Namvazhvu
திருத்தந்தை ஷலோம் கத்தோலிக்க இளையோர் குழுமத்தினர் சந்திப்பு
Wednesday, 28 Sep 2022 07:19 am
Namvazhvu

Namvazhvu

இளையோர் தங்களின் மறைப்பணியில், படைப்பாற்றல், துணிவு, மற்றும், வரவேற்பு ஆகியவற்றைக் கொண்டிருக்குமாறு, ஷலோம் கத்தோலிக்க இயக்கத்தின் இளையோரிடம் திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார்.

இளையோரால் இளையோருக்கு நற்செய்தி அறிவித்தலை ஊக்குவிக்கும் நோக்கத்தில் பிரேசில் நாட்டில் ஆரம்பிக்கப்பட்ட ஷலோம் கத்தோலிக்க இயக்கத்தின் நாற்பதாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, செப்டம்பர் 26, திங்கள் காலையில், வத்திக்கானின் திருத்தந்தை புனித பவுல் அரங்கத்தில் தன்னை சந்தித்த அவ்வியக்கத்தின் ஏறத்தாழ ஆயிரம் இளையோருக்கு உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியக்கத்தின் மறைப்பணி ஆர்வத்தைப் பாராட்டிப் பேசினார்.

திருஅவை உண்மையிலேயே இளையோருக்குச் செவிமடுக்கிறது, அதேநேரம், தனிப்பட்டவரின் மனச்சான்றில் தலையிடும் அனைத்து முறைகளும் தவிர்க்கப்படவேண்டும் என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.

இளையோரை வரவேற்றல் மற்றும், அவர்களில் மறைப்பணி ஆர்வத்தை எழுப்பும் சிறப்பான நோக்கத்தைக் கொண்டிருக்கும் ஷலோம் குழுமச் சந்திப்பில் முதலில் நான்கு பேரின் சாட்சியங்களைக் கேட்டபின் உரையாற்றிய திருத்தந்தை, திருவழிபாடு மற்றும் மறைப்பணியில் இளையோர் முன்னணியில் நின்று செயல்படவேண்டியதன் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்தார்.

இக்குழுமத்தின் படைப்பாற்றலுடன்கூடிய துணிச்சல், மற்றும் வரவேற்கும் பண்புகளையும் பாராட்டிப் பேசியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வயதில் முதுமை அடைவோர் இளையோரைத் தவிர்த்து, தங்களையே தனிமைப்படுத்திக்கொண்டால், முதுமை நிலையை விரைவில் கூடுதலாக அடைவர், அதற்கு மாறாக, அவர்கள் சிறார் மற்றும், இளையோரோடு நேரம் செலவழித்து தங்களின் வளமையான அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று   கேட்டுக்கொண்டுள்ளார்.

ஷலோம் குழுமம்

1982ஆம் ஆண்டில் பிரேசிலின் Fortalezaவில்,  Moysés Louro de Azevedo Filho, Maria Emmir Oquendo Nogueira  ஆகிய இருவரால் ஆரம்பிக்கப்பட்ட இக்கத்தோலிக்க குழுமம், பின்னர் உலகின் மற்ற நாடுகளில் பரவத் தொடங்கியது. 2007ஆம் ஆண்டில், பொதுநிலையினர் திருப்பீட அவையால் ஓர் உலகளாவிய கழகமாக இது அங்கீகாரம் பெற்றது. இயேசுவின் முன்மாதிரிகையைப் பின்பற்றி, உலகில் மாற்றம், மற்றும், அமைதியைக் கட்டியெழுப்பும் பணிகளில் இளையோர் ஈடுபட அவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கத்தில் இக்குழுமம் ஆரம்பிக்கப்பட்டதுதிருஅவை மற்றும், சமுதாயத்தில், கிறிஸ்துவின் முகமாக இருத்தல் என்ற தனிவரத்தைக் கொண்டிருக்கும் இக்குழுமம், இளையோரால் இளையோருக்கு நற்செய்தி அறிவித்தலை ஊக்குவிக்கின்றது. தற்போது இக்குழுமம், 33 நாடுகளில் 1,500 குழுமங்களில் ஏறத்தாழ பத்தாயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர்