இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் தொடங்கப்பட்டதன் அறுபதாம் ஆண்டு நிறைவையொட்டி, “23 ஆம் யோவான்: உலகிற்கு இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம்” என்ற தலைப்பில் விற்பனைக்கு வரவுள்ள நூலுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அணிந்துரை எழுதியுள்ளார்.
திருத்தந்தை புனித 23 ஆம் யோவான் அவர்கள் மேற்கொண்ட இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கப் பாதையை விளக்குகின்ற இந்நூல், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தற்போது அழைப்புவிடுத்துள்ள ‘கூட்டியக்கப் பயணம்’ என்ற நடவடிக்கை வரை அலசியுள்ளது.
அருள்பணியாளர்கள் எட்டோர், மார்கோ ஆகிய இருவரால் எழுதப்பட்டுள்ள இந்நூல், கிறிஸ்தவ ஒன்றிப்பு வளர்ச்சிக்கு உதவியுள்ள அப்பொதுச்சங்கத்தின் ஒளியில் அதன் வரலாற்றையும், தற்போதைய ஒருங்கிணைந்த பயணம் என்ற நடவடிக்கையையும் மீள் ஆய்வு செய்துள்ளது. பல்வேறு காரணங்களுக்காக இந்நூலுக்கு அணிந்துரை எழுதுவது குறித்து நான் பெருமைப்படுகிறேன் என்று எழுதியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதன் முக்கிய காரணம் குறித்து விளக்கியுள்ளார்.
திரு அவையின் வளர்ச்சி, சமகால உலகை அது அணுகும் முறை மற்றும் அதன் கிறிஸ்தவ ஒன்றிப்புப் பயணத்தில் உறுதியான தீர்மானங்கள் எடுக்க, திருத்தந்தை புனித 23 ஆம் யோவான் அவர்களும், இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கமும் முக்கியம் என்பதே, இதற்கு முக்கிய காரணம் என்று திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.
டைசே (Taize) கிறிஸ்தவ ஒன்றிப்பு குழுமத்தின் தலைவர் அருள்சகோதரர் அலோஸ் அவர்கள் இந்நூலுக்கு தொடக்கவுரை எழுதியுள்ளதற்கு நன்றி தெரிவித்துள்ள திருத்தந்தை, இது பகிர்வதின் கனியாக விளங்குகிறது என்றும், இந்நூலின் ஆசிரியர்களுக்கு கடவுள் வழங்கியுள்ள இறையியல் மற்றும் மேய்ப்புப்பணி சார்ந்த கொடைகள் வியப்பூட்டுகின்றன எனக் கூறியுள்ளார்.
அருள்பணி. எட்டோர் அவர்கள், திருத்தந்தையரின் போதனைகளில் மூழ்கி, பொதுநிலையினர் மற்றும் கலாச்சாரத்திற்குச் சேவையாற்ற தனது அருள்பணித்துவ வாழ்வை அர்ப்பணித்துள்ளார், அதேநேரம், திருத்தந்தை புனித 23 ஆம் யோவான் (ஆஞ்சலோ ஜூசப்பே ரொன்காலி) அவர்களின் கொள்ளுப் பேரனாகிய அருள்பணி. மார்கோ அவர்கள், வரலாற்று ஆசிரியர் மற்றும் பத்திரிகையாளர் என, அவ்விருவரையும் திருத்தந்தை பிரான்சிஸ் பாராட்டியுள்ளார்.
அருள்பணி. மார்கோ அவர்கள், திருத்தந்தை புனித 23 ஆம் யோவான் அவர்களின் செயலரான கர்தினால் லூயிஸ் அவர்களின் ஒத்துழைப்போடு, பல்வேறு நூல்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தாலியத்தில் எழுதப்பட்ட “23 ஆம் யோவான்: உலகிற்கு இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம்” நூல், 1962 ஆம் ஆண்டு அக்டோபர் 11 ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்ட இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் அறுபதாம் ஆண்டு நிறைவு நாளுக்கு முந்தைய நாளில் -அக்டோபர் 10 ஆம் தேதி முதல்-கடைகளில் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.