ஆகஸ்ட் 10, புதன் காலையில், வத்திக்கானின் திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கத்தில், பொது மறைக்கல்வியுரையை ஆற்றியபின்னர், அவ்வரங்கத்தில் மூன்றாம் பாலினக் குழு ஒன்றையும் திருத்தந்தை பிரான்சிஸ் சந்தித்துள்ளார்.
இத்தாலியின் டோர்வாயானிக்கா பங்குத்தந்தை அருள்பணி ஆன்ரேயா கோனோச்சியா , இயேசுவின் சிறிய சகோதரிகள் சபையின் அருள்சகோதரி ஜெனிவீவ் ஜின்னிங்க்ரோஸ் ஆகிய இருவரின் தலைமையில் இந்நிகழ்வில் கலந்துகொண்ட மூன்றாம் பாலினக் குழுவினரைச் சந்தித்து அவர்களோடு தன் ஒருமைப்பாட்டுணர்வையும் திருத்தந்தை தெரிவித்தார்.
அப்பங்குத்தளத்தின் அமலமரி குழுமத்தால் ஆதரிக்கப்படும் இக்குழுவினரை திருத்தந்தை சந்தித்தது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அருள்பணி ஆன்ரேயா கோனோச்சியா அவர்கள், கற்பனைசெய்ய இயலாத வகையில் பெருந்துன்பங்களோடு வாழ்கின்ற மக்களோடு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மிக நெருக்கமாக இருக்கிறார் என்பதை, இச்சந்திப்பில் உணர முடிந்தது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இவ்வாண்டு ஏப்ரல் 27, ஜூன் 22, ஆகஸ்ட் 3 ஆகிய தேதிகளிலும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மூன்றாம் பாலினத்தவர் சிலரைச் சந்தித்துள்ளார் என்று, வத்திக்கானின் லொசர்வாத்தோரே ரொமானோ நாளிதழ் பதிவுசெய்திருப்பது குறிப்பிடத்தக்கது.