Namvazhvu
மாற்றுச் சிந்தனை ஆடம்பரத்திற்கா திருநிலையினர்?!
Thursday, 28 Jul 2022 06:49 am
Namvazhvu

Namvazhvu

முன்னுரை

எனக்குத் தெரிந்த ஒரு பங்கின் அருள் காவலரது திருநாள் கொடி ஏற்றத் திருப்பலியில் கலந்துகொண்ட அருள்பணியாளர்களின் எண்ணிக்கை 11. அத்தனை அருள்பணியாளர்களின் வருகையைப் பார்த்து அவ்வூர் மக்களுக்கு மட்டற்ற பெருமையும், மகிழ்வும்.

அங்கு மட்டுமல்ல; பெரும்பான்மையான ஊர்களில் அதிக எண்ணிக்கையில் தகதகத் தங்கநிற திருப்பலி உடைகளை அணிந்து, அருள்பணியாளர்கள் அணிவகுத்து பீடத்திற்கு வருவதைப் பார்த்து விட்டாலே நம் மக்களுள் பலருக்குப் பக்தியும், பரவசமும்தான். இவ்வாறு, அதிக எண்ணிக்கையில் அருள்பணியாளர்களைக் கூட்டிச் சேர்த்ததால் பங்குப் பணியாளருக்கும் கிடைப்பது பாராட்டுக்களே.

இது எந்த அளவுக்குச் செல்கிறது என்றால், சில சிறிய பங்குகளில்கூட பத்து நாள் திருநாள்களின்போது, ஒவ்வொரு நாளும் 8 - 10 என அருள்பணியாளர்கள் பங்கெடுக்கிறார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பங்கின் அருட்காவலர் திருநாள்களின்போது, ஏழு ஆயர்கள் வெவ்வேறு நாட்களில் அழைத்து வரப்பட்டு, அங்குத் திருப்பலி நிறைவேற்றினர் என்பதும் நம்மில் பலர் கேள்விப்பட்ட செய்தி.

அதுபோலவே, செல்வர் வீட்டுத் திருமணங்கள் போன்ற நிகழ்வுகளை அந்தந்த மறைமாவட்ட ஆயரோ, அவர் இல்லையென்றால் இன்னொரு மறைமாவட்ட ஆயரோ வந்து சிறப்பிப்பதும் ஆங்காங்கே நடந்தேறும் நிகழ்வுகள். மேலும், சிலவேளைகளில் செல்வர், அருள்பணியாளர்கள் வீட்டு நிகழ்வுகளுக்கு அதிக எண்ணிக்கையில் அருள்பணியாளர்களும் அழைக்கப்பட்டு 20,30,50 என அவர்கள் வந்து குவிவதும் உண்டு.

பணிக்காகவா? பணத்திற்காகவா?

 இவ்வளவு அதிக எண்ணிக்கையில் அருள்பணியாளர்களும், ஆயர்களும் அழைக்கப்படுவதற்கான காரணங்கள் பல. முன்னைய காலங்களில் அருள்பணியாளர்கள் மட்டுமே நற்கருணை வழங்கமுடியும் எனும் சட்டம் இருந்தது. ஒப்புரவு அருளடையாளத்தையும், அன்றும், இன்றும் அவர்கள் மட்டுமே நிறைவேற்ற முடியும். திருவிழா நாட்களில் அவற்றைப் பெற முன்னைய நாட்களில் பெருங்கூட்டமாக மக்கள் வந்ததால் அதற்கு அருள்பணியாளர்களும் அதிக எண்ணிக்கையில் தேவைப்பட்டனர்.

ஆனால், இன்று அத்தேவைகள் மிகவும் குறைந்துவிட்டன. ஏனெனில், இன்று மிகப் பெரும்பான்மையான பங்குகளில் போதிய எண்ணிக்கையில் அருள்சகோதரிகளும், சில மறைமாவட்டங்களில் சில பொதுநிலைத் திருப்பணியாளர்களும்கூட நற்கருணை வழங்குகின்றனர்.

ஒப்புரவு அருளடையாளம் பெற வருபவர்களும் முன்புபோல் இப்போது அதிக எண்ணிக்கையில் இல்லை.

ஆனால், இன்று பல இடங்களில் பங்குத் திருநாட்களின்போது, பணிசார்ந்த தேவை எதுவும் இன்றி வெறும் நட்பிற்காகவே பங்கு அருள்பணியாளர் தம் நண்பர்களையும், வகுப்பு தோழர்களையும் அழைக்கின்றார்.

தாம் பிறந்து வளர்ந்த ஊரைச் சார்ந்தவர்களையும், தம் விளையாட்டுத் தோழர்களையும்கூட தாம் பணியாற்றும் பங்கின் திருநாள்களுக்கு சில அருள்பணியாளர்கள் அழைக்கிறார்கள். இவ்வாறு, அவரால் அழைக்கப்பட்ட நண்பர்களும், தோழர்களும் தத்தம் பங்குகளின் திருநாள்களுக்கும் அவரை அழைக்கின்றனர். ஒவ்வொரு இடத்திலும் எல்லாருக்கும் பங்குச் செலவில் நல்ல விருந்து கிடைக்கிறது. பல இடங்களில் பணமாகவோ, பொருளாகவோ, பங்குச் செலவில் பரிசும் கிடைக்கிறது.

இவ்வாறு, அருள்பணி சார்ந்த தேவைகள் எதுவுமின்றி பங்கு அருள்பணியாளரின் உறவினர், ஊரார், நண்பர் எனும் ஒரே காரணத்திற்காக அவர்கள் அழைக்கப்படுவது அர்த்தமும் அவசியம் அற்றதே.

அதுபோலவே, அருள்பணி சார்ந்த தேவை எதுவும் இன்றி வெறும் ஆடம்பரத்திற்காக ஆயர்களும், அருள்பணியாளர்களும் அழைக்கப்படுவது எவ்வகையிலும் ஏற்புடையது அன்று. அதிலும் பணக்காரர்களின் வீட்டு நிகழ்வுகளுக்கும் அவர்கள் வந்து குவிவது திரு அவையைப் பற்றிய தவறான புரிதலையே மக்களிடம் ஏற்படுத்துகிறது. இது தொடர்பாக இரு நிகழ்வுகளைச்சுட்டிக் காட்டுவது நிகழ்மெய்மை நிலையை நாம் சரியாகப் புரிந்துகொள்ள உதவும் என கருதுகிறேன்.

ஒன்று, “உங்களுக்கு ஆடம்பரத்திற்கு ஓர் ஆயர் வேண்டும், எனக்கு ஏழைகளுக்கு உதவப்பணம் வேன்டும்” என சில ஆண்டுகளுக்கு முன்பு ஆயர் ஒருவர் இன்னொரு மறைமாவட்டத்தில் தனியார் நிகழ்வு ஒன்றில் திருப்பலி ஆற்ற வந்தபோது, வேடிக்கையாகக் கூறியதாக நான் கேள்விப்பட்டது.

இன்னொன்று, பல ஆண்டுகளுக்கு முன்பு, தென் தமிழகத்தின் பெருஞ்செல்வர் ஒருவர் தம் வீட்டுத் திருமணத்திற்குச் செய்தித் தாளில் வெளியிட்டிருந்த அழைப்பில் இத்திருமணத்திற்கு வருகைதரும் அருள்பணியாளர்களுக்கு ஆளுக்கு ஓர் அங்கித்துணியும், ஆயிரம் ரூபாயும் தரப்படும்” எனக் குறிப்பிட்டிருந்ததும் அந்தத் திருமணத்தில் ஒரு நூறுக்கு அதிகமான அருள்பணியாளர்கள் பங்கெடுத்ததும் நினைவுகூறத்தக்கது.

இவ்வாறு, பணிசார்ந்த அவசியம் எதுவும் இன்றி, பணத்திற்காகவும், பரிசுகளுக்காகவும் பல அருள்பணியாளர்கள் திருவழிபாட்டு நிகழ்வுகளில் பங்கெடுக்க ஏனைய பங்குகளுக்குச் செல்வது முறைகேடானதும், திரு அவைச் சட்டத்திற்கு முரணானதும் கூட. ஏனெனில், அருள்பணி சார்ந்த அவசியம் இன்றி அருள்பணியாளர்கள் ஒரு நாளைக்கு ஒன்றிற்கு அதிகமாகத் திருப்பலி நிறைவேற்றுவதைத் திரு அவைச் சட்டம் (எண். 905) தடைசெய்துள்ளது.

ஆனால், இச்சட்டம் இன்று தமிழகத் திரு அவையில் பெரிதும் அறியப்படாததாக அல்லது கண்டுகொள்ளப்படாததாகவே உள்ளது.

ஆடம்பரப் பொருட்களாக்க வேண்டாம்

இன்னொரு மறைமாவட்டத்து ஆயரையோ, அதிக எண்ணிக்கையில் அருள்பணியாளர்களையோ திருநாள் அல்லது திருமணம் போன்ற சிறப்பு நிகழ்வுத் திருப்பலிக்கு அழைப்பதில் இன்னொரு நோக்கமும் இணைந்திருப்பது உண்டு. அது ஊர் அல்லது குடும்பத்தின் பெருமையைக்காட்டுவதே.

“எங்கள் ஊர் திருவிழாவுக்கு 10 அருள்பணியாளர்கள் வந்திருந்தனர்”, “தன் மகள் திருமணத்திற்கு அவன் ஆயரையே கொண்டு வந்திட்டான்” என, அவ்வப்போது ஆங்காங்கே நம் காதில் விழும் உரையாடல்கள் இதை உறுதிப்படுத்துகின்றன.

ஒரு பங்கில் புதியக் கோயிலைப் புனிதப்படுத்தித் திறந்து வைக்கக் குறைந்தது மூன்று கர்தினால் அல்லது திருத்தந்தை நம் நாட்டுக்கு வருகிறார் என்றால், அவரை அழைக்க அவ்வூர் பெரியவர்கள் விரும்புவதாகச் சொல்லப்படுவது, நம் மக்களிடையே பரவலாக இருக்கும் ஊர் பெருமையுணர்விற்கும், ஆடம்பர மோகத்திற்கும் தெளிவான ஓர் எடுத்துக்காட்டு.

இதுபோலவே, 25 ஆண்டு யூபிலித் திருப்பலி என்றால் 25 அருள்பணியாளர்கள், 50 ஆண்டு என்றால் 50 அருள்பணியாளர்கள் பங்கெடுக்க வேண்டும் எனும் வகையிலான சிந்தனையும், நடைமுறையும் அவர்களை ஆடம்பரப் பொருட்களாகக் கருதுவதுதானே?

கடவுள் ஆடம்பர விரும்பி அல்ல; ஆடம்பரங்கள் அவருக்குத் தேவை இல்லை, அவற்றால் அவர் மாட்சி அடைபவரும் அல்ல; அவருடையத் திருமகன் இயேசுவும், அன்னை மரியாவும், அனைத்துப் புனிதர்களும் எளிமையானவர்களே. கடவுள் அவர்களுக்குத் தந்துள்ள மாட்சியும், செய்துள்ள பெருமைகளும் அவர்களுக்குப் போதுமானவையே.

எனவே, நாம் செய்யும் மாட்சியும், பெருமைகளும் அவர்களுக்கு அவசியம் இல்லை. எனினும் அவர்களைப் பெருமைப்படுத்துவதும், சில ஆடம்பரங்களால் அவர்களைச் சிறப்பிப்பதும், அவர்களுடைய அரும்பெரும் நற்பண்புகளை நமதாக்கிக்கொள்ளவும், அவர்களுடைய சீரிய பணிகளை நாமும் தொடர்ந்து ஆற்றவும் அவர்களது புனிதப் பாதையில் வழிநடக்க அருளாற்றல் பெறவும், நமக்கு ஓரளவு உதவ முடியும். இது ஒன்றே அவர்களுக்கு நாம் செய்யும் சிறப்புகள், ஆடம்பரங்களின் நோக்கம். அதற்கு உதவும் அளவுக்குத்தான் அவை பொருள் உள்ளவையும், தேவைப்படுபவையும் ஆகும்.

ஆனால், இறை நம்பிக்கையாளர்களும் புனிதர்களின் பற்றாளர்களும் எளிதில் வீழ்ந்துவிடும் சோதனை ஒன்று உண்டு. அது கோயில் ஆடம்பரங்களையும், திரு உருவ தேர் அலங்காரங்களையும் மிகைப்படுத்துவதிலேயே அதிக ஆர்வமும், ஈடுபாடும் கொண்டு, அவர்களுடைய நற்பண்புகளையும், பணிகளையும் பற்றிச் சிந்திக்கவும் அவற்றைத் தமதாக்கி வாழவும் சிறிதும் முனைப்பு இன்றி அவற்றை மறந்து விடுவதுதான்.

இவ்வாறு, வெறும் ஆடம்பரச் சமய அல்லது பக்திச் செயல்பாடுகள் உண்மையான அருள்வாழ்வு வளர்ச்சிக்கு மாற்றாக அமைந்து விடும் ஆபத்து உண்டு. அருள்பணியாளர்களை வெறும் ஆடம்பரப் பொருள்கள் ஆக்குவதும் இவ்வகையானதே.

அருள் வாழ்வு மேம்பாட்டிற்காகவா?

ஆயர்களையோ, அதிக எண்ணிக்கையில் அருள்பணியாளர்களையோ தங்களது ஊர் திருநாள் அல்லது இல்ல விழாக் கொண்டாட்டங்களுக்கு அழைப்பதற்கு இன்னொரு காரணமும் இருப்பது உண்டு. அவர்கள் வந்து அவ்வழிபாடுகளில் கலந்துகொண்டால், தங்களது ஊருக்கு அல்லது குடும்பத்திற்கு அதிகமாகக் கடவுளது அருளும், ஆசிகளும் கிடைக்கும் எனும் பலரது எண்ணமே அது. அவர்கள் அதிகப் புனிதமானவர்கள், கடவுளுக்கு அதிக நெருக்கமானவர்கள். எனவே, அவர்கள் இறைவேண்டல் செய்தால் அவை மற்றவர்கள் கேட்பதைவிட, அதிக வேகமாகவும், உறுதியாகவும் கிடைக்கும் எனும் எண்ணமும் பரவலாக நிலவுகிறது.

இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்திற்கு முன்னைய கால இறையியல் இத்தகையச் சிந்தனையை வளர்த்துவிட்டது. ஆனால், அப்பொதுச்சங்கம் ஆயர்கள், அருள்பணியாளர்கள் பற்றிய அந்த மரபுப் புரிதலைக் கைவிட்டது. மாறாக, கடவுளுடைய அன்புப் பிள்ளைகள், இயேசுவின் சீடத்துவ சகோதரர்கள் எனும் வகையில் அனைவரும் இறை உறவிலும், உரிமையிலும் சமமானவர்களே எனும் புதிய புரிதலை அது முன்வைத்தது.

திருமுழுக்குப் பெற்ற அனைவரும் இறைமக்களுக்கு உரிய ‘மாண்பிலும், செயல்பாட்டிலும் சமமானவர்கள்” என்பது, சங்கத்தின் புரட்சியான படிப்பினை (திரு அவை 33). திரு அவைச் சட்டம் 208ம் இதை உறுதிப்படுத்துகிறது. மேலும், நம்பிக்கையாளர்கள் அனைவரும் ஒரே புனித நிலையை அடையவே அழைக்கப் பெற்றுள்ளனர் என்பதும் சங்கத்தின் படிப்பினை. ‘அனைத்து மனிதரின் பல்வேறு வாழ்க்கை நிலைகளிலும், பணிப்பொறுப்புகளிலும், ஒரே வகைத் தூய்மை நிலையே செயலாக்கம் பெறுகிறது” (திரு அவை 41) என இதனை அது எடுத்துரைக்கிறது. அதாவது, அருள்பணியாளர்களுக்கு உரிய புனிதம் தனி உயர்வானது. பொதுநிலையினருக்கு உரியதும், இரண்டாம் தரமானதும், இன்னொரு வகையானதும் எனும் மரபுப் புரிதலைச் சங்கம் மறுத்து, அனைவரும் அடைய வேண்டியது ஒரே வகைப் புனிதமே எனக் கற்பிக்கிறது.

புனிதம் அடைவதற்கான பாதைகளும், பணிகளும் வேறுபடலாம். ஆனால், அனைவரும் அடைய வேண்டிய புனிதம் ஒன்றே. ஏனெனில், அன்பும், தியாகமுமே புனிதம். அவற்றில் உள்ள கூடுதலும், குறைவுமே ஒருவரது புனிதத்தின் உயர்வுக்கும், தாழ்வுக்கும் காரணமே அன்றி, அவர் பெற்றுள்ள திருநிலைப்பாடோ அவர் ஆற்றும் பணியோ அல்ல; இதனால் தான், ஒரு மறைமாவட்டத்தை தலைமை ஏற்று நடத்தும் ஆயரைவிட, ஒரு ஏழைக் குடும்பத்தின் தாய் அதிகப் புனிதமானவராக இருக்கலாம். அதுபோலவே திருப்பலியைத் தலைமை ஏற்று நடத்தும் அருள்பணியாளரைவிட, அதில் பங்கேற்கும் ஒரு பொதுநிலையினர் கடவுளுக்கு அதிகம் ஏற்புடையவராக இருக்கலாம். இத்தகையோரைத்தான் திருத்தந்தை பிரான்சிஸ் “நம் பக்கத்து வீட்டுப் புனிதர்கள்” எனக் குறிப்பிடுகின்றார் (அகமகிழ்ந்து அக்களியுங்கள், 6-7).

மேலும், இறைவனது அருளும், ஆசியும் எவரும் இடைநிலையாளராக நின்று நமக்குப் பெற்றுத் தருபவை அல்ல; அவை நம் அப்பாவாகிய கடவுள், தம் அன்புப் பிள்ளைகளாகிய நமக்குத் நேரடியாகத் தருபவையே. அவற்றைப் பெற நம்மைத் தயாரிக்கவும், அவற்றை அனுபவித்துணரவும் பிறர் நமக்கு உதவ முடியுமே அன்றி, எவ்வளவு புனிதம் மிகுந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் அவற்றை நமக்கு வாங்கித் தருவது இல்லை. ஏனெனில், கடவுள் வேறு எல்லாரையும்விட நமக்கு அதிக நெருக்கமானவர். அவர் நம் உடன் இருப்பவர் மட்டுமல்ல; நம் உள்ளும் உறைபவரும் ஆவார். இதனால், இறை அருளையும், ஆசிகளையும் மக்கள் அதிகம் பெறுவது ஆயர்கள் வருவதாலோ, அதிக அருள்பணியாளர்கள் நம் திருவிழா வழிபாடுகளில் கலந்துகொள்வதாலோ அல்ல; மாறாக, பங்கேற்பாளர்கள் அதில் எவ்வளவு அதிக நம்பிக்கையோடும், அன்போடும், ஈடுபட்டு, இறையனுபவம் பெறுகிறார்கள் என்பதைப் பொறுத்ததே.

பங்குகளில் போதியப் பணிகள் இல்லையா?

தமது பங்கையோ, பணித்தளத்தையோ விட்டு வேறு இடங்களில் நிகழும் திருநாள் அல்லது திருமணத் திருப்பலிகளில் அருள்பணிசார் அவசியம் இன்றி, அருள்பணியாளர்கள் பத்து, இருபது என அதிக எண்ணிக்கையில் பங்கெடுக்க வருவதற்கு இன்னொரு காரணம் அவர்களுள் சிலருக்கு தங்களது சிறிய பங்குகளில் போதிய பணிகள் இல்லை என்பதும், அவை இருந்தாலும் அவர்கள் அவற்றை செய்யாது இருப்பதும் தான்.

தமிழக ஆயர்களில் சிலர் தமது அல்லது பிற மறைமாவட்டத் தனியார் குடும்பச் சிறப்பு நிகழ்வுகள் சார்ந்த திருப்பலிகளுக்குச் செல்வது இல்லை எனும் நடைமுறையைப் பின்பற்றுகின்றனர். அதுபோலவே, பிற மறைமாவட்டப் பங்குகளின் திருநாள் திருப்பலிகளுக்கும் அவர்கள் செல்வது இல்லை. அவர்களது மறைமாவட்டம் சார்ந்த பணிகளுக்கே அவர்களுக்குப் போதிய நேரம் இல்லை என்பது அதற்கான முதல் காரணி. செல்வர் வீட்டு நிகழ்வுகள் என்றால் ஆயர்கள் வருவார்கள். அதனால், திரு அவை பணக்காரர்களுக்குச் சார்பானது எனும் தோற்றத்தைத் தவிர்ப்பதும், அவர்களது இந்த நிலைப்பாட்டிற்கு இன்னொரு முக்கிய காரணம்.

இது மிகவும் பாராட்டப்பட வேண்டிய நடைமுறை மட்டும் அல்ல; ஓய்வுபெற்றோர் உட்பட அனைத்து ஆயர்களும் கடைப்பிடிக்கக்கூடியதுமாகும். அதுபோலவே, அருள்பணியாளர்களும், அருள்பணிசார் அவசியமின்றி வெறும் ஆடம்பரத்திற்காகவும் / பணத்திற்காகவும் ஏனைய பங்குத் திருநாள் திருப்பலிகளில் கலந்துகொள்வது தவிர்க்கப்பட வேண்டும். இதையொட்டி தமிழகத்தின் ஓரிரு மறைமாவட்டங்களில் திருமணத் திருப்பலிகளில் மூன்று அருள்பணியாளர்கள் மட்டுமே கூட்டுத் திருப்பணியாளர்களாகக் கலந்துகொள்ள முடியும் எனும் ஒழுங்குமுறை உள்ளது. இதுவும் எல்லா மறைமாவட்டங்களும் பின்பற்றக்கூடிய நலமான நெறிமுறைதான். ஏனெனில், தத்தம் பங்குகளில் அவர்களுக்குப் போதிய பணிகள் இருக்கின்றதுதானே.

இன்று மக்களுடைய பிரச்சனைகள் அதிகரித்துள்ளன. அவற்றிற்கு ஏற்ப திரு அவை புதிய பல பணிகளை முன்னெடுப்பதும் மிகவும் அவசியமாகியுள்ளது. அன்பியப் பங்கேற்பு, இல்லச் சந்திப்பு, நோயாளர் சந்திப்பு, பணிக்குழுக்கள் மற்றும் திருத்தூதுக் கழகங்களுக்கு வழிகாட்டல், பல்வேறு இயக்கங்களை நெறிப்படுத்துதல், குடும்ப நலப்பணி, இளைஞர் மற்றும் சிறாருக்கான பல்வேறு பயிற்சிகள், விவிலிய மற்றும் இறையியல் வகுப்புகள் நடத்துதல், சமூக-பொருளாதார, அரசியல்-பண்பாட்டு விழிப்புணர்வுக் கல்வி வழங்குதல் என்பன அவற்றுள் சில. இத்தகைய பணிகளை, அதிலும் குறிப்பாக இல்லச் சந்திப்புப் பணியை அருள்பணியாளர் பலர் ஆற்றத் தவறுவதால் தானே பழம் பெரும் பங்குகளில் இருந்துகூட, இன்று நம் மக்கள் சாரைசாரையாகப் பெந்தக்கோஸ்து சபைகளுக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள்.

திருப்பீட முற்றத்தில் இத்தனை பேர் எதற்கு?

மேலும், மறைமாவட்டச் சிறப்பு நிகழ்வுகளின் திருப்பலிகளுக்கென நூற்றக்கணக்கான அருள்பணியாளர்கள் பளபளக்கும் திரு உடைகளை அணிந்து, பவனி வருவதற்கும் அவரவருக்கென தனிப்பட்ட பணி எதுவும் இன்றி, 10-15 பேர் என, ஆடம்பரத்திற்காகத் திருப்பலிப் பீடத்தைச் சுற்றிச் சூழ்ந்துக் கூட்டமாக நிற்பதற்கு என்ன அவசியம் இருக்கிறது? இயேசுவின் தியாகத் திருப்பலிக் கொண்டாட்டத்தில் எளிமைதானே மேலோங்கி நிற்க வேண்டும். அவற்றில் இத்தகைய அலங்கார அணிவகுப்புகள் எதற்கு?

மேலும், திருநிலையினராக இருந்தாலும் சரி, பொதுநிலையினராக இருந்தாலும் சரி, திருப்பலியில் கலந்துகொள்வோர் அனைவரும் அதில் சமமாகவும், முழுமையாகவும் பற்கேற்க அழைக்கப்படுகின்றனர். அதில் பலருக்குப் பல்வேறு தனித்தனி பணிகள் உண்டு. ஆனால், எல்லாருக்கும் உரிய பங்கேற்பு சமமானதே.

ஏனெனில், நற்கருணைக் கொண்டாட்டத்தின் உண்மையான தலைவர் இயேசுவே.  அப்பத்தையும், திராட்சை  இரசத்தையும் தூய ஆவியாரின் அருளாற்றலால் அவரே தம் உடலாகவும், இரத்தமாகவும் மாற்றுகின்றார். அவ்வாறு, மாற்றுபவர் அருள்பணியாளர் அல்ல; அவர் இயேசுவை அடையாளப்படுத்துபவரே. இதனால் தலைமை தாங்கும் ஆயர் அல்லது அருள்பணியாளருடன் மறையுரையாளர் போன்றப் பணிகளை ஆற்றும் ஏனைய ஓரிரு திருப்பணியாளர் திருப்பீட முற்றத்தில் திரு உடைகளை அணிந்து நிற்பது அர்த்தமும், அவசியமும் ஆனதே. ஆனால், அத்தகைய தனிப்பணி எதுவுமற்ற அருள்பணியாளர்கள் அவ்வாறு ஏன் அங்கு தனி வகுப்பினர் அல்லது உயர் குலத்தினர் போலப் பவனியாக வர வேண்டும் அல்லது திருப்பீட முற்றத்தில் தனி உயர் குழுவாகக் கூடி நிற்க வேண்டும்? இதுவும் அவசியம் அற்ற ஆடம்பரமும், அருள்பணியாளர் ஆதிக்கத்தின் ஒரு அடையாளமும் தானே.

இறுதியாக,

காலைத் திருப்பலி, மாலை நவநாள், நோயில் பூசுதல் போன்ற வழிபாட்டு நிகழ்வுகளை நடத்தித் தருவதுடன், அருள்பணியாளரது கடமைப் பணி முடிந்துவிட்டது எனக் கடந்த காலங்களில் கருதப்பட்டது. ஆனால், இன்று புதுப்புது அருள்பணிகள் பல அவசியப்படுகின்றன. இவை தாம் விரும்பினால் செய்யவும் இல்லையெனில் விட்டு விடவும் கூடிய தன்னார்வப் பணிகளே என அருள்பணியாளர் பலர் கருதுவதாகத் தெரிகிறது. இத்தகைய புரிதல் அருள்பணி சார்ந்த அவசியம் இன்றி, வெறும் ஆடம்பரத்திற்காக அவர்கள் அடுத்த பங்குகளில் நடைபெறும் திருநாள்களில் பங்கேற்கச் செல்வதை எளிதாக்குகிறது. இவற்றையும் தாமாகவும், பொதுநிலையினர் துணையுடனும் ஆற்றுவது பங்கு அருள்பணியாளரது பொறுப்பே எனும் உறுதிப்பாடு அவர்களிடமும் இத்தகையத் தெளிவு மக்களிடமும் உருவாக்கப்பட வேண்டும்.

இத்தகையப் பணிகளையும், ஈடுபாட்டுடனும் தகுந்த முன் தயாரிப்புடனும் பொதுநிலையினருடன் இணைந்து, உரிய திட்டமிடலுடனும் ஆற்ற முற்படும் அருள்பணியாளருக்குப் பிற பங்குகளில் நடைபெறும் திருநாட்களில் அருள்பணிசார் அவசியம் இன்றி, வெறும் ஆடம்பரத்திற்காகக் கலந்துகொள்வதற்கு நேரம் எங்கே கிடைக்கப் போகிறது? அல்லது ஒருவேளை பல சிறிய பங்குகளில், பங்கு அருள்பணியாளர்களுக்கு உண்மையிலேயே போதிய பணிகள் இல்லையோ?

வெறும் நூறு அல்லது இருநூறு கத்தோலிக்கக் குடும்பங்களை, ஏன் சில வேளைகளில் அதைவிடக் குறைவாகக்கூட உள்ள பல பகுதிகளைத் தமிழ்நாட்டில் உள்ள சில மறைமாவட்டங்களில் தனிப் பங்குகளாக நிறுவும் போக்கு அண்மையில் அதிகரித்துள்ளது. உலகில் வேறு எங்கும் இல்லாத சமயச் சொகுசு இது. ஏனெனில், பத்தாயிரம் பேருக்கு ஓர் அருள்பணியாளர்கூட இல்லாத பல பகுதிகள் உலகில் உள்ளன. மேலும், இத்தகைய சிறு பங்குகளில் முழு நேர அருள்பணியாளர்களுக்கு, அவர்கள் எவ்வளவு ஈடுபாடு கொண்டவர்களாக இருந்தாலும் சரி, போதிய அளவு பணி எப்படி இருக்க முடியும்?