மியான்மார் நாட்டின் சனநாயக ஆதரவுக் கட்சியின் தலைவர் ஆங் சான் சூச்சி அவர்களுக்கு அந்நாட்டு இராணுவ நீதிமன்றம், ஆகஸ்ட் 15 திங்களன்று ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருக்கும் இவ்வேளையில், இராணுவ அரசின் கடும் நடவடிக்கைகள் குறித்து அந்நாட்டு கர்தினால் சார்லஸ் மாங் போ மிகுந்த கவலை தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்குச் சென்றிருந்த கர்தினால் போ அவர்கள், மியான்மாரின் தற்போதைய நிலைமை குறித்து ஊடகங்களிடம் பேசியபோது இவ்வாறு கவலை தெரிவித்துள்ளார்.
தற்போது மியான்மார் இராணுவம் மேற்கொண்டுவரும் அச்சுறுத்தல் மற்றும், வன்முறை நடவடிக்கைகளால் இனிமேல் எவ்வித எதிர்ப்பும் இருக்காது, அதனால் இவ்வாண்டு முடிவதற்குள் நாட்டில் அமைதியைக் கொணரலாம் என அது நினைக்கின்றது என்று, யாங்கூன் பேராயர் கர்தினால் போ அவர்கள் தெரிவித்துள்ளார்.
மியான்மார் இராணுவ அரசு, பல சிறார் உட்பட, 2,100க்கும் மேற்பட்டோரை கொலைசெய்துள்ளது மற்றும், ஏறக்குறைய 15 ஆயிரம் பேரைக் கைதுசெய்துள்ளது என்றும், தற்போதைய நிலவரம் குறித்து எதுவுமே கூற முடியவில்லை என்றும், நிலவரம் ஏற்றுக்கொள்ளப்படமுடியாத அளவுக்கு குழப்பமாக உள்ளது என்றும் கர்தினால் போ அவர்கள் கூறியுள்ளார்.
கிராமங்கள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளன மற்றும், எரிக்கப்பட்டுள்ளன என்றும், நாட்டின் ஐம்பது விழுக்காட்டு மக்கள் வறுமையில் வாழ்கின்றனர் என்றும், குறைந்தது எண்பது இலட்சம் பேருக்கு உணவுப் பாதுகாப்பு தேவைப்படுகின்றது என்றும், இலட்சக்கணக்கானோர் புலம்பெயர்ந்துள்ளனர் என்றும், கர்தினால் போ அவர்கள் கூறியுள்ளார்.
இதற்கிடையே, ஐ.நா. நிறுவனம் அண்மையில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், மியான்மார் இராணுவ அரசு, மனித சமுதாயத்திற்கு எதிராக குற்றம் இழைத்து வருகின்றது என்று கூறப்பட்டுள்ளது.