Namvazhvu
ஞாயிறு தோழன் ஆண்டின் பொதுக்காலம் 20ஆம் ஞாயிறு -எரே 38:4-6, 8-10, எபி 12:1-4, லூக் 12:49-53
Friday, 05 Aug 2022 12:06 pm
Namvazhvu

Namvazhvu

திருப்பலி முன்னுரை

ஆண்டவர் இயேசுவின் பிறப்பின்போது, விண்ணகத்தூதர் அணி, “மண்ணுலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக” என்று பாடினார்கள். ஆண்டவர் இயேசு கிறிஸ்து தன் சீடரை சந்தித்தபோதெல்லாம் உங்களுக்கு அமைதி உரித்தாகுக என்று கூறினார். உலகம் தரமுடியாத அமைதியை நான் உங்களுக்கு தருவேன் என்று சொன்னவர், இராயப்பா வாளை உறையில்போடு என்று சொன்னவர், இன்றைய நற்செய்தியில், “மண்ணுலகில் அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்று நினைக்கிறீர்களா? இல்லை பிளவு உண்டாக்கவே வந்தேன்,” என்று சொல்லுகிறார். ஏன் ஆண்டவர் இவ்வாறு சொல்ல வேண்டும்? இதற்கான காரணம் என்ன என்று பார்க்கிறபோது, ஆண்டவர் ஏற்படுத்தப் போகிற பிளவு ஏதோ போரினாலோ, வாளினாலோ நிகழப்போவது அல்ல; மாறாக, அவரின் வார்த்தையினால் ஏற்படப்போகிற பிளவு. என்னைப் புறக்கணித்து நான் சொல்வதை ஏற்றுக்கொள்ளாதவருக்குத் தீர்ப்பளிக்கும் ஒன்று உண்டு. என் வார்த்தையே அது. இறுதிநாளில் அவர்களுக்கு அது தண்டனைத் தீர்ப்பு அளிக்கும் என்று, யோவான் நற்செய்தியில் ஆண்டவர் கூறுகிறார். ஒரே குடும்பத்தில் இருக்கும் ஐவரில், இருவர் ஆண்டவரின் வார்த்தையைக் கேட்டு அதன்படி வாழ்வோராகவும், மூவர் ஆண்டவரின் வார்த்தையை புறக்கணித்து, அதன்படி வாழாதவராகவும் இருப்பர். இவ்வாறு, ஒரே குடும்பத்தில் ஆண்டவரின் வார்த்தையின்படி வாழும் தந்தைக்கு எதிராக மகனும், தாயிற்கு எதிராக மகளும், மாமியாருக்கு எதிராக மருமகளும் பிளவுபட்டு போவார்கள் என்பதைதான், ஆண்டவர் இயேசு கிறிஸ்து இன்று உணர்த்துகிறார். ஆண்டவரின் வார்த்தையைக் கேட்டு அதன்படி வாழ்ந்து, ஒரே குடும்பமாய் இறையரசில் இணைந்திட இத்திருப்பலியில் பக்தியோடு பங்கு பெறுவோம்.

முதல் வாசக முன்னுரை

தன் மக்களுக்கு அறிவுறுத்துமாறு, தந்தை கடவுள் உரைத்ததை எடுத்துக் கூறியதற்காக, இறைவாக்கினர் எரேமியா, தன் சொந்த மக்களால் வெறுக்கப்பட்டு, தண்டிக்கப்பட்டு பாழ்ங்கிணற்றுக்குள் தள்ளப்பட்டார் என்று கூறும் இம்முதல் வாசகத்தைக் கேட்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

தமது தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக, எந்த இழிவையும் பொருட்படுத்தாமல், சிலுவை சாவை ஏற்றுக் கொண்ட, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மீது, நம் கண்களை பதிய வைப்போம் என்று கூறும் இவ்விரண்டாம் வாசகத்தைக் கேட்போம்.

மன்றாட்டுகள்

1. வாழ்வளிப்பவரே! உம் திரு அவையையும், அதன் திருப்பணியாளர்களையும் நிறைவாக ஆசீர்வதியும். தீ மூட்டவே வந்தேன் என்ற உமது திருமகனின் வார்த்தையை அடித்தளமாகக் கொண்டு, இறைவார்த்தை என்னும் நெருப்பால் இவ்வுலகினை தூய்மையாக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. வழிநடத்துபவரே! எம் நாட்டை ஆளும் தலைவர்கள், இறைவாக்கினர் எரேமியா வழியாக நீர் உரைத்தது போல, மக்களின் வாழ்வையும், நலனையும் கருத்தில் கொண்டு, போர்க்குழப்பங்களை தவிர்த்து முன்மதியோடு செயல்பட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. விடுதலை தருபவரே! எம் தாய் திருநாட்டின் 75 ஆவது சுதந்திரதின விழாவை கொண்டாட தயாராகிக் கொண்டிருக்கும் நாங்கள், எம் முன்னோர்கள் பெற்றுத் தந்த சுதந்திரத்தை சரியாக பயன்படுத்திடவும், எவரையும் அடிமைபடுத்தாமல் சுயமரியாதையோடு வாழ்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. வரங்களை பொழிபவரே! குடும்பம் என்னும் குட்டித்திரு அவையில் நாங்கள் அனைவரும் ஒருவர் ஒருவரை அன்பு செய்து, அனுதினமும் செபம் செய்து, உன் வார்த்தைகளை நாள்தோறும் வாசித்து, வாழ்வாக்கி உம் இறையரசில் பங்குபெற்றிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. எம்மை என்றும் காப்பவரே! எம் நாட்டை பாதுகாக்க கடுங்குளிரையும், பனியையும் ஒரு பொருட்டாக கருதாமல், தீவிரமாய் உழைத்துக் கொண்டிருக்கும் எம் நாட்டு இராணுவ வீரர்களையும், காவலர்களையும் ஆசீர்வதித்து, பாதுகாத்து, வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.