கேரள அரசு எங்கள் கோரிக்கைகளை ஏற்கும் வரை எங்கள் போராட்டத்தைக் கைவிடமாட்டோம் என்று, 76 வயது நிரம்பிய திருவானந்தபுரத்தின் முன்னாள் பேராயர் சூசை பாக்கியம் அவர்கள் உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.
விழிஞ்ஞம் அதானி துறைமுகக் கட்டுமானப் பகுதியில் செப்டம்பர் 5 ஆம் தேதி, திங்களன்று நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டு பேசியபோது இவ்வாறு தெரிவித்த முன்னாள் பேராயர் பாக்கியம் அவர்கள், நான் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் நிலையிலும், மீனவர்களின் நலன்களை உணர்ந்து இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன் என்றும் தெரிவித்தார்.
கேரள தலத்திரு அவை இதுவரையிலும் வெறுமனே ஒன்றும் பேசாமல் இருந்துவிட்டு இந்தத் திட்டத்தில் தனியார் நிறுவனம் பெருந்தொகையை முதலீடு செய்துள்ள நிலையில், இப்போது தடைகளை உருவாக்குகிறது என்ற குற்றச்சாட்டை மறுத்த பேராயர் பாக்கியம் அவர்கள், இந்தத் திட்டத்திற்கு நாங்கள் ஒருபோதும் உடன்படவில்லை என்றும், தொடக்கத்திலிருந்தே இதனை நாங்கள் எதிர்த்து வருகிறோம் என்றும் தெரிவித்தார். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்று பேசிய இஸ்லாமிய மதகுரு, பாளையம் இமாம் சுஹைப் மௌலவி அவர்கள், கேரள மீனவர்களின் நியாயமான போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்தார்.
ஆயர்கள், அருள்பணியாளர்கள் உள்ளிட்ட பிற மறைமாவட்டங்களிலிருந்தும் கத்தோலிக்கர்கள் அதிகளவில் விழிஞ்ஞம் வந்து தங்களுடைய ஆதரவுக் கரங்களை நீட்டத் தொடங்கியுள்ளதால், இப்போராட்டம் மாநிலம் முழுவதும் பரவும் என்று மறைமாவட்ட முதன்மைகுரு பணி. யூஜி கூறியுள்ளார்.