இறையன்பினால் பாமரனையும், பணக்காரனையும், பகைவனையும், ஏழைகளையும் அன்பு செய்தவர், இறைவனுக்காக தூய இதயங்களையும், நல் ஆன்மாக்களை உருவாக்கியவர், இறைவனின் திருவுளம் நிறைவேற்ற அயராது உழைத்தவர், பணமும், பெருமையும், புகழும் நிலையான இன்பம் தராது என்பதை உணர்ந்து ஏழ்மையை பின்பற்றியவர், இறைமாட்சிக்காகவும், அயலானின் மீட்புக்காகவும், விசுவாசிகளின் நலனுக்காகவும் தன்னை அர்ப்பணித்தவர், ஏழைகள், கைவிடப்பட்டோர், அனாதைகள் ஆகியோரின் தந்தை என்று அழைக்கப்பட்டவர், இறைவனுக்கும், மனிதருக்கும் உகந்தவராகவும், கிறிஸ்துவின் பணியாளராகவும் வாழ்ந்தவரே புனித லூயிஜி மரியா பலாஸ்ஸோலோ.
லூயிஜி மரியா பலாஸ்ஸோலோ இத்தாலியில் பெர்கமோவில் 1827 ஆம் ஆண்டு, டிசம்பர் 10 ஆம் நாள் செல்வந்தக் குடும்பத்தில் திரு. அக்டேவியஸ் பலாஸ்ஸோலோ திருமதி. தெரேசா ஆன்டோ இவர்களின் எட்டு குழந்தைகளில் கடைக்குட்டியாகப் பிறந்தார். தனது பத்தாம் வயதில் தந்தையை இழந்தபோது, அதிகம் துன்புற்றார். தந்தையின் அறிவுத்திறனும், பேச்சாற்றலும், நற்பண்புகளும் அவரிடத்தில் மிகுந்து காணப்பட்டதால் பலாஸ்ஸோலோ என்று அழைக்கப்பட்டார். குருவாக இறையாட்சி பணி செய்ய விரும்பினார். 1844 ஆம் ஆண்டு, குருத்துவப் படிப்பை கற்க ஆரம்பித்தார். குருமடத்தில் இறையன்பிலும், அறிவிலும் சிறந்து, சகமாணவர்களுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்த லூயிஜி, உலகின் ஒளியான கிறிஸ்துவின் இறையாட்சி பணியின் பொருட்டு, 1850 ஆம் ஆண்டு குருவாக அருள்பொழிவு பெற்றார்.
லூயிஜி தூய ஆவியின் வழிநடத்தலுக்கு தன்னை முழுவதுமாக அர்ப்பணித்தார். தூய இதயத்தால் கிறிஸ்துவை அன்பு செய்தார். ஏழைகள், சிறைப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர், கைவிடப்பட்டோர் ஆகியோரை எங்கு பார்த்தாலும், அவர்களுக்கு நல்வாழ்வு ஏற்படுத்தி கொடுப்பதில் மிகுந்த கவனம் செலுத்தினார். இறைவார்த்தையில் ஆழ்ந்த பற்றுக்கொண்டபோது, தான் யார் என்பதையும், எதற்காக வாழவேண்டும் என்பதையும் நன்கு உணர்ந்து, இறைவனின் திருவுளம் நிறைவேற்றிட விழைந்தார். இறைவார்த்தையை தனது சொல்லாலும், செயலாலும் அறிவித்தார். நற்செயல்கள் வழியாக தந்தை கடவுளின் திருவுளம் நிறைவேற்றி, சான்று பகர்ந்தார். இளையோரை வழிநடத்துவதிலும், அவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுப்பதிலும் ஆர்வம் காட்டினார். கொலோனாவில் சிறப்பான முறையில் இறைபணி செய்தார். 1855 ஆம் ஆண்டில் குருமடத்தின் அதிபர் தந்தையாக பணியாற்றினார்.
லூயிஜி 1862 ஆம் ஆண்டு, செப்டம்பர் 10 ஆம் நாள் தனது தாயை இழந்தார். தாயின் இழப்பு அவருக்கு பெரும் வேதனை அளித்தபோது, அன்னை மரியாவிடம் சரணடைந்து, தாயன்பை பெற்றார். 1864 ஆம் ஆண்டு, புறநகர் பகுதியில் பயணம் செய்தபோது, அனாதையாக அறைநிர்வாண குழந்தையை சந்தித்தார். குழந்தையை அன்புடன் அரவணைத்து, தனது மேலாடையால் போர்த்தினார். குழந்தையை தன்னுடன் அழைத்துச் சென்று, குழந்தைக்கு தேவையான அனைத்தும் செய்து கொடுத்தார். கைவிடப்பட்ட பெண்களை பராமரிக்க புனித டோரதி இல்லம் நிறுவினார். வணக்கத்துக்குரிய மரிய தெரெசா என்பவருடன் இணைந்து, ஏழைகளின் அருள்சகோதரிகள் சபையை நிறுவினார். இச்சபைக்கென்று சட்டங்கள் இயற்றினார். சபை உறுப்பினர்களை ஒன்றிணைத்து, குடும்பங்கள் இல்லாத மிக வறுமையிலுள்ள குழந்தைகளுக்கும், சிறுமிகளுக்கும், துன்பத்தில் உழலும் குடும்பங்களுக்கும், பெற்றோரை இழந்த சிறார்களுக்கும் அன்பும், ஆதரவும் வழங்கினார்.
1869 ஆம் ஆண்டு, வழியில் கால் ஊனமுற்ற பெண்ணைப் பார்த்தபோது, அவர்மீது பரிவுகொண்டு, அவரை தனது சபையில் சேர்த்தார். ஏழை, எளிய மக்கள் நலமுடன் வாழ தன்னால் இயன்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டார். 1885 இல் அவரது உடல் சுகவீனம் அடைந்தது. மூச்சுத் திணறல் காரணமாக பெரிதும் துன்பப்பட்டார். காலில் ஏற்பட்ட பெரிய புண்களால் திருப்பலி நிறைவேற்ற முடியாமல் வேதனையுற்றார். அன்றாட வாழ்வின் துன்பங்களை இறைமாட்சிக்காகவும், ஆன்மாக்களின் மீட்புக்காகவும் அர்ப்பணித்து அருள் பெற்றார். 1886 ஆம் ஆண்டு, ஜூன் 15 ஆம் நாள், இயேசுவின் நாமம் சொல்லியவாறு இறந்தார். 1956 ஆம் ஆண்டு, ஜூலை 21 ஆம் நாள், காசநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சுயநினைவு இழந்தார். லூயிஜி அவர்களிடம் பரிந்துரை செய்து, உடல்நலம் பெற்றார். திருத்தந்தை பிரான்சிஸ் 2022 ஆம் ஆண்டு, மே 15 ஆம் நாள் புனிதர் நிலைக்கு உயர்த்தினார்.