Namvazhvu
திருத்தந்தை பிரான்சிஸ் மரியா திருத்தலம் சென்று உக்ரைனுக்காகச் செபியுங்கள்
Friday, 19 Aug 2022 07:24 am
Namvazhvu

Namvazhvu

அன்னை மரியாவின் விண்ணேற்பு பெருவிழாவான இந்நாளில், அவ்வன்னையின் ஏதாவது ஒரு திருத்தலம் சென்று, போர் இடம்பெறும் உக்ரைனில் அமைதி நிலவச் செபியுங்கள் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆகஸ்ட் 15, திங்களன்று விண்ணப்பித்தார்.

அன்னை மரியாவின் விண்ணேற்பு பெருவிழாவான ஆகஸ்ட் 15, திங்களன்று நண்பகலில் வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த ஏறக்குறைய பத்தாயிரம் திருப்பயணிகளுக்கு மூவேளை செப உரையாற்றியபின்னர் இவ்வாறு திருத்தந்தை பிரான்சிஸ் ஊக்கப்படுத்தியுள்ளார்.

நம் அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்நாளில், நம் விண்ணகத் தாய் போற்றப்படும் ஏதாவது ஒரு திருத்தலத்திற்குச் செல்லும் வாய்ப்பைத் தேடுங்கள் என்று கூறியுள்ள திருத்தந்தை, உரோம் நகரின் மக்கள் பலரும், திருப்பயணிகளும், அந்நகரின் மேரி மேஜர் பெருங்கோவில் சென்று, உரோம் மக்களுக்குக் குணமளிக்கும் அன்னை மரியாவிடம்  (Salus Populi Romani) செபித்துவருவதையும் நினைவுகூர்ந்தார்.இப்பெருங்கோவிலில் திருத்தந்தை 15ம் பெனடிக்ட் அவர்களால் வைக்கப்பட்ட அமைதியின் அரசி, அன்னை மரியாவின் திருவுருவமும் உள்ளது எனவும் குறிப்பிட்ட திருத்தந்தை, கடவுள் இவ்வுலகிற்கு, குறிப்பாக உக்ரைனுக்கு அமைதி நல்க அன்னை மரியாவின் பரிந்துரையைத் தொடர்ந்து வேண்டுவோம் என்றும் கூறியுள்ளார்.

இறுதியில், அனைவருக்கும், சிறப்பாக, வெகுதொலைவில், தனிமையில் இருக்கின்ற மற்றும் நோயாளிகளுக்கு தன் பெருவிழா நல்வாழ்த்துக்களைத் தெரிவித்து, தனக்காகச் செபிக்க மறக்கவேண்டாம் எனக் கேட்டுக்கொண்டு,  திங்கள் மூவேளை செப உரையை திருத்தந்தை பிரான்சிஸ் நிறைவுசெய்தார்.