தூய கன்னி மரியாவின் விண்ணேற்பு, கத்தோலிக்க திருச்சபை மற்றும் கிழக்கு மரபு வழி திருச்சபை உள்ளிட்ட பல திருச்சபைகளின் நம்பிக்கையின்படி, மரியா தனது உலக வாழ்வின் முடிவுக்குப்பின் விண்ணகத்திற்கு உடலோடு எடுத்துக்கொள்ளப்பட்டார் என்னும் நம்பிக்கையினைக் குறிக்கும். 1950 இல் திருத்தந்தை பன்னிரெண்டாம் பயஸ், அன்னை மரியா விண்ணேற்பு அடைந்ததை கிறித்தவ விசுவாச உண்மையாக அறிவித்தார். கத்தோலிக்க திருச்சபையில் இது பெருவிழாவும், கடன் திருநாளும் ஆகும். இவ்விழாவானது ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.
பழைய ஏற்பாடு நூல்களில் மூவரும், புதிய ஏற்பாடு நூல்களில் இறைமகன் இயேசுவினால் மூவரும், இறைமகன் இயேசுவும், இயேசுவின் உயிர்ப்பிற்குப்பின் அடையாளமும், எண்ணிக்கையும் தெரியாத அளவில் எருசலேம் நகர கல்லறைகளிலிருந்து பல புனிதர்களும், இராயப்பரால் ஒருவரும், சின்னப்பரால் (பவுல்) ஒருவரும் என பத்து உயிர்ப்பு நிகழ்வுகளை திருவிவிலியத்தில் நாம் படிக்க காணலாம். நம் ஆண்டவர் மீண்டுமாக தோன்றியோ அல்லது தூய ஆவியின் வல்லமையின் துணை கொண்டு அவரது அருட்சீடர்கள் மூலம் அன்னை மரியாவையும் அந்த உயிர்ப்பின் பட்டியலில் இடம் பெற செய்திருக்கலாம். ஏன் அன்னை மரியா, இறந்த நிலையில் விண்ணேற்பு அடைந்தார் என்பது பலருக்கும் சற்று வியப்பாக இருக்கலாம்.
இறைவனின் கட்டளையை மீறி, மரத்தில் இருந்து கனியை பறித்ததால், கடவுளின் அன்பு பிணைப்பிலிருந்து வெளியேற்றப்பட்டாள் ஏவாளும் அதை உண்ட அவள் கணவர் ஆதாமும். இறைவனின் கட்டளைக்கு செவிமடுத்து, இறைமகன் இயேசு என்னும் நற்கனியை பெற்றெடுத்து, அவர் நெஞ்சத்தில் வால் ஊடுருவும் (லூக் 2:35) நாளை எண்ணி எண்ணி, ஆற்றொண்ணா வேதனையுடன் அந்த நற்கனியை, சிலுவை மரத்தில் ஒப்படைக்க உதவியவர் அன்னை மரியா! மானிடர் காணும் வகையில் அவர் ஏன் உயிர்ப்பிக்கப்படவில்லை என்ற கேள்வியில் வலு உள்ளது இயற்கை தானே?
இங்குதான் நம் மூவொரு கடவுள், அன்னை மரியாவை எவ்வளவு சிறப்பான முறையில் மகிமைப்படுத்தியுள்ளனர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அன்னை மரியாவை தூய ஆவியோ, இறைமகன் இயேசுவோ தனிப்பட்ட முறையில் தேர்ந்துகொள்ளவில்லை. மூவொரு இறைவன் ஒருமித்து இருக்கையில் (லூக் 1: 28), உன்னத கடவுளின் வல்லமை மரியாவின் மேல் நிழலிடும்போது, தூய ஆவியால் நிறைவுற்று, இறைமகன் இயேசுவை கருத்தாங்கியதாக (லூக் 1: 35) நாம் படிக்கிறோம், நம்புகிறோம்! இதனால்தான், இறைமகன் இயேசுவோ, தூய ஆவியோ அன்னை மரியாவை தனிப்பட்ட விதத்தில் உயிரேற்றம் செய்யவில்லை! இயேசுவின் பெயரால், தூய ஆவியின் துணைக்கொண்டு, அற்ப மனிதர்களால் அன்னை மரியாவை உயிர்ப்பிக்கும் அளவுக்கு மூவொரு இறைவன் அன்னை மரியாவை தாழ்நிலைக்கு தள்ளவும் விரும்பவில்லை! “ஏனெனில், அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இது முதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறு பெற்றவர் என்பர். ஏனெனில், வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பதே அவரது பெயர்!”, என்று அன்னை மரியா உவகையுடன் பாடி மகிழ்ந்ததை (லூக் 1: 48, 49) இங்கே நினைவு கூறுவோம்.
எடுத்துக்காட்டாக, நம் நாட்டில் தங்கள் தன்னலமற்ற பணிமூலம் தொண்டாற்றிய நபர்களை சிறப்பிக்கும் வேளையில், அவர்களை நம்நாட்டின் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அழைத்து பெரியோர்கள் முன்னிலையில் பெருமைப்படுத்துவது வழக்கமான நிகழ்வாக உள்ளது. அதைவிட மேலான வகையில்தான் நம் மூவொரு இறைவன், அன்னையை மரித்த உடலோடு விண்ணத்திற்கு அழைத்துச்சென்று, அனைத்து வான தூதர்கள், இறை வாக்கினர்கள், புனிதர்கள் புடைசூழ உயிர்ப்பித்து, மண்ணுலகு மற்றும் விண்ணுலகு அனைத்திற்கும், இரக்கத்தின் அரசியாக முடிசூட்டி, விண்ணுலகிற்கும், மண்ணுலகிற்கும் என்றென்றும் இணைப்பு பாலமாக மாட்சிமைப்படுத்தியுள்ளார் என்பதை நாம் உணர்ந்து மகிழ்ந்திடல் வேண்டும்!
மரியே வாழ்க!
இறைவன் என்றென்றும் வாழ்த்தப் பெறுவாராக!