Namvazhvu
ஞாயிறு தோழன் ஆண்டின் பொதுக்காலம் 29ஆம் ஞாயிறு விப 17:8-13, 2 திமொ 3:14-4:2, லூக் 18:1-8
Friday, 14 Oct 2022 12:30 pm
Namvazhvu

Namvazhvu

திருப்பலி முன்னுரை

இன்று நாம் பொதுக்காலத்தின் 29 ஆம் ஞாயிறு திருவழிபாட்டை சிறப்பிக்கின்றோம். ஆண்டவர் இயேசு கிறிஸ்து நாம் எவ்வாறு மனம் தளராமல் இறைவனிடம் செபிக்க வேண்டும் என்பதை, நேர்மையற்ற நடுவர் மற்றும் நீதிக்காக போராடும் ஒரு கைம்பெண் உவமை வழியாக இன்று நமக்கு விளக்குகிறார். அன்றைய யூத சமுதாயத்தில் பெண்களின் நிலைமை பரிதாபத்திற்குரியது. அதிலும், கைம்பெண்களின் நிலைமை மிகமிக பரிதாபத்திற்குரியது. கணவனை இழந்த பிறகு, தனது கணவனின் சொத்துக்களை ஒரு கைம்பெண் பெறவேண்டுமென்றால், அக்குடும்பத்தில் இருக்கும் மற்ற ஆண்களின் ஒப்புதலை பெறவேண்டும். பல நேரங்களில் குடும்பத்தினரே இப்பெண்ணுக்குரிய சொத்துக்களை பறித்துக்கொண்டு, அவளை வீட்டை விட்டு வெளியே தள்ளி விடுவார்கள். வீட்டிலிருக்கும் ஆண்களே கைம்பெண்களை மதிக்காதபோது, நீதி வழங்கும் நீதிபதியா பெண்களை மதிக்கப் போகிறார்? அதிலும், இன்றைய உவமையில் ஆண்டவர் இயேசு சொல்லும் நீதிபதி நேர்மையற்றவர், மக்களை மதிக்காதவர், கடவுளுக்கும் அஞ்சாதவர். இவரிடம் ஒரு கைம்பெண்ணுக்கு நீதி கிடைக்கும் என்பது சாத்தியமில்லை. ஆனால், நீதி கிடைத்தது. மனம் தளராமல், இடைவிடாமல் நீதிக்காக, அந்த நீதிபதியிடம் அவர் போராடியதே இப்பெண்ணின் வெற்றிக்கு காரணம். இப்பெண்னைப் போலவே, நாம் எப்பொழுதும் மனம் தளராமல், இடைவிடாமல் செபிக்க வேண்டுமென்று ஆண்டவர் இயேசு விரும்புகிறார். எனவே, கொடுக்கப்படும் வரை கேட்டுக்கொண்டே இருப்போம், திறக்கப்படும் வரை தட்டிக்கொண்டே இருப்போம், கிடைக்கும் வரை தேடிக்கொண்டே இருப்போம். இதற்கான வரத்தை வேண்டி இத்திருப்பலியில் பக்தியோடு பங்கு பெறுவோம்.

முதல் வாசக முன்னுரை

மோசேவின் கைகள் உயர்த்தப்பட்ட போதெல்லாம், இஸ்ரயேல் மக்கள் அமலேக்கியர்களுக்கு எதிராக போரில் வென்றார்கள். மோசேவின் கைகள் தளர்ச்சி அடைந்து, கீழே இறங்குகிறபோது, இஸ்ரயேல் மக்கள் தோற்றுப் போனார்கள் என்று கூறும் இம்முதல் வாசகத்தைக் கேட்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

மறைநூல் அனைத்தும் கடவுளின் தூண்டுதலை பெற்றிருக்கிறது. அது கற்பிப்பதற்கும், கண்டிப்பதற்கும், சீராக்குவதற்கும், நேர்மையாக வாழ்வதற்கும் நமக்கு கற்றுத் தருகிறது. ஆகவே, மறைநூல் வழிகாட்டுதலின் படி வாழ்வோம் என்று கூறும் இவ்விரண்டாம் வாசகத்தைக் கேட்போம்.

மன்றாட்டுகள்

1. நம்பிக்கையை நல்குபவரே! உமது திரு அவையை வழிநடத்தும் திருப்பணியாளர்கள் நீதிக்காக தங்களை நாடி வரும் மக்களுக்கு, உம் திருமகனின் வழிகாட்டுதலின்படி பாரபட்சம் பாராமல், நீதியை வழங்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. நலன்களை புரிபவரே! எம் நாட்டை ஆளும் தலைவர்கள் நல்லாட்சி புரிந்திட அவர்களை ஆசீர்வதியும். குறிப்பாக, நீதி வழங்கும் நீதியரசர்கள், தாங்கள் கற்றுத்தேர்ந்த விழுமியங்களின்படி நீதி வழங்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. என்றும் துணையாய் இருப்பவரே! மனைவியை அல்லது கணவனை இழந்து வாடும் ஒவ்வொரு உள்ளத்திற்கும் நீரே அரணும், கோட்டையுமாயிருந்து அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கி, நல் வாழ்வு அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. வரங்களை பொழிபவரே! நாங்கள் அன்றாடம் இறைவார்த்தையை வாசித்திடவும், அவ்வார்த்தையின்படி நல்லவர்களைப் பாராட்டவும், தீயவர்களைக் கண்டித்து அறிவுரை கூறிடவும் ஆற்றலைப் பெற்றிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. வாழ்வளிப்பவரே! எங்கள் குடும்பங்களில் செபிக்கும் பழக்கத்தை நாங்கள் ஏற்படுத்திடவும், இடைவிடாமல் மனம் தளராமல் செபிக்கின்ற உமது பிள்ளைகளாக மாறிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.