திருஅவையில் சில அருள்பணியாளர்களால் இடம்பெறும் சிறாருக்கு எதிரான பாலியல் முறைகேடுகளை ஒழிப்பதற்கான திருஅவையின் அர்ப்பணம், எவ்வித உடன்பாட்டு பேச்சுக்கும் உட்படுத்தப்படாமல், தீவிரமாக நடைபெறும் என்று, ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் அமெரிக்க பத்திரிகையாளர் பிலிப் புள்ளேலா அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களோடு வத்திக்கானில் நடத்திய நேர்காணலில், சிறாருக்கு எதிரான பாலியல் முறைகேடுகளை அகற்றுவதற்கு திருஅவையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பற்றிய கேள்விக்கு, இவ்வாறு அவர் பதிலளித்துள்ளார்.
ஜூலை 8, வெள்ளி மாலையில் வெளியிடப்பட்ட இப்பேட்டியின் ஐந்தாவது பகுதியில், திருஅவையில் இடம்பெறும் இந்நடவடிக்கை மெதுவாக நடைபெற்றாலும், எவ்வித மாற்றத்திற்கும் உட்படுத்தப்படாமல், எப்போதும் முன்னோக்கியே சென்றுகொண்டிருக்கிறது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.
திருஅவையில் சில அருள்பணியாளர்களால் இழைக்கப்படும் சிறாருக்கு எதிரான பாலியல் முறைகேடுகள் சகித்துக்கொள்ளமுடியாதவை என்றும், நம்பிக்கை கோட்பாட்டுப் பேராயத்தில் இருக்கின்ற இரு பிரிவுகளில் ஒன்று, இம்முறைகேடுகள் தொடர்பான விசாரணைகளை நடத்தி வருகின்றது என்றும், இதுவரை அப்பிரிவின் பணி திருப்தியாக உள்ளது என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.
அண்மையில் தன்னைச் சந்தித்த பார்வையாளர்கள், தங்களது நாட்டில் இடம்பெறும் சிறாருக்கு எதிரான பாலியல் நடவடிக்கைகளில் ஏறத்தாழ 46 விழுக்காடு குடும்பங்களில் இடம்பெறுவதாகக் கூறினர், இந்நிலை பயங்கரமானது எனவும் திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பாக வெளிவந்துள்ள தரவுகளைக் குறிப்பிட்ட திருத்தந்தை, இம்முறைகேடுகளுக்கு எதனாலும், ஒருபோதும் நியாயம் சொல்லமுடியாது எனவும், இவ்வாறு பாதிக்கப்பட்டவர் ஒருவராக இருந்தாலும்கூட அது வெட்கத்துக்குரியது மற்றும், இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவேண்டியது முக்கியம் எனவும், திருத்தந்தை வலியுறுத்திக் கூறியுள்ளார்.
ஓர் அருள்பணியாளர் என்ற முறையில், மக்கள் வளர்வதற்கு உதவவேண்டும் மற்றும் அவர்களைக் காப்பாற்றவேண்டும், ஒருவர் இத்தகைய ஒரு தவறைச் செய்தால், அவர் அவர்களை கொலைசெய்கிறார் என்றுதான் அர்த்தம், இது பயங்கரமானது எனவும் திருத்தந்தை கூறியுள்ளார்.
பாஸ்டன் பேராயர் கர்தினால் சின் ஓ மாலே அவர்களின் தலைமையில் இயங்கும் திருத்தந்தையின் சிறார் பாதுகாப்பு பணிக்குழுவின் பணிகளையும், திருத்தந்தை பிரான்சிஸ் இப்பேட்டியின் இறுதியில் பாராட்டியுள்ளார்.