Namvazhvu
திருத்தந்தை பிரான்சிஸ் நீதியில் பிறப்பது அமைதி
Thursday, 25 Aug 2022 11:43 am
Namvazhvu

Namvazhvu

அமைதி என்பது, நீதியிலிருந்தும், உடன்பிறந்த உணர்விலிருந்தும், நன்றியுணர்வு பெருக்கெடுப்பதிலிருந்தும் பிறப்பதாகும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆகஸ்ட் 23, செவ்வாயன்று கூறியுள்ளார்.

உக்ரைனிலும், உலகின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து போர் இடம்பெற்றுவரும்வேளை, இவ்வுலகுக்கு அமைதி மிகவும் தேவைப்படுகிறது என்பதை தன் உரைகளில் அடிக்கடி வலியுறுத்திக் கூறிவரும் திருத்தந்தை, அமைதி என்ற ஹாஷ்டாக்குடன்செவ்வாயன்று தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட குறுஞ்செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.

அமைதி, இதயத்தின் மனப்பாங்கு எனவும், அது உண்மைக்குப் பணியாற்ற நம்மைத் தூண்டுகிறது எனவும் திருத்தந்தை அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உக்ரைன் நாட்டில் ஆறு மாதங்களாக இடம்பெற்றுவரும் போர், உலக அளவில் கடுமையான பேரிடரை உருவாக்கியுள்ளவேளை, அந்நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என்று தன் மூவேளை செப உரைகள் மற்றும், புதன் மறைக்கல்வி உரைகளில் அடிக்கடி விண்ணப்பித்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், போரைத் தொடுப்பவர்கள், மனித சமுதாயத்தை மறக்கின்றனர் என்றும் கூறியுள்ளார்.

ஒவ்வொரு போரும், நம் அனைவரின் இயலாமையை எடுத்துரைக்கின்றது எனவும், உலகில் அணு ஆயுதப் போர் தொடங்கினால், அது மனித சமுதாயத்திற்கு பயங்கரமான பாதிப்புக்களை ஏற்படுத்தும் எனவும் தன் உரைகளில் கூறிவருகின்ற திருத்தந்தைஉலகில் இடம்பெறும் போர்களைத் தடுத்து நிறுத்துவதற்கான காலம் இதுவே என்பதை உலகினர் உணரவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மனிதர் தங்களையே அழித்துக்கொள்ளும் இக்கொடூரங்களிலிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள தூய ஆவியார் அவர்களைத் தூண்டவேண்டும் என அடிக்கடி செபித்து வருகின்ற திருத்தந்தை, கடவுள், போரின் கடவுள் அல்ல, மாறாக அவர் அமைதியின் கடவுள் எனவும், நாம் அனைவரும் அமைதியின் கருவிகளாகச் செயல்பட அழைக்கப்பட்டுள்ளோம் எனவும், பல நேரங்களில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது