விலைமதிப்பற்ற பணிகளை ஆற்றும் கப்பல் பணியாளர்களுக்கு, நம் நன்மதிப்பு மற்றும், நன்றியைத் தெரிவிப்போம் என, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூலை 10, ஞாயிறு பகல் 12 மணியளவில் வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு மூவேளை செப உரையாற்றியபின்னர் கூறியுள்ளார்.
கப்பல் பணியாளர்கள் மற்றும், அவர்களின் குடும்பங்களுக்கு மேய்ப்புப்பணி சார்ந்த பராமரிப்பு மற்றும், ஆதரவை வழங்கும் ஸ்டெல்லா மாரிஸ் என்ற திருத்தூது அமைப்பின் ஆன்மீக வழிகாட்டிகள் மற்றும், தன்னார்வலர்களுக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் தன் நன்றியைத் தெரிவித்தார் .
ஒவ்வோர் ஆண்டும் ஜூலை மாதம், இரண்டாவது ஞாயிறன்று உலகெங்கும் சிறப்பிக்கப்படும் கடல் ஞாயிறு குறித்து, இம்மூவேளை செப உரையில் குறிப்பிட்ட திருத்தந்தை, போர் இடம்பெறும் பகுதிகளில் சிக்கியுள்ள கப்பல் பணியாளர்கள் பாதுகாப்பாக வீடு திரும்புவதற்கு, அவர்களை அன்னை மரியாவிடம் அர்ப்பணித்து, சிறப்பாகச் செபிப்போம் என்றும் கூறியுள்ளார்.
உக்ரைன் போரால் துன்புறும் பணியாளர்கள்
மேலும், உக்ரைனில் இடம்பெறும் போர், கப்பல் பணியாளர்கள் மீது ஏற்படுத்தியுள்ள எதிர்மறைத் தாக்கங்கள் குறித்தும், அவர்களுக்கு ஸ்டெல்லா மாரிஸ் திருத்தூது அமைப்பு ஆற்றிவரும் பணிகள் குறித்தும், அந்த அமைப்பின் பிரித்தானிய கிளையின் தலைவர் மார்ட்டின் ஃபோலே அவர்கள் விளக்கியுள்ளார்.
கருங்கடல் மற்றும், ஆசோவ் கடல்களில் ஏறத்தாழ 84 கப்பல்களும், 500 பணியாளர்களும் வேறு இடங்கள் செல்ல இயலாமல் உள்ளனர் என்றும், இவர்களுக்கு ஸ்டெல்லா மாரிஸ் அமைப்பு உதவி வருகின்றது என்றும், மார்ட்டின் ஃபோலே அவர்கள் கூறியுள்ளார்.
உலகிலுள்ள கப்பல் பணியாளர்களுள் ஏறத்தாழ 15 விழுக்காட்டினர், உக்ரைன் மற்றும் இரஷ்ய நாடுகளைச் சேர்ந்தவர்கள். உக்ரைனின் ஏறத்தாழ முப்பதாயிரம் கப்பல் பணியாளர்கள், வேலையிழந்து உதவி தேவைப்படும் நிலையில் உள்ளனர். மேலும், உலகில் பத்தாயிரம் உக்ரைன் கப்பல் பணியாளர்கள், இன்னும் ஒரு மாதத்திற்குள் வேலை ஒப்பந்தம் முடியும் நிலையில் உள்ளனர். இவ்வாறு மார்ட்டின் ஃபோலே அவர்கள் கூறியுள்ளார்.