Namvazhvu
திருத்தந்தை பிரான்சிஸ் பொது நலனுக்காக உரையாடலைத் தொடங்குங்கள்
Wednesday, 20 Jul 2022 10:09 am
Namvazhvu

Namvazhvu

கடுமையான பொருளாதார நெருக்கடியால் மிகவும் துன்புறும் இலங்கை மக்களோடுள்ள தனது அருகாமையை, ஜூலை 17,  ஞாயிறன்றும் திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அரசுத்தலைவர் பதவி விலகக் காரணமான அந்நாட்டின் பொருளாதார நெருக்கடி, மற்றும், மக்களின் கொந்தளிப்பு குறித்து குறிப்பிட்டு, துன்புறும் அம்மக்களோடு தானும் இணைந்து இறைவேண்டல் செய்வதாக திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

ஞாயிறு நண்பகலில் வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு மூவேளை செப உரையாற்றியபின்னர் துன்புறும் இலங்கை மக்களை நினைவுகூர்ந்த திருத்தந்தை, தற்போது அந்நாடு எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு அமைதியான முறையில் தீர்வு காணப்படுமாறு அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்புவிடுத்துள்ளார்.

நாட்டு மக்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும், வாழ்வாதாரங்கள் புறக்கணிப்பட்டதால் அவை நாடு தழுவிய கொந்தளிப்புக்கு காரணமாகியுள்ளன என்றுரைத்துள்ள திருத்தந்தைஊழல், திறமையற்ற பொருளாதார நிர்வாகம் ஆகியவற்றில் வேரூன்றியுள்ள பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண்பதில் ஈடுபட்டுள்ள அரசியல் கட்சிகள், அத்தீர்வுகள், அனைவரின் உரிமைகள் மதிக்கப்படும் நிலையில், வறுமைக்கோட்டிற்குக்கீழ் வாழ்கின்ற மக்களுக்கு ஆதரவாக இருக்கவேண்டும் எனவும் அழைப்புவிடுத்துள்ளார்.

இலங்கையில் அனைத்து விதமான வன்முறைகள் கைவிடப்பட்டு, பொது நலனுக்காக உரையாடல் தொடங்கப்படவேண்டும் என்று விண்ணப்பிக்கும் சமயத் தலைவர்களோடு தானும் இணைவதாகக திருத்தந்தை பிரான்சிஸ்கூறியுள்ளார் .  

அவசரகால நிலை

இலங்கையில் பொருளாதார நெருக்கடி தொடர்பான நிலையற்றதன்மை மற்றும் போராட்டங்கள் வலுப்பெற்ற நிலையிலேயே, இம்மாதம் 14ஆம் தேதி அவசரகால நிலையை, பதில் அரசுத்தலைவர் இரணில் விக்ரமசிங்கே அவர்கள் அறிவித்திருந்தார்.

இதற்கிடையே, இலங்கையில் நூறு நாள்களாக போராட்டங்கள் இடம்பெற்றிருந்தபோது அறிவிக்கப்படாத அவசரகால நிலை, இப்போது எதற்கு என்ற கேள்வியை எழுப்பியுள்ள அருள்பணி ஜீவாந்தா பெய்ரீஸ் (Jeewantha Peiris) அவர்கள், இந்த திடீர் அறிவிப்பு, போராட்டதாரர்களை மிரட்டி அடக்குவதாக உள்ளது என்று கருத்து தெரிவித்துள்ளார்.