புனித பேதுரு கிளாவர் ஸ்பெயினில் 1580 ஆம் ஆண்டு, ஜூன் 26 ஆம் நாள் பிறந்தார். இறையன்பின் சுவையை குழந்தைப்பருவத்திலே சுவைத்தார். 1602 ஆம் ஆண்டு, குருவாகி இறைபணி செய்ய தன்னை அர்ப்பணித்தார். இயேசு சபையில் 1622 ஆம் ஆண்டு குருவானார். கருப்பின அடிமைகளை மீட்கும் பணியில் தன்னை ஈடுப்படுத்தினார். அடிமைகள் வேலை செய்த இடங்கள், துறைமுகங்கள் போன்ற இடங்களுக்கு சென்று, இறைவன் அவர்கள்மீது காட்டும் அன்பையும், அவர்களது அடிப்படை உரிமைகளையும் எடுத்துரைத்தார். நோயினால் வலுவற்றவர்களுக்கு மருந்தும், உணவும், உடையும் கொடுத்தார். அடிமைகளை அன்புடன் ஆதரித்து, பணிவுடன் அவர்களுக்கு பணிவிடைகள் செய்தார். மறைக்கல்வி கற்பித்து, திருமுழுக்கு கொடுத்தார். அடிமைகளுக்கும், கப்பல் மாலுமிகளுக்கும், அடிமை வியாபாரிகளுக்கும் போதித்தார். மரணதண்டனைக் கைதிகள் நல்மரணம் அடையவும், அடிமைகள் விடுதலை பெறவும் அயராது உழைத்து, 1654 ஆம் ஆண்டு, செப்டம்பர் 9 ஆம் நாள் இறந்தார்.