ஆகஸ்ட் 14, ஞாயிறு நண்பகலில் வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு மூவேளை செப உரையாற்றியபின்னர், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வறட்சியை எதிர்கொள்ளும் சொமாலியா, மற்றும், அதன் அண்டை நாடுகளுக்கு உதவுமாறு, உலக சமுதாயத்திற்கு திருத்தந்தை பிரான்சிஸ் அழைப்புவிடுத்துள்ளார்.
கடினமான சூழல்களால் ஏற்கனவே துன்புறும் சொமாலியர்கள், தற்போது அநாட்டில் நிலவும் கடும் வறட்சியால் மரண அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றனர் என்று கூறியுள்ள திருத்தந்தை, அம்மக்களுக்கு உலகளாவிய ஒருமைப்பாட்டுணர்வு உடனடியாக கிடைக்கும் என்ற தன் நம்பிக்கையையும் தெரிவித்துள்ளார்.
உலகில் இடம்பெறும் போர், நம் கவனத்தைத் திசைதிருப்பியிருந்தாலும், பசி, நோய், கல்வியறிவின்மை போன்றவற்றுக்கு எதிராகவும் மிகுந்த அர்ப்பணத்தோடு நாம் செயல்படவேண்டியுள்ளது எனவும் திருத்தந்தை கூறியுள்ளார்.
சொமாலியாவில் அதிர்ச்சியூட்டும் நிலை
ஆப்ரிக்க நாடான சொமாலியாவில் வருகிற செப்டம்பர் மாதத்திற்குள் அறுவடை இடம்பெறவில்லையென்றால், அந்நாட்டின் எட்டு மாநிலங்கள் கடும் பஞ்சத்தை எதிர்கொள்ளும் என்றும், வறட்சியால் இவ்வாண்டில் அந்நாட்டின் 7,55,000க்கு மேற்பட்ட மக்கள், ஏற்கனவே நாட்டிற்குள்ளே புலம்பெயர்ந்துள்ளனர் என்று ஐ.நா. நிறுவனங்கள் கூறியுள்ளன.
உக்ரைனுக்காக இறைவேண்டல்
மேலும், திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், இருபது ஆண்டுகளுக்குமுன்னர், போலந்தின் கிராக்கோவ் இறை இரக்கத் திருத்தலத்தில், உலகை இறை இரக்கத்திடம் அர்ப்பணித்ததன் நினைவாக, அத்திருத்தலத்தில் ஞாயிறன்று கூடியிருந்த மக்களை திருத்தந்தை பிரான்சிஸ் நினைவுகூர்ந்தார்.
இறைவேண்டலிலும், சான்றுபகர்வதிலும் நம் வாழ்வைப் புதுப்பிக்கவேண்டியது எக்காலத்தையும்விட இக்காலத்தில் அதிகம் தேவைப்படுகின்றது என்றுரைத்துள்ள திருத்தந்தை, இறை இரக்கமே, நம்மையும் உலகம் முழுவதையும் மீட்கும் பாதையாகும் என்று கூறியுள்ளார்.
உக்ரைனில் சிதைக்கப்படும் மக்கள் மீது இறை இரக்கம் சிறப்பாகப் பொழியப்படுமாறு செபிப்போம் எனவும், ஆகஸ்ட் 14, ஞாயிறு நண்பகலில் வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளிடம் திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.
2002ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17ம் தேதி, போலந்தின் Łagiewnikiவிலுள்ள புனித பவுஸ்தீனா கொவாலஸ்கா கல்லறையில், திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், இப்புனிதருக்கு இயேசு அளித்த வாக்குறுதியை நினைவுகூர்ந்து, இவ்வுலகை இறை இரக்கத்திடம் அர்ப்பணித்தார்.