சில ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில் நடந்த நிகழ்ச்சி பத்திரிகைகளில் அதிர்ச்சியாய் அலசப்பட்டது. அமெரிக்காவில் இருந்த மகன் ஊருக்கு வந்தான். அன்னையிடம் மிக அன்பாய் பழகினான். சில வாரங்கள் தங்கினான். தனது பிள்ளையைப் பார்த்துக்கொள்ள அமெரிக்கா வரவேண்டும் என அழைத்தான். அன்னை சிலிர்த்தாள். சொத்துகளையெல்லாம் விற்று, பணத்தை வங்கியில் போட்டு விட்டு அம்மாவுடன் விமான நிலையம் சென்றான். விமான நிலைய இருக்கை ஒன்றில் அவளை அமரவைத்துவிட்டு, நழுவி அமெரிக்கா செல்லும் விமானத்தில் ஏறி, அவன் பயணமானான். அமெரிக்கா செல்ல பாஸ்போர்ட் வேண்டும் என்பதைக் கூட அறியாத அந்த அப்பாவித் தாய், விமான நிலையத்தில் அனாதையாய் விடப்பட்டாள். இருந்த சொத்துகளையெல்லாம் உறிஞ்சி எடுத்த மகன், அதுகுறித்த எந்த ஒரு குற்ற உணர்வும் இன்றி அமெரிக்காவில் வாழ்க்கை நடத்துகிறான்.
பல முதியவர்களுக்கு இன்றைய நிலை இது தான். ஒரு காலத்தில் முதியவர்கள் என்றால் அதிகபட்ச மரியாதையுடன் பார்க்கப்பட்டார்கள். “ஐயா’ என்று சொல்லி எழுந்து கைகட்டி நிற்பார்கள். ஒரு குடும்பத்தின் மூத்தவர் சொல்லும் வார்த்தைக்கு மறு பேச்சு இருக்காது. அவருக்காக ஒட்டு மொத்த வீடும் கட்டுப்படும். உறவுச் சிக்கல்கள், குடும்பச் சண்டைகள் எல்லாமே அவர் சொன்னால் சரியாகிவிடும். இன்றைக்கு நிலைமை தலைகீழ்.
இன்றைக்கு மனிதனுடைய ஆயுள் என்பது, 70-80 வயது எனும் எல்லைக்குள் வந்து நிற்கிறது. முதிர் வயது என்பது மரணத்தை எதிர்நோக்கி இருக்கும் தேவையற்ற பருவம் அல்ல; அது இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்ட கனி தரும் பருவம். விவிலியம் முதுமையை பசுமையும், செழுமையும் நிறைந்து கனிதரும் பருவமாய்ப் பார்க்கிறது. எனவேதான் திருப்பாடல் ஆசிரியர் அவர்கள், "முதிர் வயதிலும் கனிதருவர்; என்றும் செழுமையும் பசுமையுமாய் இருப்பர்" (திபா 92 : 14) என்று பாடுகிறார்.
இந்த கருத்தையே நம் திருத்தந்தை அவர்களும் உலக தாத்தா பாட்டிகள் தினத்தில் எடுத்தியம்புகிறார். நரை திரண்டவருக்கு முன் எழுந்து நில். முதிர்ந்தவர் முகத்தை மதித்து நட; உன் கடவுளுக்கு அஞ்சி வாழ்; நானே ஆண்டவர்! - (லேவி 19 : 32 ) என்கிறது திருவிவிலியம். இறைவனுக்கு அஞ்சுதல் என்பது பெரியவர்களை மதிப்பதில் இருக்கிறது என்பதே இறைவனுடைய போதனையாகும். பெற்றோரை மதிக்க வேண்டும் எனும் போதனையை இயேசுவும் வலியுறுத்துகிறார். பெற்றோரைக் கவனிப்பதற்குப் பதில், கடவுளுக்குக் காணிக்கை செலுத்தும் பரிசேயத்தனத்தை அவர் சாடுவதையும் நாம் விவிலியத்தில் பார்க்கிறோம். முதியவர்கள் மரியாதைக்கும், வணக்கத்துக்கும் உரியவர்கள் என்கிறது விவிலியம்.
இப்படி விவிலியம் முதுமையை மிகவும் உயர்ந்த இடத்தில் வைத்துப் பார்க்கும்போது, கிறிஸ்தவர்களாகிய நாமும் அத்தகைய உயரிய இடத்தை அவர்களுக்குத் தருவது மிகவும் அவசியமாகிறது.
இன்றைய இளமை நாளைய முதுமை. இன்றைய முதுமை நேற்றைய இளமை. முதுமை என்பது இறைவன் ஒருவரை ஆசீர்வதித்து அவருடைய ஆயுளை முதுமை வரை நீடித்திருக்கிறார் என்பதன் ஆனந்த அடையாளமே. முதியோரிடம் கடுமையாய் நடந்து கொள்வது, இறைவனின் கட்டளையை நேரடியாக மீறுவதற்குச் சமம். நாம் மீறுகிறோமா? "பெற்ற தந்தைக்குச் செவிகொடு: உன் தாய் முதுமை அடையும்போது அவளை இழிவாக எண்ணாதே" (நீமொ 23 : 22 ).
பெற்ற தந்தைக்குச் செவிகொடுப்பதும், அன்னையை முதிர் வயதில் இழிவாகவோ, சுமையாகவோ எண்ணாமல் இருக்க இறைவன் நமக்குத் தந்திருக்கும் கட்டளைகளை நாம் செயல்படுத்துகிறோமா? என சிந்திப்போம். முதியவர்களை நாம் மதிக்க வேண்டும், அவர்களை நாம் பாசத்தோடு பராமரிக்க வேண்டும் என்பதை, வலியுறுத்தி நம் திருத்தந்தை ஜூலை மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை அகில உலக தாத்தா - பாட்டிகள் மற்றும் முதியோர் தினமாக கொண்டாட அழைப்பு விடுக்கிறார். எனவே, அன்பார்ந்தவர்களே, இந்த நாளில் முதுமையைக் குறித்த நமது பார்வையை மாற்றுவோம். முதியவர்கள் நமது அனுதாபத்துக்கு உரியவர்கள் அல்ல; நமது அன்புக்கு உரியவர்கள். அவர்களுக்காக நாம் செய்யும் செயல்கள் தியாகத்தின் பிரதிபலிப்புகளல்ல; அன்பின் பிரதிபலிப்புகள் என்பதில் தெளிவு வேண்டும்.
நாம் என்ன செய்யலாம்?
முதியவர்களுடன் உரையாடுவது
அவர்களை அடிக்கடி சந்திப்பது
அவர்களை வெளியே அழைத்துச் செல்வது
அவர்களுடைய கதைகளைக் கேட்பது
அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வது
அவர்களை அதிகபட்ச மரியாதையுடன் நடத்துவது
அவர்களுடைய கேள்விகளில் எரிச்சல் அடையாமல் இருப்பது
அவர்களுக்கு புதிய புதிய விஷயங்களை விளக்குவது
ஆன்மீக உரையாடல்களில் ஈடுபடுவது என, அவர்களை முழுமையாய் உங்கள் வாழ்வின் பாகமாக மாற்றுங்கள். அதுவே முதியவர்களுக்கு மரியாதை அளிப்பதாகும். அதுவே விவிலியம் எதிர்பார்க்கும் வாழ்க்கையாகும்.
"உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்களிக்கும் நாட்டில் உன் வாழ்நாள்கள் நீடிக்கும்படி உன் தந்தையையும் உன் தாயையும் மதித்து நட (விப 20 : 12 ) என்கிறது இறை வார்த்தை. நமது ஆயுள் நீடிக்கப்பட வேண்டுமெனில், நாம் நமது பெற்றோரை மதித்துப் பாதுகாக்க வேண்டியது அவசியம். முதியவர்கள் நமது வாழ்வின் வரம்.இதயம் தளும்பத் தளும்ப அவர்களை நேசிப்போம்; நமது அன்பை அவர்களுக்கு வெளிப்படுத்துவோம்
கடைசியாக முதிர் வயதிலிருக்கும் அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்: வயதாக வயதாக முகத்தில் வசீகரம் கூடுகிறது என்று. அண்மையில் செய்யப்பட்ட ஆய்வுகளும் காட்டுகின்றன. இந்த வசீகரமானது. பழுத்த அனுபவத்தாலும், பண்பட்ட அறிவாலும், ஞானத்தாலும் வருவதாம். “உங்கள் முதுமை வரைக்கும் நான் அப்படியே இருப்பேன்: நரை வயதுவரைக்கும் நான் உங்களைச் சுமப்பேன்: உங்களை உருவாக்கிய நானே உங்களைத் தாங்குவேன்: நானே உங்களைச் சுமப்பேன்: நானே விடுவிப்பேன்” (எசா 46:4) என்ற கடவுளின் பராமரிப்பும், ஆசீர்வாதங்களும் இளமையோடு நின்று விடுவதில்லை. அவருடைய தொடர் பராமரிப்பு கடைசி காலம் வரைத் தொடர்கிறது. ஆபிரகாமுக்கு முதிர் வயதில் குழந்தையைக் கொடுத்து இறைவன் ஆசீர்வதித்தார்.
விவிலியம் முதுமையை ஆசீர்வாதத்தின் காலமாகப் பார்க்கிறது. எனவே, முடிந்தது வாழ்வு என்று முடங்கிவிடாமல், ‘வானமே எல்லை’ என்று சிறகுகளை விரியுங்கள். ஆங்காங்கே சில இறகுகள் இல்லாமல் இருக்கலாம். இருந்தாலும் உயர உயர பறக்க முடியும். இன்பங்கள், துன்பங்கள், சோகங்கள் எல்லாவற்றையும் ரசிக்கப் பழகிக்கொள்ளுங்கள். எதுவுமே உங்கள் மனதை பாதிக்காமல் பார்த்து கொள்ளுங்கள். உலகம் உங்கள் கைவசப்படும்.
ஆக்கப்பூர்வமான செயல்களில் உங்களையே ஈடுபடுத்திக்கொண்டு, இளையோருக்கு சமுதாய முன்னேற்றத்திற்கான வழிமுறைகளை எடுத்துச் சொல்லுங்கள். இன்றைய இளைய தலைமுறை என்றும் உங்களை நினைவு கூறும் என்பது திண்ணம்.