Namvazhvu
கந்தமால் மாவட்டம் உண்மையான சமத்துவம் தேவை - ஒடிசா கிறிஸ்தவர்கள்
Friday, 19 Aug 2022 11:02 am
Namvazhvu

Namvazhvu

இந்தியா, பிரித்தானிய காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை அடைந்து 75 ஆண்டுகளை நிறைவுசெய்து, 76வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் இவ்வேளையில், நாட்டு மக்கள் அனைவரும் உண்மையான சமத்துவம், மற்றும் ஒற்றுமையில் வாழ்வதற்காக ஒடிசா மாநில கிறிஸ்தவர்கள் கடவுளை மன்றாடினர் என்று ஆசியச் செய்தி கூறுகிறது.

ஆகஸ்ட் 15, திங்களன்று இந்தியாவின் விடுதலைத் திருநாளையும், அன்னை மரியாவின் விண்ணேற்பு பெருவிழாவையும் சிறப்பித்த, ஒடிசாவின் கந்தமால் மாவட்ட கத்தோலிக்கர், நாட்டிற்காகவும், நாட்டு மக்கள், தலைவர்கள், மற்றும், ஆட்சியாளர்களுக்காகவும் உருக்கமாகச் செபித்தனர்.   

2007க்கும், 2008ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தில் இந்து மதத் தீவிரவாதிகளால் கந்தமால் கிறிஸ்தவர்கள் கடுமையான வன்முறைகளையும் அடக்குமுறைகளையும் எதிர்கொண்டனர்.

கந்தமால் மாவட்டத்தில் சிறப்பிக்கப்பட்ட விடுதலைத் திருநாளில், அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள், பொதுநிலையினர் என நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு, ஊழலற்ற சுதந்திரம் நிறைந்த இந்தியாவிற்காக இறைவனை வேண்டினர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய பிரஸ்னா பிஸ்ஹோய்  அவர்கள், நாம் உண்மையிலேயே சுதந்திரத்தை அனுபவிக்கின்றோமா என்ற கேள்வியை எழுப்பியதோடு, வேலைவாய்ப்பில், மதம், இனம் என்ற பாகுபாடு நாட்டில் நிலவுவதையும், கிறிஸ்தவர்களுக்கு எதிரான அடக்குமுறைகள் இடம்பெறுவதையும் குறிப்பிட்டார்.