Namvazhvu
தலையங்கம் களங்கம்.. கலக்கம்.. கலங்கரை விளக்கம்
Monday, 29 Aug 2022 05:48 am
Namvazhvu

Namvazhvu

போதையடிமைப் பழக்கத்தால் நகரங்கள் நரகமாகி வருகின்றன; நம் காலத்து இளைஞர்கள் மிருகமாகி வருகின்றனர். பள்ளி மாணவர்கள் படிப்படியாக சீரழிந்து வருகின்றனர். நம்மைவிட்டு ஓரிரு தலைமுறை கை நழுவி போகிறது. காவல் நிலையங்களில் போதைப்பொருள் தொடர்பான வழக்குகள் கூடிக்கொண்டே போகின்றன. குற்றங்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க சிறைவாசிகளின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே போகிறது. போதைப்பொருள்கள் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்றன. தமிழக அரசே மிகப்பெரிய மதுவிற்பனையாளராக அவதாரம் எடுத்திருப்பதால் அதன் கைகள் கட்டப்பட்டுள்ளன.

கஞ்சா, கஞ்சா ஆயில், ஹெராயின், பிரவுன் சுகர்எல்.எஸ்.டி, மெத், அமெத், எஃப்பிட்ரின், MDMAஃபென்டெனைல், மெத்தாம்பீட்டமின், கேட்டமைன் என்று பட்டியில் நீண்டுகொண்டே போகிறது. மாத்திரைகள், பவுடர்கள், க்ரிஸ்டல், ஸ்டாம்ப் பேப்பர், சாக்லேட், லிப்ஸ்டிக்.. என்று பல வடிவங்களில் ரகம் ரகமாக கிடைக்கின்றன. உலக அளவில் உள்ள 27 வகையான போதைப்பொருள்களில் 14 வகை தமிழகத்தில் கிடைக்கின்றன. ரூ. 30 முதல் ரூ. 6000 வரை விற்பனை செய்யப்படுகின்றன. மேல்தட்டு, நடுத்தர, கீழ்த்தட்டு என்று எல்லா வர்க்கமும் இதன் பிடியில் சிக்கி தவிக்கிறது.

தீண்டாமை எப்படி சமூகப் பிரச்சனையாக உள்ளதோ, அதே போன்று போதைப்பழக்கமும் ஒரு சமூகப் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. மனச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. தண்டனைக்குரிய குற்றங்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது. வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக், மெசஞ்சர், குறுஞ்செய்தி என்று வியாபார வலைகள் அகல விரிக்கப்பட்டுள்ளன. அதானி துறைமுகங்கள் போதைக்கூடங்களாகி வருகின்றன. தூது அஞ்சல்களும், சரக்கு வாகனங்களும், படகுகளும் கடத்தலுக்கு துணை நிற்கின்றன. கடல் மார்க்கமாகவும் கடத்தல் அதிகரித்துள்ளது. ஒரு சில மீனவர்கள் சபலத்திற்கு ஆசைப்பட்டு கடத்தலுக்கு துணை நிற்கின்றனர். திருச்சிராப்பள்ளி, தெற்காசிய அளவில் போதை நெட்வொர்க்கின் மையப்புள்ளியாக மாறி உள்ளது. தமிழகம் மிகப்பெரிய கலக்கத்தில் உள்ளது.

கள்ளுக்கடைக்கு அனுமதியில்லாத நிலையில் இந்தக் கொல்லும் நஞ்சுக்கு கொல்லையாக தமிழக நில எல்லைகள் உள்ளன. 2021 ஆம் ஆண்டில் மட்டும் ஏறக்குறைய ஏழாயிரம் போதை வழக்குகள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன. இன்றைய தமிழகத்தை தமிழக அரசின் மதுபான விற்பனைக்கூடமான டாஸ்மாக்கும் போதை மாஃபியாவும் சீரழித்து வருகின்றன. போதை ஒழிப்பு வாரம் கொண்டாட வேண்டிய அவலநிலை. தெருமுனைகளில் போதை ஒழிப்பு உறுதிமொழி எடுக்க வேண்டிய கொடுமை. தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதற்கு போதையும் மதுப்பழக்கமுமே காரணமாகின்றன.

போதைக்கு மதம், சாதி, இன பேதம் ஏதுமில்லை. பள்ளி வளாகங்களும் கல்லூரி வளாகங்களும் போதை மைதானங்களாகவும் விற்பனைக் கூடங்களாகவும் மாறும் அவலத்தை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் தடுத்து நிறுத்தாவிட்டால் தமிழகத்தை எந்த ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது. இன்றைய மாணவர்களைப் (பீர் மாணவிகளும் இதற்கு விதி விலக்கல்ல) போதைக் கலாச்சாரம் சீரழிப்பதைக் கண்டு பெற்றோர்கள் மட்டுமல்ல; கல்வியாளர்களும் இரத்தக் கண்ணீர் வடிக்கின்றனர். ஒவ்வொரு ஆசிரியரும் மிகுந்த பயத்துடனும் தயக்கத்துடனும்தான் வகுப்பறைக்குள் அடியெடுத்து வைக்கின்றனர். பிஞ்சிலேயே வெம்பும் கஞ்சா மாணவர்களைக் கண்டு நெஞ்சம் பதைபதைக்கிறது. அரசே மதுபானம் விற்பனையாளரான போது ஏற்பட்டது களங்கம் எனில், இன்றைய போதைக் கலாச்சாரத்தால் நம்மைச் சூழ்ந்துள்ளது கலக்கம் .

போதை மாஃபியா நெட்வொர்க் என்பது இது பெகாசஸ் போன்று சங்கேத மொழியில் இரகசியமாக படு இரகசியமாக கண்டுபிடிக்க முடியாத வகையில் இயங்கிக் கொண்டேயிருக்கிறது. தமிழகத்து ஸ்காட்லாந்து யார்டுக்கெல்லாம் அஞ்சா நெஞ்சன்களாக இந்த போதை கஞ்சான்கள் உள்ளனர்.

தமிழக அரசு தம் வசம் உள்ள காவல்துறையையும் உளவு அமைப்பையும் போர்க்கால அடிப்படையில் முடக்கிவிட்டு, இந்தப் போதை மாஃபியா நெட்வொர்க்கை கண்டந்துண்டமாக சிதைத்தாலொழிய இந்தப் போதைக் கலாச்சாரத்தை ஒழிப்பது என்பது முயற்கொம்பே.

தமிழக அரசும் தமிழ்ச் சமூகமும் தங்கள் பொறுப்பைத் தட்டிக் கழித்துக்கொண்டேயிருந்தால் தமிழகம் தலைநிமிரப் போவதில்லை. தெற்கு தேயாது; காணாமலே போகும். தென் இந்திய மாநிலங்கள் தங்களுக்குள் ஒரு சிண்டிகேட் அமைத்து, உளவு அமைப்புகளை நன்கு ஒருமுகப்படுத்தி ஒரு கலங்கரை விளக்கமாக செயல்பட வேண்டும்.

தமிழக அரசின் எல்லைகள், இரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், கடற்கரை எல்லைகள் என அனைத்தும் போதைப்பொருள்கள் நுழையா வண்ணம் முழுமையாக கண்காணிக்கப்பட வேண்டும்.

தமிழக அரசுக்கு வருமானம் தரும் மதுபானம், அரசின் தன்மானத்திற்கு இழுக்கு. தனிமனிதனுக்கு உள்ள சுயமரியாதை, அரசுக்கு வேண்டாமா? அரசுக்கு சுயமரியாதையே மதுபானத்தால் வராத வருமானம்தான். தமிழகம் தொழில் வளர்ச்சியால் தலைநிமிர வேண்டுமேயொழிய, மது வளர்ச்சியால் அல்ல.

அரசு மீது மட்டுமே பழியை சுமத்தி விடலாகாது. ஒவ்வொரு பெற்றோருக்கும் இந்தச் சமூகத்திற்கும் மிகப்பெரிய பொறுப்புணர்வு உண்டு. ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகளின் செயல்பாடுகளையும் அவர்களது வெளியுலக உறவுகளையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அறம் சார்ந்த நல்லொழுக்கக் கல்வியை கல்விப் பாடத்திட்டத்தில் அடிப்படையாக்க வேண்டும்.

மருந்துக்கடைகள் தங்களின் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். இலாபத்திற்கு ஆசைப்பட்டு மருத்துவ தர்மத்தை மீறக்கூடாது. மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துப் பட்டியலில்லாதவற்றை எவருக்கும் விநியோகிக்கக் கூடாது. வலி நிவாரண மாத்திரைகள், மற்றும் மருந்துகளை விநியோகிப்பதில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படவேண்டும். மருந்துக்கடைகளின் விற்பனை மற்றும் இருப்பை அவ்வப்போது ஆய்வுச் செய்து கட்டுப்பாடுகளைக் கொண்டு வர வேண்டும்.

போதைபொருள்கள் விற்பனையாளர்களை குண்டர் சட்டத்தில் வாழ்நாள் சிறை வைக்க வேண்டும். அரசு நம்பிக்கை தரும் கலங்கரை விளக்கமாக செயல்படாதவரை போதை நெட்வொர்க்கை தகர்ப்பது கடினம். ஐயோ கேடு! இன்று வீட்டிலே கஞ்சா செடி வளர்க்கும் அவலம்,. தமிழகம், தாலிபான்களின் ஆப்கானாகிவிட்டதோ என்றே தோன்றுகிறது. போதைப் பொருள் ஒழிப்புத் துறை 24 x 7 செயல்பட வேண்டும்.

மூலைக்கு மூலை மூளையில்லா போதை மனிதர்கள் என்றால் இது நாடல்ல; சுடுகாடு!

இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் தராவிட்டாலும் பரவாயில்லை. தமிழக அரசைக் கையெடுத்து கும்பிடுகிறோம்! அதனைக் கொண்டு போதை மாஃபியா நெட்வொர்க்கை ஒழித்து, தமிழகத்தைக் காப்பாற்றுங்கள்.

திராவிடத் திமிருடனான தமிழக அரசு, கலங்கரை விளக்கமாக இருக்கவேண்டியது காலத்தின் கட்டாயம். இல்லையேல், வரலாறு உங்களை மன்னிக்காது.