Namvazhvu
இலங்கை: புதிய அரசுத்தலைவரின் கடும் நடவடிக்கைகளுக்கு கண்டனம்
Tuesday, 26 Jul 2022 07:27 am
Namvazhvu

Namvazhvu

இலங்கையில் புதிய அரசுத்தலைவர் பதவியேற்ற 24 மணி நேரங்களுக்குள், அந்நாட்டில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள்மீது, படைவீரர்களும், ஆயுதம்தாங்கிய காவல்துறையினரும் கடுமையான தாக்குதல்கள் நடத்தக் காரணமான புதிய அரசிடம், ஒரு வெளிப்படையான விசாரணையைத் தொடங்கவேண்டும் என்று அந்நாட்டு கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள், உலக சமுதாயத்திற்கு விண்ணப்பித்துள்ளார்.

ஜூலை 22, வெள்ளி காலையில், தலைநகர் கொழும்புவில் அரசுக்கு எதிராகப் போராட்டத்தை நடத்தியவர்கள் மீது, பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட தாக்குதலுக்கு எதிரான தன் வன்மையான கண்டனத்தையும், கொழும்பு பேராயரான கர்தினால் இரஞ்சித் அவர்கள் தெரிவித்துள்ளார்.

அரசுத்தலைவர் அலுவலகத்திற்கு அருகில் முகாம் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அப்பாவி இளையோர், அம்முகாமைவிட்டுச் செல்வதற்கு தயாராகி வருகிறோம் என்று அறிவித்தபின்னரும் அவர்கள்மீது இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது என்று, கர்தினால் இரஞ்சித் பன்னாட்டு சமுதாயத்திடம் தெரிவிப்பதாகக் கூறியுள்ளார்.

இரணில் விக்ரமசிங்கே அவர்கள், இலங்கை நாடாளுமன்றத்தில் 134 வாக்குகள் பெற்று புதிய அரசுத்தலைவராகப் பதவியேற்ற 24 மணி நேரங்களுக்குள் இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன என செய்திகள் கூறுகின்றன.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளால் மட்டுமே அரசுத்தலைவராகப் பதவியேற்றுள்ளவர், நாட்டின் அரசியலமைப்பைப் பாதுகாக்கவேண்டும், அதற்கு மாறாக, ஒரு மக்களாட்சி நாட்டில், போராட்டம் நடத்துவதற்கு அடிப்படை உரிமையைக்கொண்டுள்ள மக்களுக்கு எதிராக அவர் செயல்பட்டுள்ளார் என்று, கர்தினால் இரஞ்சித் அவர்கள் தன் கண்டன அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசுத்தலைவரின் இந்நடவடிக்கையால் வருங்காலத்தில் இடம்பெறும் எதிர்விளைவுகளுக்கு அரசுத்தலைவரே குற்றம்சாட்டப்படுவார் என்பதையும், கர்தினால் இரஞ்சித் அவர்கள் நினைவுபடுத்தியுள்ளார்.

இதற்கிடையே, இலங்கையில் போராட்டக்காரர்கள், செய்தியாளர்கள், சட்டவல்லுநர்கள் போன்றோர் மீது தடியடி நடத்தப்பட்டுள்ளதற்கு எதிரான தன் கண்டனத்தை வெளியிட்டுள்ளது, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் மனித உரிமைகள் அமைப்பு.