தொமினிக்கன் குடியரசு மக்கள், அல்ட்டா கிராசியா (Altagracia) அதாவது அருள்மிகப்பெற்ற அன்னை மரியா மீது கொண்டிருக்கும் ஆழ்ந்த பக்தி, அக்குடியரசுக்கு வாழ்வளித்த கிறிஸ்தவத்தின் அடையாளமாக இருக்கின்றது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்குடியரசுக்கு அனுப்பியுள்ள ஒரு செய்தியில் கூறியுள்ளார்.
தொமினிக்கன் குடியரசில், Altagracia அன்னை மரியா திருப்படம், அதிகாரப்பூர்வமாக முடிசூட்டப்பட்டதன் நூறாம் ஆண்டின் நினைவாக, Altagracia யூபிலி ஆண்டை சிறப்பித்துவரும் அந்நாட்டு மக்களுக்கு செய்தி அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்தவ நம்பிக்கைக்குச் சான்று பகர்வதில் தளர்ந்துபோகவேண்டாம் என, அம்மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
தம் எல்லையற்ற கனிவன்பால், நம்மைப் பராமரித்து வருகிறார், மற்றும், நமக்கு நெருக்கமாக இருக்கிறார் என்பதை கடவுள், அன்னை மரியா வழியாக வெளிப்படுத்தி இருக்கின்றார் என்றும், தன் மடியில் நம்பிக்கையோடு உறங்கும் குழந்தையை, அன்னை அன்போடு உற்றுநோக்குவது, நம் அயலவரில் இயேசு பிரசன்னமாய் இருக்கிறார் என்பதை அவ்வன்னையின் கண்கள் வழியாக பார்க்கவேண்டும் என்பதைக் கற்றுக்கொள்ள விடுக்கும் ஓர் அழைப்பாகும் என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.
நாம் ஒரே மனிதக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை நினைவில் இருத்தி, உடன்பிறந்த உணர்வு, மற்றும், தோழமையில் ஒன்றிணைந்து வாழ்வதற்கு விடுக்கும் அழைப்பாகவும் அது உள்ளது என்று, திருத்தந்தை அச்செய்தியில் மேலும் கூறியுள்ளார்
தொமினிக்கன் குடியரசின் மக்கள், தங்களின் அன்றாட வாழ்வில் எழுகின்ற இக்கட்டான சூழல்களில் சோர்ந்துபோகாமல் இருப்பதற்கு, ஆதரவளிக்கும் ஓர் உறுதியான கரமாகவும், ஒன்றிப்பின் ஊற்றாகவும் அல்ட்டா கிராசியா அருள்மிகப்பெற்ற அன்னை மரியா விளங்குகின்றார் என்றும் திருத்தந்தை தெரிவித்துள்ளார்.
நம் மூதாதையர் விட்டுச்சென்ற நம்பிக்கை எனும் சுடரை அணையாது காப்பாற்றுமாறும், ஆண்டவரின் அருளில் பற்றுறுதிகொண்டு அதே நம்பிக்கையை தாழ்ச்சியோடு மற்றவருக்கு வழங்குமாறும் அன்னை மரியா நம்மிடம் விண்ணப்பிக்கிறார் என்று கூறியுள்ள திருத்தந்தை, நற்செய்தியில் இயேசு சுட்டிக்காட்டும் வழியில், உடன்பிறந்த உணர்வில் ஒன்றித்து, ஒன்றுசேர்ந்து பயணம்மேற்கொள்ள அஞ்சவேண்டாம் என்று அக்குடியரசு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
நம் எல்லாரையும் அரவணைக்கின்ற, மற்றும், ஒருபோதும் கைவிடாத கனிவு நிறைந்த நம் இறைத்தந்தையின் விருப்பத்தை, எளிமையில் தேடுவதற்குத் தயங்கவேண்டாம் மற்றும், தேவையில் இருப்போருக்கு மகிழ்வோடு உதவுங்கள் என்று தொமினிக்கன் குடியரசு மக்களை விண்ணப்பித்துள்ள திருத்தந்தை, அல்ட்டா கிராசியா (Altagracia ) அன்னை மரியாவின் பாதுகாப்பில் அம்மக்களை அர்ப்பணித்து அச்செய்தியை நிறைவுசெய்துள்ளார்.
அல்ட்டா கிராசியா Altagracia அன்னை மரியா வரலாறு
16ம் நூற்றாண்டில் தொமினிக்கன் குடியரசில் ளுயடஎயடநபூn னந ழபைநூநல என்ற செல்வந்தர், வியாபாரத்திற்காக தன் பயணங்களை முடித்துத் திரும்பும் ஒவ்வொரு முறையும் தன் மகளுக்கு ஒரு பரிசைக் கொண்டுவந்து கொடுத்துவந்தார். ஒரு நாள், அவள், தான் கனவுகண்ட அன்னை மரியாவின் படத்தைக் கொண்டுவந்து தர முடியுமா என்று தன் தந்தையிடம் கேட்டாள். அவரால் அப்படத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு நாள் அவர் வீடு திரும்புகையில், வயதான ஒருவர் அவரது பிரச்சனை பற்றி அறிந்து, ஹடவயபசயஉயை அன்னை மரியா படத்தை அந்த வர்த்தகரிடம் கொடுத்தார். அதனைப் பெருமகிழ்ச்சியோடு பெற்றுக்கொண்ட அந்த வர்த்தகரின் மகள், தினமும் காலையில் கண்விழித்தபோது, அப்படம் அவர்கள் வீட்டிற்கு வெளியே அமைந்திருந்த ஆரஞ்சு பழமரத்தடியில் இருப்பதைக் கண்டாள். இவ்வாறு தொடர்ந்து நடந்ததால், அவள் அதை தன் பெற்றோரிடம் கூறினாள். பின்னர் அவ்விடம் புனித இடமாக மாறியது. அவ்விடத்தில் ஆலயம் ஒன்றும் எழுப்பப்பட்டது. அவ்வாலயமே அருள்மிகப் பெற்ற அன்னை மரியா திருத்தலமாகும். இவ்வன்னை மரியா படம், 1571ம் ஆண்டிலிருந்து அந்நாட்டு மக்களால் மிகவும் பக்தியோடு போற்றப்பட்டு வருகிறது.
இந்தப் படம், 1502ஆம் ஆண்டு, அல்போன்ஸோ திரேஹோ, அந்தோணியோ திரேஹோ ஆகிய இருவரால் இஸ்பெயின் நாட்டிலிருந்து தொமினிக்கன் குடியரசுக்குக் கொண்டுவரப்பட்டதாக வரலாறு சொல்கிறது. அன்னையின் பிரசன்னம் தங்களை நிறைவாக வாழவைக்கிறது என்பதை உணர்ந்த அவர்கள், அவ்வன்னைக்கு ‘அருள்மிகப் பெற்ற மரியா’ எனப் பெயர் சூட்டியுள்ளனர்.
தொமினிக்கன் குடியரசில் அல்ட்டா கிராசியா அன்னை மரியா யூபிலி ஆண்டு, 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல், 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரை சிறப்பிக்கப்பட்டுவருகிறது.