Namvazhvu
ஒரு மணி நேரம் மட்டுமே!
Tuesday, 19 Jul 2022 07:04 am
Namvazhvu

Namvazhvu

உயிர்ப்பின் காலம் என்பது, நம்பிக்கையின் காலம். பாஸ்கா காலம் நமது வெற்றியின் காலம். மீட்பர் இயேசு சாவின்மேல் வெற்றிகொண்ட காலம் அதுதான். தனது உயிர்ப்பினால், பாவத்தின் கொடுக்கை மாற்றிவிட்ட காலம். பாவமே சாவின் கொடுக்கு. பாவத்துக்கு வலிமை தருவது திருச்சட்டம். நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வழியாக நாம் இந்த வெற்றியைப் பெற்றிருக்கிறோம். ஒவ்வொரு வருடமும் புதுப்புது பாடங்களை நாம் கற்றுக்கொள்கிறோம். இந்த ஆண்டு பாஸ்கா கற்றுத்தந்த புதுப்படிப்பினையை இங்கே பதிவு செய்கிறோம்.

ஒரு மணி நேரத்தின் முக்கியத்துவம்

தவக்காலம் நிறைவு பெறும் புனித வாரத்திலே புனித வெள்ளியன்று ஆராதனை நடைபெறும். அந்த ஆராதனைக்காகச் செய்தி தயாரிக்கும்போது “ஒரு மணி நேரம்கூட என்னோடு விழித்திருக்க உங்களுக்கு வலுவில்லையா?” என்று, ஏன் கேட்க வேண்டும் என்ற கேள்வி எழுந்தது. அந்தத் தேடலின்போது ஒரு மணி நேரத்தின் சிறப்புப்பற்றி கிடைத்த தகவலை இங்கே பதிவு செய்கிறோம். “உங்கள் மனம் ஆர்வமுடையதுதான். ஆனால், உடல் வலுவற்றது. எனவே, சோதனைக்கு உட்படாதிருக்க விழித்திருந்து இறைவனிடம் வேண்டுங்கள்” என்ற இயேசுவின் அழைப்பு புரிந்தது. இலங்கை வாழ் மக்களுக்கான பரிந்துரை ஒன்றில் செய்தி பகிரும்போது, அரிசிக்கு வழியில்லாமல், மின்சாரம் இல்லாமல், கேஸ் விலைகொடுத்து வாங்க முடியாமல் அனுபவிக்கும் வேதனையைச் சொல்லக் கேட்கும்போது, ஏற்படும் வேதனையால் நம் இதயம் துடிதுடிக்கின்றது. “ஒரு மணி” திருவிவிலியத்தில் எத்தனை இடங்களில் இடம் பெறுகின்றது என்றால் மொத்தம் ஆறு இடங்களில் உள்ளது. அதில் “One Hour” ஒரு மணி நேரம் எனும் செய்தி ஐந்து இடங்களில் பதிவாகியுள்ளன. அவற்றில் நான்கு கருத்துகள் உள்ளன. அதனை முதலில் தியானிக்கிறோம்.

1. ஒரு மணி நேரமே வேலை செய்தவர்கள்

மத்தேயு நற்செய்தியாளர் மட்டுமே பதிவு செய்துள்ள திராட்சைத் தோட்ட வேலையாள்கள் உவமையில், "கடைசியில் வந்த இவர்கள் ஒரு மணி நேரமே வேலை செய்தார்கள்" (மத் 20:12). அவ்வாறு கடைசி நேரத்தில் வந்து ஒரு மணி நேரம் மட்டுமே வேலை செய்தாலும், அதே கூலியைக் கொடுக்கும் திராட்சைத் தோட்ட நிலக்கிழார். நாமும் கூட ஒரு சொற்ப காலமே நமக்கு மீதமிருந்தாலும் இந்த இறுதி மணி வேளையிலே இறைவனது திராட்சைத் தோட்ட வேலையை செய்ய கண்டிப்பாக முன்வருவோம்.

2. ஒரு மணி நேரம் விழித்திருக்க வலுவில்லையா? (மத் 26:40, மாற் 14:37)

இயேசுவோடு கெத்சமனியில் விழித்திருந்து, ஒரு மணி நேரம் செபிக்க அழைக்கப்பட்ட மூன்று சீடர்களுள் ஒருவரான பேதுருவிடம் கேட்கப்பட்ட கேள்வி. மூன்று முறை தனது பாடுகளைச் சந்திக்க ஆற்றல் வேண்டி செபிக்க கேட்டுக்கொண்டபோது, உறங்கிக்கொண்டிருந்தனர். “சீமோனே, உறங்கிக்கொண்டா இருக்கிறாய்? ஒரு மணி நேரம் விழித்திருக்க உனக்கு வலுவில்லையா? உங்கள் மனம் ஆர்வம் உடையதுதான்; ஆனால், உடல் வலுவற்றது. எனவே, சோதனைக்கு உட்படாதிருக்க விழித்திருந்து இறைவனிடம் வேண்டுங்கள்” என்றார் (மாற் 14:37,38). ஒரு மணி நேரம் விழித்திருந்து செபித்திருந்தால் இயேசுவை மறுதலித்திருக்க மாட்டாரோ என்று தொடர்ந்து வரும் பகுதி நமக்கு உணர்த்தித் தருகிறது.

3. ஏறக்குறைய ஒரு மணி நேரத்திற்குப் பின் மீண்டும் மறுதலிக்கிறார் (லூக் 22:59)

இயேசுவைக் கைது செய்து தலைமைக் குருவின் வீட்டிற்கு அழைத்துச் சென்றதால், பேதுரு இயேசுவை தொலைவில் பின்தொடர்ந்தார். ஏற்கனவே பணிப் பெண்ணிடமும் வேறு ஒருவரிடமும் மறுதலித்திருந்தார். மூன்றாவது முறையாக, ஏறக்குறைய ஒரு மணி நேரத்திற்குப் பின்பு மற்றொருவர், "உண்மையாகவே இவனும் கலிலேயன்தான்" என்று வலியுறுத்திக் கூறினான் (லூக் 22:59) ஒரு மணிநேரம் விழித்திருந்து செபித்திருந்தால் வாழ்நாள் முழுவதும் அழுதாலும் தீர்ந்து போகாத கண்ணீரும், குற்ற உணர்வும் அவருக்கு வேதனை தந்திருக்காது. “வெளியே சென்று மனம் நொந்து அழுதார்” (லூக் 22:62) என்று சொல்லப்பட்டுள்ளதே. இயேசு இருமுறை சேவல் கூவுமுன் மும்முறை மறுதலிப்பாய் என்ற எச்சரிக்கையையும் மீறி மறுதலித்தார். எனவே, ஒரு மணி நேர செபம் மிகவும் முக்கியமானது என்பதனை மனதில் நிறுத்துவோம்.

4. விலங்கோடு சேர்ந்து ஒரு மணி நேர அரசாட்சி (திவெ 17:12)

திருவெளிப்பாட்டு நூலிலே 17 ஆம் அதிகாரத்தில் பேர்போன விலைமகளும் கருஞ்சிவப்பு விலங்கும் என்ற பகுதி இருக்கும். அதிலே நீ கண்ட பத்து கொம்புகளும் பத்து அரசர்களைக் குறிக்கும். அவர்கள் இன்னும் ஆட்சியுரிமை பெறவில்லை. ஆனால், அவர்கள் விலங்கோடு சேர்ந்து ஒரு மணி அளவு அரசாள அதிகாரம் பெறுவார்கள் (திவெ 17:12). இது மிக முக்கியமான எச்சரிக்கை. நாம் ஒருமணி நேரம் இறைவேண்டல் செய்து பழகியிருந்தால் அந்த ஒரு மணி நேர இருளின் நேரத்தில் நாம் ஆண்டவரின் ஒளியில் விழித்திருந்து செபித்து ஜெயித்துவிடலாம்.

ஏனெனில், ஒரேமணி நேரத்தில் அழிவு வரும் என்பதை திருவெளிப்பாடு பதினெட்டாம் அதிகாரத்தில் மூன்று இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

(i) “ஐயோ! மாநகரே நீ கேடுற்றாயே! அந்தோ! வலிமைவாய்ந்த பாபிலோனே உனக்குக் கேடு வந்ததே! ஒரு மணி நேரத்தில் உனக்குத் தீர்ப்பு வந்துவிட்டதே” என்பார்கள் (திவெ 18:10).

(ii) “இவ்வளவு செல்வமும் ஒரே மணி நேரத்தில் பாழாய்ப் போய்விட்டதே” என்பார்கள் (திவெ 18:17).

(iii) அவர்கள் தங்கள் தலைமேல் புழுதியை வாரிப்போட்டுக் கொண்டு அழுது புலம்பினார்கள்: “ஐயோ, மாநகரே, நீ கேடுற்றாயே! கடலில் கப்பலோட்டிய அனைவரையும் தன் செல்வச் செழிப்பால் செல்வராக்கிய நீ ஒரே மணி நேரத்தில் பாழடைந்துவிட்டாயே!” என்று கதறினார்கள் (திவெ 18:19).

மூன்று இடத்தில் ஒரு மணி நேரத்தில் அழிவு வரும் என்று போடப்பட்டுள்ளது. எனவே, ஒரு மணி நேரம் தினமும் விழிப்பாயிருந்து இறைவார்த்தை தியானித்து, செபிப்போம். ஒரு மணி நேரம் மட்டுமாகிலும் கடவுளது திராட்சைத் தோட்டத்தில் வேலை செய்யும், ஒரு மணி நேரம் விழித்திருந்து செபிக்கவும் செய்தால் ஒரு மணி நேரம் மட்டுமே உள்ள அந்த அரசாட்சி வேளையில் நமக்கு எந்தப் பாதிப்பும் வராது. பத்திலொரு பங்கு நேரம் என்றால் 8640 நொடிகள். அது கடவுளுக்குரியது. ஆண்டவருக்கு உரிய நேரத்தை அவருக்கு அளித்து பணி செய்வோம்.

(இன்னும் கதிர் வீசும்)