Namvazhvu
மோனிஷாவின் சாதனை ஏழை கத்தோலிக்க பழங்குடியின மாணவி பிளஸ் 2 தேர்வில் முதலிடம்
Thursday, 18 Aug 2022 09:53 am
Namvazhvu

Namvazhvu

ஒடிசாவின் கந்தமால், தரிங்பாடியில் உள்ள நீலகண்டர் சாஹி எனும் சிறிய கிராமத்தில் வசிக்கும் ஒரு தினக்கூலியின் மகள் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்று சாதனை படைத்திருக்கிறார்.

பிசிகேசன பிரதான் மற்றும் சந்தோஷினி என்கிற கத்தோலிக்க பழங்குடியின தம்பதியருக்கு 6 குழந்தைகளில் 4வது குழந்தையாக பிறந்தவர் மோனிஷா பிரதான். இவர் அண்மையில் வெளியான 12 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 600 மதிப்பெண்களுக்கு 554 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்திருக்கிறார். “ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருளாலும், என் பெற்றோரின் உதவியாளும், என் ஆசிரியர்களின் வழிகாட்டுதலாலும் மற்றும் என்னுடைய கடின உழைப்பாலும் நான் இத்தேர்வில் இவ்வளவு மதிப்பெண்களை பெற முடிந்தது. அறிவியல் படிக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. ஆனால் குடும்பத்தின் ஏழ்மை காரணமாக என்னால் அறிவியலை தேர்ந்தெடுத்து படிக்க முடியவில்லை. எதிர்காலத்திலே IAS படிக்க வேண்டும் என்பதே என் கனவுஎன்று கூறினார். மோனிஷாவின் தந்தை ஆரம்பத்தில் மாடு வண்டிகளை ஓட்டி தன் குடும்பத்தை காப்பாற்றியவர். பிறகு லாரிகளை ஓட்ட கற்றுக் கொண்டு, ஒரு ஓட்டுநராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். “எனக்கு ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மேல் அளவற்ற நம்பிக்கை இருக்கிறது. இதுவரை ஞாயிறு திருப்பலியை நான் தவற விட்டதில்லை. இன்று நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன். ஏனெனில் என்னுடைய மகள் என்னுடைய கவலைகளை எல்லாம் மகிழ்ச்சியாக மாற்றி இருக்கிறார்என்று மேட்டர்ஸ் இந்தியா செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

ஒரு சாதாரண தினக்கூலியின் மகள், வறுமை கோட்டிற்கு கீழே இருக்கும் குடும்பத்தை சேர்ந்தவர், ஒரு கத்தோலிக்க பழங்குடியினத்தை சேர்ந்தவர் எனப் பலவீனமான பின்னணிகளுடன் இப்படி ஒரு சாதனை செய்வது என்பது ஒரு சாதாரண காரியம் அல்ல. மோனிஷாவின் சாதனை ஒடிசாவில் வாழும் அத்தனை பேருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கும்என்று தரங்பாடியின் உதவி பங்குதந்தை தீபக் கூறினார்.