Namvazhvu
மையப்பொருள் : நுண்மதிக்கே வெகுமதி! தொடக்கப் பாடல் : என் இதய தெய்வமே என்னில் எழுந்து வா! (அ) வேறு பொருத்தமான பாடல்
Monday, 29 Aug 2022 12:19 pm
Namvazhvu

Namvazhvu

தொடக்க இறைவேண்டல் : ஞானத்தின் ஊற்றாகிய விண்ணகத்தந்தையே, உம்மை எங்களது மனம், உடல், ஆவி ஆகியவற்றால் போற்றி மகிழ்கின்றோம். உறவின் ஊற்றும் உண்மையின் நாற்றுமான உன்னதர் இயேசுவே உம்மை எங்களது மனம், உடல், ஆவி ஆகியவற்றால் போற்றி மகிழ்கின்றோம். முன்மதியும், நன்மதிப்பும் கொண்டவராய் நாங்கள் வாழ்ந்து, உமது வெகுமதிக்காக அழைப்புவிடுத்து எம்மைத் தயாரிக்கும் தூய ஆவியாரே உம்மை எங்களது மனம், உடல், ஆவி ஆகியவற்றால் போற்றி மகிழ்கின்றோம். இன்று நாங்கள் விழிப்புணர்வு பெற்றிருப்பது, பெற்ற பணியாளர்களாய் வாழும் உயரிய நோக்கத்துடன் (அன்பிய பெயர்) அன்பியமாய் இணைந்து வருகை தந்திருக்கின்றோம். சோதனைகள் நிறைந்து, வேதனைகளால் சாதனை வாழ்வைப் புறம் தள்ளும் அளவுக்கு நாங்கள் வாழும் சூழலை நீர் அறிவீர். இடையறாது பணியாற்றும் உமது அன்புப் பணியாளர்கள் எம்மைத் தூண்டியெழுப்பியும், நாங்கள் அவர்களது அழு குரலை அலட்சியம் செய்து வாழ்கின்றோம். இன்றைய எங்களது அன்பியக் கூட்டத்தில் வெகுமதி பெறத் தகுதிபெறும் முன்மதிகொண்ட நன்மதியாளர்களாய் திகழ கருத்துகளை ஆராய இருக்கிறோம். எமக்கு ஆசியளித்துக் காத்தருள வேண்டுகிறோம்.

நற்செய்தி வாசகம் : லூக் 12 : 32-48

சிந்தனை

* மின்னல் போல் தோன்றி இன்னல் தரும் விளம்பரங்கள் ஏராளம்

* பிரமாணிக்கம் (உண்மைத்தன்மை) ஏட்டுச் சுரைக்காயாக மாறும் இழிநிலை

* ‘எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலேஎன்ற பாடல் வரிகள் குறிப்பிடுவது போன்று, உழைப்பாளர்கள் நசுக்கப்படும் சூழல் (அது புனிதமானது எனக் கருதப்படும் அமைப்புகளுக்கும் விதிவிலக்கு அல்ல)

* உழைப்பினால் வரும் வெகுமதிகள் எல்லாமே, அப்படியென்றால் என்ன எனக் கேட்போர் காலடிகளில்

* கோள், புறம் சொல்லிக் காட்டிக் கொடுப்போர்க்கு முன்மதியாளர் என்ற பாராட்டுடன் பரிசில்கள்.

* எவ்வித ஏமாற்றத்திலும் 1. யோவா 14:18, 2. திப 26:26, 3. யோவா 18:37, 4. தானி () 3:41, 5. மத் 5:16 ஆகிய பகுதிகளை வாசித்து, அவை காட்டும் - ஊட்டும் ஒளியில் வாழப்பழகும் போது, வெகுமதியுடன் கூடிய நிம்மதி நிச்சயம்.

* காத்திருப்பது ஒரு தொடர் நிலவுஅதற்காகவே நமக்கு ஊதியம் வழங்கப்படுகிறது.

* சபித்ததாலோ, பாகுபாடு பார்க்கிறார் தலைவர் எனக் கூச்சலிடுவதாலே பிரச்சனை பெரிதாகுமே தவிர தீராது.

* திருத்தூதர் புனித பவுல் கூறுவது போல, இலக்கு நோக்கிய பயணமாக எடுத்துக் கொள்வது நல்லது.

* அரசியலை விட ஆன்மீகமே சிறந்தது.

நற்செய்திப் பகிர்வுக்கு உதவியாக ஒரு நிகழ்வு

அது ஒரு பட்டிமன்றம். நடுவர் வேதியர். பேராசிரியர் சந்தியாகு என்னும் நான்தான். அது நடைபெற்ற இடம் ஒரு மறைமாவட்ட (vicariet centre) தலைமை இடம். பட்டிமன்றத்தின் தலைப்புஇயேசுவின் இறையாட்சிப் பணியில் விஞ்சி நின்றது தானமா? தருமமா?” என்பதாகும். மூவாயிரம் பேர் பார்வை பங்கேற்பாளர்களாகக் கலந்துகொண்டனர். ஒவ்வோர் அணிக்கும் தலைவரையும் சேர்த்து நான்கு நான்கு நபர்கள் கருத்துரைகள் வழங்கினர். பட்டிமன்றம் தொடங்கும் முன்னரே (அது ஒரு குட்டித் திருத்தலமாக இருந்ததால்) 50 நபர்களை ஆர்வ நடுவர்களாக அழைத்திருந்தேன். அவர்கள் அனைவரிடமும் மதிப்பீட்டுத்தாள் - எழுதுகோல் கொடுக்கப்பட்டது. மிகவும் கவனத்தோடும், முன்மதியோடும் எல்லாரும் செயல்பட்டோம். நான் மதிப்பிட்ட தாளை ஒவ்வோர் அணியிலிருந்து ஒவ்வொருவரை அழைத்துக் கொடுத்துவிட்டேன். அவர்கள் அறிவிக்கக்கூடாதென அறிவுறுத்தப்பட்டிருந்தனர். அதேபோல் 50 நபர்களின் மதிப்பெண்களும் வெகு எளிதில் கூட்டிச் சொல்லப்பட்டது. என்னே வியப்பு? நான் வழங்கிய மதிப்பெண்களையே இரு அணிகளுக்கும் அந்த 50 நபர்களும் வழங்கியிருந்தனர். அதில் தருமத்திற்கு 52.5 மதிப்பெண்கள். தானத்திற்கு 47.5 மதிப்பெண்கள், தருமம் வென்றது. அவர்களுக்குப் பரிசு வழங்கப்பட்டது. மற்றவர்களுக்கும் பாராட்டு வழங்கப்பட்டது.

நம்பிக்கையாளர்களுக்கான மன்றாட்டுகளின் கருத்துகள்

1. நடுநிலை தவறான தீர்ப்பு வழங்கி, இறை வெளிப்பாட்டை உணர்த்தும் வாய்ப்புகள் உருவாக...

2. வாங்கும் ஊதியத்திற்கும், ஏங்கும் ஊதியத்திற்கும் ஏற்ற உழைப்பை நல்கும் உயர் மனம் உருவாக

3. விழிப்பின் அவசியத்திற்கு குறுக்கே நிற்கும் அலட்சியத்தை அடியோடு விரட்டியடிக்க வரம் கேட்டு

4. நம்பிக்கைத் துரோகம் செய்ய பெருகி வரும் வாய்ப்புகளையே நம்பிக்கைச் சான்றாளர்களாக வாழ வரம்கேட்டு

பரிந்துரைக்கப்படும் செயல்பாட்டுத் திட்டங்கள்

* அன்பியக் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் எல்லாரும் 15 நாட்களுக்குள் சந்தித்து, அன்பிய வளர்ச்சிக்கு வழிகாணல்.

* போர்க்கால அடிப்படையில் அன்பியத்தில் 15 வயதிற்கு மேற்பட்டோர், 75 வயதிற்குட்பட்டோர் அடிப்படை இறைவேண்டல்களை மனப்பாடமாக ஒப்பிக்கப் பயிற்றுவித்தல்

நிறைவு இறைவேண்டல்

கட்டுபவரும், காப்பவருமான இறைவா, உம் உன்னத பலிகளுக்கு எம்மைப் பெயர் சொல்லி அழைத்து, பேறுபெற்றவர்களாக வளர்த்தெடுத்து, இந்தச் சிறந்த அன்பியத்தில் உறுப்பினராக்கியதற்காக உமக்கு நன்றி கூறுகிறோம். தொடர்ந்து எம் பணிகளாலும், பண்புகளாலும் உமது வெகுமதியைப் பெறும் நன்மதி கொண்ட நன்மதியாளர்களாய் விளங்க அருள்தாரும்.