Namvazhvu
இரஷ்ய-உக்ரைன் போர் தொடரும் போரால் துயருறும் உக்ரைன் மக்கள்
Friday, 19 Aug 2022 09:43 am
Namvazhvu

Namvazhvu

உக்ரைன் மக்கள் கொடூரமான போரால் இன்னும் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்று, ஆகஸ்ட் 10, புதன் காலையில், வத்திக்கானின் திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கத்தில் தான் வழங்கிய பொது மறைக்கல்வியுரைக்குப் பின்பு அங்குக்  குழுமியிருந்த விசுவாசிகளிடம் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.

மேலும், இந்தத் துயரமான நேரத்தில் புலம்பெயர்ந்து வரும் ஏராளமான மக்களுக்காக இறைவேண்டல் செய்யுமாறும் விசுவாசிகளிடம் விண்ணப்பித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒவ்வொருவரும் திருஅவையிலும், தங்கள் குடும்பங்களிலும் சமூகத்திலும் அமைதியைக் கட்டியெழுப்புமாறும் கேட்டுக் கொண்டார்.

இவ்வாண்டு பிப்ரவரி மாதம் 24ம் தேதி இரஷ்யா, உக்ரைனை ஆக்ரமிக்கத் தொடங்கியதற்குப் பின்னர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எண்ணற்ற முறையில்  உக்ரைனுடன் தனது நெருக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் தருவதற்காக தனிப்பட்ட முறையில் கியேவுக்குச் செல்வதற்கான தனது விருப்பத்தையும் வெளிப்படுத்தியிருந்தார். அதேவேளையில், இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுகோள் விடுக்கும்பொருட்டுமாஸ்கோ செல்ல தான் தயாராக இருப்பதாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியபோதிலும், இரஷ்யாவிடமிருந்து அதற்கான அழைப்பு எதுவும் வெளிப்படையாக வரவில்லை என்று நேர்காணல் ஒன்றில் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் ஏற்கனவே கூறியிருந்தார்

இரஷ்ய-உக்ரைன் போர் 168-வது நாளை அடைந்துள்ள நிலையில், இப்போர் விரைவில் முடிவுக்கு வருவதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. புதன்கிழமை, இரஷ்யா உக்ரைனின் மத்திய டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பகுதியில் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் ஒரே இரவில் ஏறத்தாழ 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.