Namvazhvu
இளைஞர் மாமன்றம் – 2023 இணைந்து இயங்கும் இளைஞராக: விழிப்புணர்வு, பொறுப்புணர்வு, திறன்மிகு உணர்வு
Tuesday, 02 Aug 2022 06:37 am
Namvazhvu

Namvazhvu

நாம் அனைவரும் நலமுடன் வாழ எண்ணற்ற அருள் வளங்களைத் தாயன்போடு வழங்கும் இறைத்தந்தையின் பரிவும், என்றும் உயிராற்றலுடன் இணைந்து பயணிக்கும் இளைஞர் இயேசுவின் அருளும், பொது நலனிற்கான நற்செயல்களை நாம் செய்ய நம்மை இயக்கும் தூய ஆவியாரின் நட்புணர்வும், உங்களோடு இருப்பதாக!

கோவிட்-19 பெருந்தொற்றின் தொடர் அலைகள் எண்ணற்ற பாதிப்புகளை வடுக்களாக நம்மில் விட்டுச் சென்றுள்ளன. இவற்றிலிருந்து நாம் மீண்டெழ இறைவன்மீது கொண்டுள்ள அசைக்க இயலா நம்பிக்கை நமக்குத் திசை காட்டுகிறது. இவ்வேளையில், திரு அவையும் தன்னைப் புதுப்பித்துக்கொள்ள ‘உலக ஆயர்கள் மாமன்றத்திற்கானசெயல்முறையினை, உலகளாவிய விதத்தில் மறை மாவட்டங்கள், பங்குகள் என அனைத்துத் தளங்களிலும் நடத்த முன் வந்திருப்பது நம் நம்பிக்கையை இன்னும் அதிகப்படுத்துகின்றது. இறை மக்கள் தங்களுக்குள் ஒன்றிப்பு உறவினை வளர்த்து, இணைப்புப் பாலங்களைக்கட்டி, அனைத்துத்தளங்களிலும் சமத்துவப் பங்கேற்பை உறுதிசெய்து, அன்பும், நீதியும், அமைதியும் தழைக்கும் இறையாட்சியை உருவாக்குவதற்கான நற்செய்திப் பணியாற்ற முன்வருவதன் மூலம் ‘இணைந்து பயணிக்கும் திரு அவையைஉருவாக்க இச்செயல்முறை நமக்கு அழைப்பு விடுத்துள்ளது.

கடந்த அக்டோபர் முதல், நமது திரு அவை வரவேற்பது, உரையாடுவது, செவிமடுப்பது, தெளிந்து தேர்வது ஆகிய வழி முறைகளால் இணைந்து பயணிக்கும் செயல் முறையில் அனைவரையும் பங்கேற்கச் செய்கிறது. பங்கேற்பவர்களது வாழ்வை மாற்றக்கூடிய நடை முறையைக் கற்பிக்கிறது. இதன் மூலம் திரு அவை ஓர் உறவு சார்ந்த முகத்தை வெளிப்படுத்துகிறது. இச்செயல்முறையைக் கொண்டு பங்கு, மறைவட்டம், மறைமாவட்டம் ஆகிய தளங்களில் மிகச் சிறப்பாகப் பங்கேற்றுள்ளோம். நமது அருள் வாழ்வை ஆழப்படுத்தும் வழிகளை ஆய்ந்தறிந்தோம். நமது திரு அவை உயிரோட்டமானதாக, இயக்கத் தன்மையுடைதாகத் தன்னையே மாற்றிக்கொள்வதற்கான செயல் திட்டங்களைத் தீட்டியுள்ளோம். இருப்பினும் இச்செயல்முறையில் நமது இளைஞர்கள் பெருவாரியாகப் பங்கேற்கவில்லை என்பதைத் திறந்த மனத்துடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். இப்போக்கு அவர்கள் நம்மை விட்டு விலகியுள்ளனர் அல்லது நாம் அவர்களைக் கண்டு கொள்ளவில்லை என்பதையே வெளிப்படுத்துகின்றது. அவர்களை உள்ளிணைப்பதற்காகத் திரு அவையில் நாம் மேற்கொள்ளும் பணிகள் இணைந்து பயணிக்கும் செயல்முறை கொண்டவையாக இருக்கவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ், ‘கிறிஸ்து வாழ்கிறார் (எண். 206) என்ற திருத்தூது ஊக்கவுரையில் தெளிவு படுத்துகின்றார். இதனைக் கருத்தில் கொண்டு, இளைஞர்கள் இணைந்து பயணிக்கும் செயல்முறையில் பங்கேற்கும் வகையில் இளைஞர் மாமன்றத்தை ஒருங்கிணைக்க தமிழக ஆயர்கள் ஆவன செய்துள்ளனர்.

இளைஞர் மாமன்றம் - 2023

இன்றைய நடைமுறையில் கொரோனா பெருந்தொற்றின் அலைகள் நமது வலுவற்ற தன்மையையும் தனியாளாக நம்மால் எதையும் செய்ய இயலாது என்பதையும் உணர்த்தியுள்ளன. அதே வேளையில், எண்மின் ஊடகங்கள் (Digital Media) உருவாக்கியுள்ள மெய்நிகர் உலகு (Virtual World) நம்மிடையே தொடர்பற்ற தன்மையினை உருவாக்கியுள்ளது. இவ்வேளையில், ஒருவர் மற்றவரை நேரடியாகச் சந்தித்து, பொது நலனிற்காகத் தோழமையுறவுடன் இணைந்து வரவேண்டியது காலத்தின் கட்டாயம். தேங்கும் தன்மை வளர்ச்சியைச் சிதைக்கும் தளர்ச்சியை, சோர்வை, ஆர்வமின்மையை உருவாக்கும்; இயங்கும் தன்மையே நம்மை முன்னோக்கி இட்டுச் செல்லும்; உயிரோட்டத்துடன் வாழத் தூண்டும். எனவே, உலகை மாற்றுவதற்கான ஆற்றல், துணிச்சல், படைப்புத் திறன் கொண்டுள்ள ஆண், பெண் இளைஞர்கள் தகுந்த வளர்ச்சி காண்பதற்கும், ஆளுமையை வளர்த்தெடுப்பதற்கும், தலைமைத்துவத்தில் வளர்வதற்கும் இணைந்து இயக்கமாக ஒருங்கிணைவது காலத்தின் கட்டாயம். இதனைக் கருத்தில் கொண்டு, இணைந்து பயணிக்கும் செயல்முறையில் ‘இணைந்து இயங்கும் இளைஞராக: விழிப்புணர்வு, பொறுப்புணர்வு, திறன்மிகு உணர்வு என்ற கருப்பொருளில் இளைஞர் மாமன்றம் 2023- ஐ நடத்த உள்ளோம். இணைந்து இயங்கும் இளைஞர் அனைவரும் நான், என் குடும்பம், என் ஊர், என் பங்கு, என் மறைமாவட்டம், என் நாடு, என் திரு அவை, என் உலகு என அனைத்துத் தளங்கள் பற்றிய தெளிவு பெறுகின்றனர். இத்தளங்களில் நிகழும் நேர்நிலை, எதிர்மறைத் தாக்கங்கள் பற்றிய விழிப்புணர்வு பெறுகின்றனர்; ஒதுங்கிப்போகும் நிலையிலிருந்து விடுபடுகின்றனர். இணைந்து பயணிக்கும் செயல்முறை எதிர்மறைக் கூறுகளை அகற்ற வேண்டிய கடமை ஒவ்வொருவருக்கும் உண்டு என்பதை உணர்த்துகிறது. இதற்கான செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய கட்டுப்பாடு தங்களுக்கு உண்டு என்ற பொறுப்புணர்வை உருவாக்குகிறது. மாற்றத்திற்கான இச்செயல்பாடுகளை இளைஞர் தமக்கே உரிய திறன்மிகு உணர்வால் (படைப்பாற்றலால்) செயல்படுத்த முன்வரும்போது, நமது இளைஞர் அனைவரும் இறைவனில் இப்பொழுதாக ஒளிர்வர்!

மாமன்ற தொடக்க நிகழ்வு

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மறைமாவட்டங்களில் உள்ள அனைத்துப் பங்குகளிலும், துறவற அவைகளின் நிறுவனங்களிலும், கல்லூரிகளிலும் எதிர்வரும் ஆகத்து 07 (ஞாயிறு) அன்று இளைஞர் ஞாயிறானது கொண்டாடப்பட உள்ளது. அந்நாளில் அனைத்துப் பங்குகளிலும், துறவு அவைகளின் நிறுவனங்களிலும் மாமன்ற தொடக்க விழாவினை நிகழ்த்த உங்களை அன்போடு அழைக்கின்றோம். அந்நாளில் இளைஞர் மாமன்றத்திற்கான இலட்சினையை இறைமக்களுக்கு அறிமுகப்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றோம். தமிழ்நாடு இளைஞர் பணிக்குழு நமக்கு உதவும் பொருட்டு வழங்கியுள்ள இளைஞர் ஞாயிறு திருவழிபாட்டுக் குறிப்புகளை அடியொற்றி, ஆண், பெண் இளைஞர்கள் தங்களது திறன்மிகு உணர்வுடன் இளைஞர் ஞாயிறு திருப்பலியைக் கொண்டாட உதவி செய்யுமாறு கோருகின்றோம்.

மாமன்றத்திற்கான வழிமுறை

இளைஞர் மாமன்றத்தினை தோழமையாட்சியின் (Virtual World)

வழிமுறையில் இளைஞர்கள் முன்னெடுக்க உள்ளனர். எவரும் ஒதுக்கப்படாதவாறு, யாரும் ஒதுங்கிவிடாதவாறு அனைவரையும் உள்ளடக்கி, அனைவரது கருத்துகளும் ஓங்கி ஒலிப்பதற்கு ஏற்ப, இந்த வழிமுறை நமக்கு உதவ உள்ளது. இம்முறையினை இளைஞர்கள் கற்றுக்கொள்ளவும் தங்களது கலந்துரையாடல்களில் பயன்படுத்தவும் உதவி செய்வோம்.

மாமன்ற செயல்முறைகள்

செப்டம்பர் 01 முதல் நவம்பர் 30 முடிய பங்குகளிலும் துறவு அவைகளின் நிறுவனங்களிலும் மாமன்ற கருப்பொருள்கள் கலந்துரையாடப்பட வேண்டும். இளைஞர்கள் வெளிப்படுத்தும் கருத்துகள் அனைத்தும் அந்நாட்களில் தொகுக்கப்பட வேண்டும். டிசம்பர் முதல் ஏப்ரல் முடிய மறைவட்டம், மறைமாவட்டம், மண்டலம், தமிழ்நாடு ஆகிய தளங்களில் இளைஞர்களிடருந்து பெறப்பட்ட கருத்துகள் தொகுக்கப்படும். மே மாதத்தில் தமிழ்நாடு அளவில் இளைஞர் மாமன்றம் - 2023 ஆனது கொண்டாடப்படும்.

இளைஞர்களது கரிசனைகள், வினாக்கள், வாழ்வுச் சிக்கல்கள், கனவுகள், எதிர்பார்ப்புகள் ஆகியவற்றிற்கு நெருக்கமாக நாம் இருப்போம்; அவர்களை விரித்த கைகளோடு வரவேற்போம். நாம் தொடங்கிய இளைஞர் ஆண்டு - 2020, கோவிட்- 19 பெருந்தொற்றின் காரணமாக நலிவடைந்த சூழலில், இளைஞர் மாமன்ற செயல்முறையின் மூலம், இளைஞர்களது குரல் தமிழ்நாடு திரு அவையில் ஓங்கி ஒலிக்கச் செய்வோம். மாற்றத்தினை உருவாக்கும் மாமனிதர்களான அவர்கள் தங்களது பொறுப்பை ஏற்றுச் செயல்பட உதவுவோம். திருத்தந்தை பிரான்சிஸ் கூறுவது போல. “நாம் அனைவரும் இணைந்து திரு அவையாகிய ஒரே படகில் (வள்ளத்தில்) ஏறி, தூய ஆவியாரின் புதுப்பிக்கும் இயக்க ஆற்றலால் இணைந்தே ஒரு சிறந்த உலகத்தைத் தேடுவோம்.”

இறைஆசியும் அன்னை மரியின் பரிந்துரையும் என்றும் உங்களோடு இருப்பனவாக!

கிறிஸ்துவின் மனநிலையில்,

 

ஆயர் நசரேன் சூசை (கோட்டாறு ஆயர்)

தலைவர் - தமிழ்நாடு இளைஞர் பணிக்குழு