Namvazhvu
புதிய புனிதர் 7 – வரலாறு புனித சீசர் தெ புஸ்
Tuesday, 30 Aug 2022 06:51 am
Namvazhvu

Namvazhvu

கிறிஸ்துவின்மீது நம்பிக்கை கொண்டு, அவருக்கு உகந்தவராகவும், ஏற்புடையவராகவும் வாழ்ந்தவர், உலகப்போக்கின்படி வாழாமல், தூய ஆவியின் துணையால், அவரது வழிகாட்டுதலில் பயணித்தவர், இறையன்பால் தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக்கொண்டு உதவிகள் செய்தவர், விடாமுயற்சியோடும், ஆர்வமிக்க உள்ளத்தோடும், கிறிஸ்துவின் விழுமியங்களுக்கு சான்று பகர்ந்தவர், நிலைவாழ்வு தரும் இறைவார்த்தையை வாஞ்சையுடன் வாழ்வாக்கி, தூயவரானவர், ஏழைகளுக்கும், நோயுற்றவர்களுக்கும் ஆர்வத்தோடும், அர்ப்பண உள்ளத்தோடும் பணிவிடை செய்தவர், இறைபிரசன்னத்துடன் நற்செய்தியை வாழ்வாக்கி, போதித்து மக்கள் மனதில் நம்பிக்கை ஒளி ஏற்றியவரே புனித சீசர் தெ புஸ்.

சீசர் தெ புஸ் 1544 ஆம் ஆண்டு, பிப்ரவரி 3 ஆம் நாள், பிரான்ஸ் நாட்டில் புரோவென்சாவில் நடுத்தரக் குடும்பத்தில் 13 குழந்தைகளில், 7 ஆவது குழந்தையாகப் பிறந்தார். இயேசு சபையினர் பள்ளிக்கூடத்தில் கல்வி பயின்று, அன்பிலும், பக்தியிலும், அறிவிலும், நற்பண்பிலும் வளர்ந்து மறைபோதனைகளை விரும்பி கற்றுக்கொண்டார். கவிதை எழுதுவதிலும், ஓவியம் வரைவதிலும், நாடகங்கள் எழுதுவதிலும் ஆர்வம் மிகுந்தவர். செபத்திலும், தவத்திலும் நாட்களை செலவிட்டு, தூயவராக இராணுவத்திலும், அரசனின் அரசவையிலும் பணி செய்தார். தனது 18 ஆம் வயதில் சிப்பாயாக போரில் பங்கேற்க கடற்படையில் சேர்ந்தார். நோயினால் பாதிக்கப்பட்டு, நம்பிக்கை இழந்து, கடற்படை பணிகளைச் செய்ய முடியாமல் வீடு திரும்பினார்.

சீசர் தெ புஸ் 3 ஆண்டுகள் பாரிசில் வாழ்ந்தபின், தாயகம் திரும்பி தனது மறைந்த சகோதரனின் பணிகளை தொடர்ந்தார். ஆன்மீக வாழ்வை துறந்து, பணக்கார இளைஞராக உலக இன்பங்களை அனுபவித்தார். இளம்பருவத்தில் தனது வாழ்வின் இலக்கை தேர்ந்தெடுப்பதில் மிகவும் சிரமப்பட்டார். ஒருமுறை விருந்துக்கு செல்லுகையில், நீங்கள் என்னை மீண்டும் சிலுவையில் அறையப் போகிறீர்களா என்ற குரல் கேட்டு, வீடு திரும்பினார். ஆலயத்தில் அன்னை மரியாவிடம் வேண்டுதல் செய்து, உள்ளத்தில் தெளிவும், சிந்தனையில் மாற்றம் அடைந்து, இறையாட்சி பணி செய்ய இறைவனுக்கு தன்னை அர்ப்பணித்து, தனது 38 ஆம் வயதில் குருவானார்.

சீசர் புனித சார்லஸ் பொரோமியாவின் சுவடுகளைப் பின்பற்றி, அவரைப் போல திரு அவையில் பணி செய்தார். நற்செய்தியைப் பரப்புவதில் கவனம் செலுத்தினார். இறைவார்த்தையை வாழ்வின் அடித்தளமாகவும், சட்டமாகவும் தேர்ந்தெடுத்தார். கிறிஸ்தவ நம்பிக்கையின் கோட்பாடுகளை ஆர்வமுடன் கற்பித்தார். ஒவ்வொரு மக்களையும் சந்திக்கின்றபோது, இறைவார்த்தையின் வழியில் வாழ அழைப்புவிடுத்து, நல்வழி காட்டினார். சிறுவர்களுடன் கூடுதல் நேரம் செலவிட்டார். ஏழைகள், சமூகத்தில் ஒதுக்கப்பட்டோருக்கு விசுவாச வாழ்வை அமுதாய் ஊட்டினார். எளிமையான மொழிகளை பயன்படுத்தி கட்டுரைகள் எழுதினார்.

இறைவேண்டலிலும், படிப்பிலும் நாட்களை செலவழித்து, உடலிலும், உள்ளத்திலும், சிந்தனையிலும், சொல்லிலும், செயலிலும் தூயவராக வாழ்ந்தார். சீசர் தெ புஸ் ஏழ்மையைப் பின்பற்றி எளியவராகவும், இறையன்பை நற்செயல்கள் வழி சமூகத்தில் விதைத்தார். ஒவ்வொரு குழந்தையும், குடும்பமும் கிறிஸ்தவ நம்பிக்கையின் கோட்பாடுகளில் வளர அயராது உழைத்தார். எழுதப்படிக்க தெரியாதவர்களுக்கு பாடல்கள் வழி இறைவார்த்தையையும், கிறிஸ்தவ நம்பிக்கையின் கோட்பாடுகளையும் கற்பித்தார். பிளேக் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அன்புடன் பணிவிடை செய்தார்.

கிறிஸ்தவக் கோட்பாடுகள் போதிக்க 1592 இல், கிறிஸ்தவக் கோட்பாட்டுத் தந்தையர் சபையை தோற்றுவித்தார். இச்சபைக்கு திருத்தந்தை 8 ஆம் கிளமென்ட் 1597 ஆம் ஆண்டு, டிசம்பர் 23 ஆம் நாள் ஒப்புதல் அளித்தார். கிறிஸ்தவக் கோட்பாட்டின் துணை சபையையும் நிறுவினார். 1607 ஆம் ஆண்டு, ஏப்ரல் 15 ஆம் நாள் இறந்தார். 1975 இல் திருத்தந்தை புனித 6 ஆம் பவுல் அருளாளர் நிலைக்கு உயர்த்தினார். திருத்தந்தை பிரான்சிஸ் 2022, மே 15 ஆம் நாள் புனிதர் நிலைக்கு உயர்த்தினார்.