Namvazhvu
திருத்தந்தை வலைத்தள தொடர்பு மட்டுமே, சமூகத்தில் உறவை வளர்க்காது
Friday, 19 Aug 2022 09:59 am
Namvazhvu

Namvazhvu

இக்காலத்தில் தொழில்நுட்பத்தை ஒரு வழிபடும் தெய்வமாக நினைக்காமலிருத்தலே, அது முன்வைக்கும் சவாலுக்குப் பதிலளிக்கும் ஒரே வழி என, திருப்பீட சமூகத்தொடர்பு அவையின் தலைவர் திருவாளர் பவுலோ ரூஃபினி அவர்கள் சிக்னிஸ்  (SIGNIS) உலக மாநாட்டில் அறிவித்துள்ளார்.

தென் கொரியாவின் செயோல் நகரில், “டிஜிட்டல் உலகில் அமைதி” என்ற தலைப்பில் சிக்னிஸ்  எனப்படும் உலக கத்தோலிக்க சமூகத்தொடர்பாளர்கள் அமைப்பு, ஆகஸ்ட் 16,  செவ்வாயன்று தொடங்கியுள்ள நான்கு நாள் உலக மாநாட்டில் உரையாற்றிய ரூஃபினி அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்.

சுதந்திரம், சந்திப்பு, எதிர்பாராத வியப்பு, மனமாற்றம், நுண்மதி, கைம்மாறுகருதா அன்பு போன்றவை உள்ளிட்ட சில காரியங்கள், தொழில்நுட்பத்தால் ஒருபோதும் ஈடுசெய்யப்பட முடியாதவை என்பதை வலியுறுத்திக் குறிப்பிட்ட ரூஃபினி அவர்கள், மனிதரின் அறிவுத் திறமையின் கனியாக விளங்குகின்ற தொழில்நுட்பத்தின் சாதனைகளையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

வலைத்தளங்கள் வழியாக நடைபெறும் கருத்தரங்கு, மருத்துவம், வர்த்தகம் போன்ற தொழில்நுட்ப சாதனைகள், சில பத்தாண்டுகளுக்கு முன்பு நினைத்துப் பார்க்க இயலாதவைகளாக இருந்தன என்று, செயோல் மாநாட்டில் உரையாற்றிய ரூஃபினி அவர்கள், இணையதளங்கள் வழியாக நாம் தொடர்பில் இருக்கின்றோம், அதேநேரம், தனிமையையும் உணர்கின்றோம் என்று கூறியுள்ளார்.

சமூகத் தொடர்பின்றி, வெறும் தொடர்பு மட்டுமே இருக்கும்போது தனிமை உணர்வு எவ்வாறு உருவாகின்றது? நம் தொடர்புகளில் இந்த உணர்வை அகற்ற குறைபடுவது என்ன? உள்ளிட்ட இதனால் உருவாகும் பிரச்சனைகள் குறித்து, தனியாகவும், குழுவாகவும் மனச்சான்றைப் பரிசோதித்துப் பார்க்கவேண்டியது அவசியம் என்பதையும் ரூஃபினி அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.

மகிழ்வை விலைகொடுத்து வாங்க முடியாது

2014ஆம் ஆண்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தென் கொரியாவில் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டபோது, சால்மோய் திருத்தலத்தில் இளையோரைச் சந்தித்து உரையாற்றுகையில், மகிழ்வை விலைகொடுத்து வாங்க இயலாது, அவ்வாறு  வாங்கும்போதெல்லாம், அது மறைவதை விரைவில் உணர்வீர்கள், அன்பால் கிடைக்கும் மகிழ்வு மட்டுமே நிலைத்திருக்கும் எனக் கூறியதை ரூஃபினி அவர்கள் நினைவுபடுத்தியுள்ளார்.

குறுகிய காலத்திற்கே திருப்தியளிக்கும் நுகர்வுக் கலாச்சாரம், மிக ஆழமான மற்றும், நீடித்த மகிழ்வையளிக்கும் என்று குழப்புகிறது, நுகரப்படவேண்டியவை பொருள்களே தவிர, மனிதர்களாகிய நாம் அல்ல எனவும், அன்பை அடிப்படையாகக்கொண்ட தொடர்பே, தனிமையைக் குறைக்கும் மற்றும், மகிழ்வையளிக்கும் என, சிக்னிஸ்  உலக மாநாட்டில் உரையாற்றினார், திருப்பீட சமூகத்தொடர்பு அவையின் தலைவர் பவுலோ ரூஃபினி.

சிக்னிஸ்  உலக மாநாடு

“டிஜிட்டல் உலகில் அமைதி” என்ற தலைப்பில் ஆகஸ்ட் 16 செவ்வாய் முதல், 19 வெள்ளி வரை, SIGNIS உலக மாநாடு செயோல் நகரில் நடைபெற்று வருகிறது. . சிக்னிஸ்  அரசு-சாரா அமைப்பில், நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து, வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம், காணொளி, ஊடகக் கல்வி, வலைத்தளம் ஆகியவற்றில் பணியாற்றுவோர், மற்றும், புதிய தொழில்நுட்ப வல்லுனர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இவ்வாண்டு இம்மாநாடு, இணையதளம் மற்றும், சமூக ஊடகங்கள் வழியாகவும், உறுப்பினர்கள் நேரிடையாகப் பங்குகொள்வதன் வழியாகவும் நடைபெற்றுவருகிறது.