Namvazhvu
கருப்புநாள் - ஆகஸ்ட் 10,2022 தலித் கிறித்தவர் சம உரிமை போராட்டம்
Monday, 01 Aug 2022 12:41 pm
Namvazhvu

Namvazhvu

ஆண்டுதோறும் ஆகஸ்டு 10 ஆம் நாள் கருப்பு தினமாக அறிவிக்கப்பட்டு, தலித் கிறித்தவர்களுக்கு பட்டியல் வகுப்பினர் உரிமைகளை மத்திய அரசு வழங்க தேசிய அளவில் போராட்டங்கள் நடத்தப்படுகிறது. இவ்வாண்டும் இக்கோரிக்கை வலியுறுத்தி போராட்டம் தொடர்கிறது.

பல்லாண்டு காலம் இந்தியக் கிறித்தவர் என்ற பிரிவில் தொடர்ந்து ஒதுக்கீட்டு உரிமைகளை பெற்று வந்தனர். 1950 ஆம் ஆண்டு, இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 15/4 சாதியின் பெயரால் அனைத்து பட்டியல் சாதியினர்க்கும் அளிக்கப்பட்ட ஒதுக்கீட்டு உரிமைகளை சமயத்தின் பெயரால், தலித் கிறித்தவர்களுக்கு மறுக்கும் 1950 ஜனாதிபதி ஆணையில், ஜனாதிபதி கையெழுத்திட்ட ஆகஸ்ட் 10 ஆம் நாள் கருப்பு தினமாகும்.

தலித் கிறித்தவர்களுக்கு மறுக்கப்படும் உரிமைகள்

அரசியல் பிரிவு 341 அளிக்கும் அரசியல் அதிகாரம் ஜனாதிபதி பட்டியலின சாதிகளின் பட்டியல் அளிப்பது என்று உள்ளது. ஆனால், முதல் ஜனாதிபதி திரு. ராஜேந்திர பிரசாத் அத்துமீறி, அரசியல் சாசனம் அளித்த அதிகாரத்தையும் கடந்து, ஓர் அநீதியான Constitution (Scheduled Caste) Order 1950 என்ற ஆணையை வெளியிட்டார். 1950 ஜனாதிபதி ஆணை 3 ஆவது பத்திஇந்து மதத்தை தழுவாத தாழ்த்தப்பட்டோர் பட்டியலித்தனார் (SC) என்று கருதப்படமாட்டார் என்று கூறுகிறது. இந்த ஆணை சமயத்தின் அடிப்படையில் ஷெட்யூல்டு வகுப்பைச் சார்ந்த மக்களைப் பிரித்து, இந்து மதத்தைத் தழுவாத தலித் மக்களுக்கு உரிமைகளை மறுக்கிறது. அரசியல் அமைப்புச் சட்டம் சாதி (SC) பெயரால் அளிக்கும் உரிமைகளை சமயத்தின் பெயரால் மறுக்கிறது. இந்த ஆணை அரசியல் நிர்ணய சாசன சட்டம் எண். 15/4, 46, 330, 332, 341, 25 எதிராக அமைந்துள்ளது. சமயச் சார்பற்ற தன்மையை ஒழிக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரசியல் அமைப்புச் சட்ட பிரிவுகள் சாதியின் அடிப்படையில் அளிக்கின்ற உரிமைகளை சமயத்தின் பெயரால் மதம் மாறிய தலித் மக்களுக்கு இச்சனாதிபதி ஆணை மறுக்கிறது. இவ்வாணை திருத்தப்பட்டு, மதம் மாறிய சீக்கிய தலித் மக்களுக்கு 1956 ஆம் ஆண்டும், புத்தமத தலித் மக்களுக்கு 1990 ஆம் ஆண்டிலிருந்தும் பட்டியலின சலுகைகளையும், ஒதுக்கீட்டு உரிமைகளையும் அளிக்கிறது. ஆனால், மத்திய அரசுகள் தொடர்ந்து தலித் கிறித்தவர்களுக்கு சமூக நீதியின் அடிப்படையில் அளிக்கும் பட்டியலின (SC) உரிமைகளை மறுத்து வருகின்றன. கல்வி, வேலை வாய்ப்பு, பாராளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி அனைத்திலும் ஒதுக்கீட்டு உரிமைகள் அளிக்கப்படுகிறது. ஆனால், பட்டியலினத்தார்க்கு அளிக்கப்படும் சமூக நீதியை மதம் மாறிய கிறித்தவ பட்டியலினத்தார்க்கு மறுக்கப்படுகிறது.

போராட்டம்

2010 ஆகஸ்ட் 10 ஆம் நாள் முதல் ஆண்டுதோறும் கண்டனத்தை வெளிப்படுத்தும்கருப்புநாளாக" கடைபிடிக்கப்படுகிறது. அதன் மூலம் தலித் கிறிஸ்தவர்கள் சம உரிமை பெறுவதற்கான போராட்டங்களை திட்டங்கள் முன்னெடுக்கிறது. 1992 ஆம் ஆண்டு முதற்கொண்டு, நீதி ஞாயிறாகவும், 2007 முதல் தலித் விடுதலை ஞாயிறாகவும் கருத்துடன் கடைபிடிக்கப்பட்டது. இப்போராட்டம் சமநீதிக்காக எடுக்கும் நெடும் போராட்டமாக உள்ளது. தேசிய அளவில், அகில இந்திய ஆயர் பேரவை தலித் மற்றும் பழங்குடியினர் பணிக்குழு, மாநில ஆயர்கள் பணிக்குழு, தலித் கிறித்தவ மக்கள் இயக்கங்கள் கடந்த 70 ஆண்டுகள் பேரணி மாநாடு, உண்ணாவிரதம் போன்ற பல போராட்டங்களை நடத்தியுள்ளனர். மத்திய மாநில தலைவர்களிடம் கோரிக்கை மனுக்களை அளித்துள்ளனர். இச்சமூக நீதி பிரச்சனை அரசியல் ஆக்கப்பட்டு தலித் கிறித்தவர் உரிமை தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது.

உரிமைக்கான கோரிக்கைகள்

மத்திய அரசு மே 2007 ஆம் ஆண்டு முதல் 14 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருக்கும் ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரையான ஜனாதிபதி ஆணை 1950, பத்தி 3 முழுவதையும் நீக்கி SC பட்டியலில் சேர்க்க பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்ற வேண்டும். 2004 முதல் 17 ஆண்டுகளாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கு (WP 180-2004) விசாரணைக்கு பா.. அரசு உடனே பதில் தரவேண்டும். நீதித்துறை தலித் கிறித்தவர்களுக்கு சமூக நீதி வழங்க வேண்டும்.

தமிழக அரசு சட்டப் பேரவையில் தலித் கிறித்தவர்களுக்கு பட்டியலினத்தார் உரிமைகளை வழங்கிட தீர்மானம் நிறைவேற்றி, ஒன்றிய அரசுக்கு அனுப்பவேண்டும். மேலும், தி.மு.. பாராளுமன்ற உறுப்பினர்கள் இத்தீர்மானம் நிறைவேற பாராளுமன்றத்தில் வலியுறுத்த வேண்டும்.

தமிழகத்தில் ஆதிதிராவிடர் பெறுகின்ற கல்வி மற்றும் பொருளாதார சலுகைகளை மதம்மாறிய கிறித்தவ ஆதிதிராவிட மக்களும் பெறுவதற்கு ஆவன செய்தல் வேண்டும்.

மேற்கண்ட உரிமைகளுக்காக அனைத்து கிறித்தவர்கள் மனித உரிமை ஆர்வலர், மக்கள் இயக்கங்கள் இணைந்து போராடினால், தலித் கிறித்தவர்களுக்கு நிச்சயமாக உரிமைகள் கிடைக்கும்.