்,’ ‘வெட்கத்தை விட்டு’ என, மொழிபெயர்க்கலாம். இந்த உவமையில் ‘வெட்கத்தை இழந்த’ நண்பர் வீட்டிற்குள் உறங்கிக் கொண்டிருப்பவரே. நாளை இந்த நண்பரை அவர் வெளியில் சந்திக்கும்போது, எந்த முகத்துடன் அவரைச் சந்திப்பார்? தன் தூக்கம் மற்றும் சுகத்திற்காக தன் நட்பை அவர் விட்டுக் கொடுத்தது ஏன்?

இந்த உவமையை மட்டும் சொல்லிவிட்டு அது தரும் செய்தியைச் சொல்லாமல் விடுகின்றார் இயேசு.

நண்பர்கள் தங்கள் மேலான நட்பை மறுதலித்தாலும் இறைவன் தன்னிடம் கேட்கும் பிள்ளைகளை மறுதலிக்காதவர் என்பதே பாடம். ஆக, நட்பையும் மிஞ்சுவது இறைவனின் உறவு. நண்பர்கூட உறங்கி விடுவார். ஆனால், “இஸ்ரயேலைக் காக்கும் இறைவன் கண்ணயர்வதுமில்லை, உறங்குவதுமில்லை” (திபா 121:4).

மேற்காணும் உவமை,‘விடாமுயற்சிக்கான’ எடுத்துக்காட்டாக இருந்தாலும், தொடர்ந்து இயேசு விடாமுயற்சி பற்றி பேசுகின்றார்: ‘கேளுங்கள், தேடுங்கள், தட்டுங்கள்’ எனச் சொல்லும் இயேசு, ‘விடாமுயற்சியுடன்’ கேட்கவும், தேடவும், தட்டவும் அழைக்கின்றார்.

அடுத்ததாக, கடவுள் நம் செபங்களைக் கேட்டு, நாம் கேட்பதை நமக்கு அருள்கிறார் எனத் தொடர்கின்றார் இயேசு. ‘உங்கள் தந்தை மீனுக்குப் பதிலாக பாம்பையும், முட்டைக்குப் பதிலாக தேளையும் கொடுப்பாரா?’ எனக் கேட்கும் இயேசு, ‘தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள்’ என்று சுட்டிக்காட்டி, தன் தந்தையை நல்லவராகவும், நற்கொடைகள் அளிப்பவராகவும் முன் நிறுத்துகின்றார். எல்லா நற்கொடைகளிலும் மேலாக இருக்கின்ற ‘தூய ஆவியானவரை’ கொடையாக அளிப்பார் வானகத் தந்தை.

இவ்வாறாக, ‘தந்தையே’ என கடவுளை அழைக்கக் கற்றுத் தரும் இயேசு, அந்த அழைப்பில் நாம் கொண்டிருக்க வேண்டிய விடாமுயற்சியையும், அந்த அழைப்பின் கொடையாகிய தூய ஆவியையும் பற்றிச் சொல்கின்றார்.

நட்பு செய்ய முடியாததை செபம் செய்து முடிக்கிறது. நட்புக்காக திறக்காத கதவு நண்பனின் விடாமுயற்சிக்காகத் திறக்கிறது. நட்பை மிஞ்சுகிறது செபம். தந்தையின் விரலை எட்டித் தொட நாம் கொடுக்கும் குரலே செபம்.

நாம் முதலில் கேட்ட கேள்விகளுக்கு விடை என்ன?

1. இறைவேண்டல் என்பது ஓர் உறவு

மனிதர்கள் நாம் ஒருவர் மற்றவரோடு உறவு கொள்ள படைக்கப்பட்டாலும், பல நேரங்களில் நம் உறவு நம் வரையறையாக இருக்கிறது. நம் உறவைவிட நாம் மேலெழும்பிச் செல்ல நினைத்தாலும் நம்மால் முடிவதில்லை. மற்றொரு பக்கம், நாம் நம்பியிருக்கும் உறவுகள் நமக்குப் பல நேரங்களில் கை கொடுப்பதில்லை. நம்மை நம்பியிருக்கும் உறவுகளுக்கு நாம் கைகொடுப்பதில்லை. இதில் யாரும் மற்றவர்களைக் குறை சொல்லத் தேவையில்லை. ஏனெனில், நாம் எல்லாருமே வரையறைக்குட்பட்டவர்களே. ஆக, வரையறைக்குட்படாதவரின் உறவுதான் செபத்தின் அடித்தளம். இந்த உறவுக்காரர் என்னும் இறைவன் எப்படிப்பட்டவர் என்பதைத்தான் விளக்குகிறது இன்றைய முதல் வாசகமும், நற்செய்தி வாசகமும். தன் உள்ளத்தில் இருப்பதை தன் பணியாளர் ஆபிரகாமுடன் பகிர்ந்து கொள்கிறார் இறைவன். தன் பிள்ளைகள் தட்டியவுடன் கதவைத் திறந்து அப்பம் அளிக்கின்றார் இறைவன். இறைவன் என் தந்தை. அவருக்கும் எனக்கும் உள்ள உறவே செபம். தங்கள் வரையறையை உணர்ந்தவர்களும், கடவுளை தந்தை என ஏற்றுக்கொள்பவர்களும் மட்டுமே செபிக்க முடியும்.

2. செபம் என்பது மந்திரக்கோல் அல்ல!

செபம் என்பது அலாவுதீனின் அற்புத விளக்கோ, அலிபாபா குகை வாசலோ, மாயவித்தைக்காரனின் கோலோ அல்ல! செபத்தால் எல்லாவற்றையும் மாற்றி விடலாம் என நினைப்பது சால்பன்று. பிள்ளைக்குரிய திறந்த மனம் செபத்தில் மிக அவசியம். ‘எனக்கு அது வேண்டும், இது வேண்டும்’ என நம் பிள்ளைகள் நம்மிடம் கேட்கின்றன. ஆனால், அவர்கள் கேட்டது அவர்களுக்குக் கிடைக்கவில்லையென்றாலும் அதை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். நம்மோடு அவர்கள் உறவை முறித்துக்கொள்வதில்லை. வயது வந்தவுடன் சிலர் முறித்துக்கொள்கிறார்கள்! குழந்தைகளாக இருக்கும் வரை நம்மிடம் ‘சார்பு எண்ணம்’ (dependency) மேலோங்கி இருக்கிறது. இந்த உணர்வுதான் நமக்கு திறந்த மனத்தையும் தருகின்றது. செபத்தில் நாம் எதைக் கேட்டாலும் நம்மிடம் இந்த உள்ளமே இருக்க வேண்டும். அடுத்ததாக, இயேசு கற்றுக்கொடுத்த இறைவேண்டல் என்பது மந்திரம் அல்ல; 100 தடவை இதை எழுதினால் அல்லது சொன்னால் நான் விரும்பியது கிடைக்கும் என நினைத்தல் கூடாது. இந்த செபம் நமக்கும் கடவுளுக்கும் உள்ள உறவை நமக்கு நினைவுபடுத்துகிறது. அவ்வளவுதான்!

3. கேளுங்கள் - தேடுங்கள் - தட்டுங்கள்

நம் கடவுள் கொடுப்பவர், கண்டடையச் செய்பவர், திறப்பவர். இந்த வார்த்தைகள் திறந்த காசோலை போன்றவை. நாம் இதை கருத்தாய்ப் பொருள் கொள்ளல் வேண்டும். கடவுள் நம் விண்ணப்பங்களுக்குச் செவிகொடுக்கிறார் என்று இயேசு சொல்கிறாரே தவிர, நாம் கேட்கும் அனைத்தும் கிடைக்கும் என்று நமக்கு உத்திரவாதம் தரவில்லை. நம் கேட்டல், தேடல், தட்டுதல் அனைத்தும் மேலான ஒரு மதிப்பீட்டிற்காக - இறையாட்சிக்காக - இருத்தல் நலம் (காண். 12:31-32). நாம் மட்டுமல்ல; கடவுளும் நம்மிடம் கேட்கின்றார். நம்மைத் தேடி வருகின்றார். நம்மைத் தட்டுகின்றார். நாம் அவரின் கேட்டலுக்கும், தேடலுக்கும், தட்டுதலுக்கும் பதில் தருதல் அவசியம்.

4. விடா முயற்சி

முதல் வாசகத்தில் ஆபிரகாம் சோதோம்-கொமோரா நகரங்களுக்காகப் பரிந்து பேசுவதில் மனந்தளரவில்லை. இந்த மனந்தளரா நிலையைத் தான் நண்பர்கள் உவமையிலும், கேளுங்கள், தேடுங்கள், தட்டுங்கள் என்னும் கட்டளை வழியாகவும் சொல்கின்றார். இரண்டு நண்பர்களுக்கிடையே நடக்கும் இந்த கொடுக்கல்-வாங்கலை நமக்கு நாமே ஏன் ஒப்பீடு செய்து பார்க்கக் கூடாது. எடுத்துக்காட்டாக, எதையுமே தள்ளிப் போட்டுக்கொண்டே சோம்பித்திரியும் என் மனத்தோடோ அல்லது விடமுடியாத ஒரு பழக்கத்தோடோ (குடிப்பழக்கம்), ‘இல்லை! நான் இனிமேல் சுறுசுறுப்பாக இருப்பேன். குடிக்க மாட்டேன்’ என்று சொல்லிக்கொண்டே வந்தால், அந்த மனம் நம் தொந்தரவின் பொருட்டாவது மாறும் என்பது நிச்சயம். விடாமுயற்சி இறைவேண்டலில் மட்டுமல்ல; நம் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளிலும் இருத்தல் அவசியம்.

5. தந்தை உள்ளம்

மண்ணுலகின் தந்தையரே தம் பிள்ளைகள் நன்மை கேட்டால் தீமை செய்யத் துணியாதபோது வானகத்தந்தை இன்னும் எவ்வளவு மேன்மையானவராக இருப்பார்? வானகத் தந்தையின் தாராள உள்ளம் இன்று நமக்குக் கற்றுக்கொடுப்பது ‘உறவுகளில் தாராள மனம்.’ மற்றொரு வகையில் நாம் வேண்டும் செபங்களும், ஒப்புக்கொடுக்கும் திருப்பலிகளும், மேற்கொள்ளும் திருயாத்திரைகளும் நம் எண்ணங்களை நிறைவு செய்யாதபோது ‘வானகத் தந்தை’ மறுத்துவிட்டார் என்று இறைவன்மேல் கோபமாக மாறுகின்றதா? ஏமாற்றமாக உருவெடுக்கின்றதா? அல்லது இறைவன் நாம் கேட்கும் நலன்களைவிட மேலானதைத் தருவார் என்ற நம்பிக்கையை உதிக்கச் செய்கிறதா? இறைவேண்டலில் ஏமாற்றம் ஏற்பட்டாலும் பரந்த உள்ளத்தோடு இருப்பதை ஏற்றுக்கொள்ளலாமே!

இறுதியாக,

‘இதுதான் நான்!’ என்று இறைவனின் பிரசன்னத்தில் அமர்ந்து, என் இயல்பை, என்னால் இயல்பவைகளை, இயலாதவைகளை அவரிடம் கொண்டுவருவதும், ‘அவர் என்னைப் பார்க்கிறார்,’ ‘நான் அவரைப் பார்க்கிறேன்’ என்று ஒருவர் மற்றவரின் கண்கள் பணிப்பதும், எழுவதும்தான் செபம். என் வரையறை இதுதான் என்று என் வாழ்க்கை சொல்ல, அந்த கையறு நிலையிலிருந்து எட்டி என் தந்தையின் விரல் தொட நான் எழுப்பும் என் ஏக்கப் பெருமூச்சே செபம்! விரல் தொடும் குரல் செபம்! அந்த விரல் மேல் நோக்கி இருந்தாலும் கீழ் நோக்கி இருந்தாலும்!