பாகிஸ்தானில், மனித உரிமைகள் மற்றும், அடிப்படை சுதந்திரங்களை ஊக்குவிக்கும் சட்டங்கள், கொள்கைகள், செயல்பாடுகள் ஆகியவை மேம்படுத்தப்படவேண்டும், பாகுபாடின்றி குடிமக்களுக்கு நீதி கிடைக்க ஆவனசெய்யப்படவேண்டும் போன்ற கோரிக்கைகளை அரசுக்கு முன்வைத்து, அந்நாட்டில் பேரணிகள் நடைபெற்றுள்ளன.
பாகிஸ்தானில் தேசிய சிறுபான்மையினர் நாள் கடைப்பிடிக்கப்பட்ட ஆகஸ்ட் 11, வியாழனன்று, நீதிக்கான குரல் என்ற அமைப்பு ஏற்பாடு செய்த பேரணிகளில் உரையாற்றிய முக்கிய தலைவர்கள், அந்நாட்டில் கிறிஸ்தவர்களும், இந்துக்களும் ஆற்றிவரும் முக்கிய பணிகளை எடுத்துரைத்து, அவர்களோடு தங்களின் ஒருமைப்பாட்டைத் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானின் வளர்ச்சிக்கு, கிறிஸ்தவர்களும், இந்துக்களும் குறிப்பிடத்தக்க பங்கு வகித்திருப்பதையும் விடுத்து, அவர்கள் அநீதிகளையும், பாகுபாட்டையும் எதிர்கொள்கின்றனர் என்று, இப்பேரணி ஒன்றில் உரையாற்றிய அந்த அமைப்பின் தலைவர் ஜோசப் ஜான்சன் அவர்கள், சிறுபான்மையினரின் குடியுரிமைகள் மதிக்கப்படவேண்டும் என்று விண்ணப்பித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தின் லாகூரிலுள்ள சட்டமன்ற கட்டடத்திற்கு முன்பாக, Rwadari Tehreek அமைப்பு இரண்டு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டது.