Namvazhvu
16.10.2022 - ஞாயிறு நம் இறை மின்னேற்றிகள் ஆண்டின் பொதுக்காலம் 29ஆம் ஞாயிறு விப 17:8-13, 2 திமொ 3:14-4:2, லூக் 18:1-8
Friday, 14 Oct 2022 12:49 pm
Namvazhvu

Namvazhvu

சில ஆண்டுகளுக்கு முன் டுவிட்டரில் வந்த கீச்சு இது: ‘நம் வீட்டிற்கு வரும் விருந்தினர்கள் முன்பெல்லாம் நினைவுகளை விட்டுச் சென்றார்கள், இன்றோ வெறும் சார்ஜர்களை மட்டுமே விட்டுச்செல்கிறார்கள்.’

சார்ஜர்கள்அல்லது  ‘மின்னேற்றிகள்அல்லதுமின்மாற்றிகள்’ - இவை இன்று பல வீடுகளில் மின்பகிர்வுப் பெட்டியின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டன. ‘உடுக்கை இல்லாதவன் கை போல சார்ஜர் இல்லாதவன் கைபரிதவித்து நிற்கும். இன்று நம்முடைய மடிக்கணினி, ஐபேட், ஸ்மார்ட் ஃபோன் போன்றவை இயங்க வேண்டுமெனில் ஆற்றல் தேவை. இந்த ஆற்றல் மின்சாரம் வழியாக நமக்குக் கிடைத்தாலும், மின்சாரத்தை குறைந்த அழுத்தத்திற்கு மாற்றி அவற்றை நம் கருவிகளுக்குக் கொடுப்பவை சார்ஜர்களே. சார்ஜர்கள் தங்களில் பயனற்றவை. ஆனால், அவை தங்களை மின்சாரத்தோடும், கருவிகளோடும் இணைத்துக்கொண்டால்தான், அவற்றால் கருவிகளுக்குப் பயனுண்டு.

நம்மையும், இறைவனையும் இணைக்கும் மூன்று சார்ஜர்களைப் பற்றிப் பேசுகின்றன இன்றைய வாசகங்கள்.

இன்றைய முதல் வாசகம் (காண். விப 17:8-13) நம்மை ஒரு போர்க்களத்திற்கு அழைத்துச் செல்கிறது. இஸ்ரயேலர் செங்கடலைக் கடந்துவிட்டனர். அவர்கள் வாக்களித்த நாட்டிற்குப் பயணம் செய்கின்றனர். அவர்கள் செல்லும் வழியில், அமலேக்கியர் என்னும் நாடோடிக் குழுவினர் குடியிருக்கின்றனர். அவர்களுடைய எல்லையையும், பாதையையும் பயன்படுத்த அவர்கள் இஸ்ரயேலர்களை அனுமதிக்கவில்லை. எனவே, போர் அவசியமாகிறது. அமலேக்கியர்கள் ஏற்கனவே போர்ப்பயிற்சி பெற்றவர்கள். இஸ்ரயேலர்கள் ஏறக்குறைய 400 ஆண்டுகளாக செங்கல் தயாரித்துக்கொண்டிருந்தவர்கள். அவர்களுக்குப் போரைப் பற்றி ஒன்றும் தெரியாது. கடவுள்தாமே இங்கே குறுக்கிட்டு அவர்களுக்கு அமலேக்கியர்மேல் வெற்றியைத் தருகின்றார். யோசுவாவின் தலைமையில் ஒரு குழுவினர் - கொஞ்சம் குச்சி, மட்டைபிடிக்கத் தெரிந்தவர்கள் - அமலேக்கியருக்கு எதிராகப் போரிடுகின்றனர். இவற்றால் வெல்ல முடியாது என்று நினைக்கின்ற மோசே, ஆரோன் மற்றும் கூர் என்பவர்கள் குன்றின் உச்சிக்கு ஏறிச்செல்கின்றனர். மோசே வானத்தை நோக்கிக் கைகளை உயர்த்துகின்றார். எப்போதெல்லாம் அவருடைய கைகள் உயர்ந்து இருந்தனவோ, அப்போதெல்லாம் இறைவல்லமை கீழே போரிட்டுக்கொண்டிருக்கும் யோசுவா மற்றும் வீரர்களுக்குப் பாய்கிறது. கைகள் தளர்வுறும்போதெல்லாம் படையும் பின்வாங்குகிறது. இதைக் காண்கின்ற ஆரோனும், கூரும் உடைந்த சார்ஜருக்குச் ஸெல்லோ டேப் போடுவதுபோல, தளர்ந்துபோன மோசேவை ஒரு பாறையில் அமரச் செய்து, இரு கைகளையும் ஆளுக்கொன்றாகப் பிடித்துக்கொள்கின்றனர். இஸ்ரயேலர் போரில் வெற்றிபெறுகின்றனர்.

இங்கே வெற்றி என்பது, கடவுளின் செயலாற்றலால் நடந்தேறுகிறது. கடவுளின் செயலாற்றல் இங்கே எப்படி நடக்கிறது? ஒரு குழுமத்தின் வழியாக அல்லது கூட்டுமுயற்சியின் வழியாக. யோசுவா, அவருடைய தலைமையில் வீரர்கள், மோசே, ஆரோன் மற்றும் கூர் ஆகியோரின் கூட்டுமுயற்சி அவர்களைக் கடவுளையும், மக்களையும் இணைக்கும் மின்னேற்றியாக (சார்ஜராக) மாற்றுகிறது.

ஆக, நாம் வாழும் குழுமம் அல்லது சமூகம் அல்லது குடும்பம் இறைமின்னேற்றியாக இருக்கிறது.

இன்றைய இரண்டாம் வாசகம் (காண். 2 திமொ 3:14-4:2) பவுல் திமொத்தேயுவுக்கு வழங்கும் அறிவுரைகளைக் கொண்டிருக்கிறது. இந்த அறிவுரைப் பகுதியில்தான் மறைநூலைப் பற்றிய ஒரு முக்கியமான உண்மையை வெளியிடுகிறார் பவுல்: ‘மறைநூல் அனைத்தும் கடவுளின் தூண்டுதல் பெற்றுள்ளது.’ எபேசுத் திரு அவையில் நிறைய போலிப் போதகர்களும், போலிப் போதனைகளும் இருந்தன. மக்கள் எளிதாக மற்ற போதனைகளால் ஈர்க்கப்பட்டனர். மேலும், இயேசு கிறிஸ்துவைப் பற்றி பவுல் மற்றும் திமொத்தேயு போதித்தவற்றை அவர்கள் எதிர்க்கவும் செய்தனர். இத்தகைய போலிப் போதனைகளுக்கு எதிராக திமொத்தேயு என்ற இளவல் துணிவாக நிற்க வேண்டுமென்றால், அவர் மறைநூலை இறுகப் பற்றிக்கொள்ள வேண்டும். இந்த மறைநூலை திமொத்தேயு அவருடைய இளமைப் பருவம் முதலாகக் கற்றிருக்கின்றார். இந்த மறைநூல் நான்கு நிலைகளில் பயன்படுவதாக பவுல் எழுதுகிறார்: () கற்பிப்பதற்கு - புதிய நம்பிக்கையாளர்களுக்குக் கற்பிக்கவும், பழையவர்களுக்கு கற்பித்தலை நினைவூட்டவும்,  () கண்டிப்பதற்கு - தவறான போதனையைப் போதிப்பவர்களை, போதனையில் பிறழ்வுகளை ஏற்படுத்துபவர்களை, () சீராக்குவதற்கு - நேரிய வழியில் செல்லும் ஒருவரைத் தொடர்ந்து நேரிய வழியில் நடக்கச் செய்வதற்கும், வழி தவறுபவர்களைச் சரியான வழிக்குக் கொண்டுவந்து சேர்க்கவும் மற்றும் () நேர்மையாக வாழப் பயிற்றுவிப்பதற்கு - அறநெறி வாழ்வுப் பயிற்சிக்கு.

இப்படியாக, மறைநூலை சிறுவயதிலிருந்தே கற்றிருக்கின்ற, அதன் பயன்களை அறிந்திருக்கின்ற திமொத்தேயு, ‘இறைவார்த்தையை அறிவிக்க வேண்டும். வாய்ப்பு கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் இதைச் செய்வதில் கருத்தாய் இருக்க வேண்டும். கண்டித்துப் பேசவும், கடிந்துகொள்ளவும் அறிவுரை கூறவும், பொறுமையோடு கற்றுக்கொடுக்கவும் வேண்டும்.’

ஆக, பவுலைப் பொருத்தவரையில் மறைநூல் அல்லது விவிலியம் இறைமின்னேற்றியாக இருக்கிறது.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். லூக் 18:1-8) இயேசு தன்னுடைய இரண்டாம் வருகையை முன்னறிவித்தலின் பின்புலத்தில் இருக்கின்றது. அதையொட்டியே இன்றைய நற்செய்திப் பகுதியின் இறுதியில், ‘மானிட மகன் வரும்போது மண்ணுலகில் நம்பிக்கையைக் காண்பாரோ?’ எனக் கேட்கின்றார். தன்னுடைய சீடர்களும், அவர்களுக்குப் பின் வருகின்ற நம்பிக்கையாளர்களும் தன்மேல் நம்பிக்கையை இழந்துவிடுவார்களோ என்ற ஐயம் இயேசுவுக்கு இருக்கவே செய்தது. அப்படி நம்பிக்கை இழப்பதற்கான வாய்ப்பும் இயேசுவின் சமகாலத்திலேயே நிறைய இருந்தது. இந்த அபாயத்தை அவர்கள் எதிர்கொள்ள இயேசுவே ஓர் உவமையைச் சொல்கின்றார்.

இந்த உவமையில் வரும் நடுவர்கடவுளுக்கும் அஞ்சுவதில்லை. மனிதர்களையும் மதிப்பதில்லை.’ திரு அவையின் முதன்மையான மற்றும் இரண்டாவது கட்டளைகளான இறையன்பும், பிறரன்பும் இவரிடம் அறவே இல்லை. யாருக்கும் எதிலும் கடன்படாதவராக, யாருக்கும் பயப்படாதவராக, யாரையும் திருப்திப்படுத்த விரும்பாதவராக இருக்கிறார். ‘இதைச் செய்என்று இவரிடம் யாரும் வற்புறுத்தவோ, பரிந்துபேசவோ, விரும்பிக் கேட்கவோ முடியாது. தன்னுடைய வாடிக்கையாளரான ஒரு கைம்பெண்ணுக்கு நீதி வழங்கும் கடமையையும் அவர் செய்யவில்லை. யாருக்கும் அஞ்சாத அவர், ஒரு கைம்பெண் என்ற பிள்ளைப்பூச்சிக்கா அஞ்சுவார்? இல்லை. ஆனாலும், கைம்பெண்ணின் தொல்லையின்பொருட்டு அவருக்கு நீதி வழங்குகிறார்.

இந்தப் பின்புலத்தில் நீதியற்ற நடுவரே, நீதி வழங்கினார் என்றால் நீதியும், இரக்கமுமான கடவுள் நீதி வழங்கத் தாமதம் செய்வாரோ? என்ற கேள்வியை எழுப்புகின்றார் இயேசு.

இயேசு இறந்து, உயிர்த்து, விண்ணேற்றம் அடைந்தபின், திருத்தூதர்கள் ஏறக்குறைய இக்கைம்பெண் போல நிர்கதியாக நின்றனர். அவர்களுக்கென்று எந்தவொரு உடைமையும், உறவும் இல்லை. நீதியும் இல்லை என்றால் அவர்கள் இன்னும் அதிகம் அவதிப்படுவார்கள். கைம்பெண்ணுடைய விடாத வேண்டுதல் அவருடைய விண்ணப்பத்தை நிறைவேற்றியதுபோல, விடாமுயற்சியுடன்கூடிய இறைவேண்டல், நம்பிக்கையைக் காத்துக்கொள்ள உதவும் என்று அறிவுறுத்துகிறார் இயேசு.

ஆக, விடாமுயற்சியுடன் கூடிய இறைவேண்டல் இறைமின்னேற்றியாக இருக்கிறது.

இவ்வாறு, இறைமின்னேற்றியாக இன்றைய முதல் வாசகம் குழுமத்தையும், இரண்டாம் வாசகம் மறைநூலையும், நற்செய்தி வாசகம் விடாமுயற்சியுடன் கூடிய இறைவேண்டலையும் முன்வைக்கிறது.

இந்த மூன்று சார்ஜர்களை - குழுமம், மறைநூல், இறைவேண்டல் - நம்முடைய இறைமின்னேற்றிகளாக வைத்துக்கொள்வது எப்படி?

1. குழுமமும் கூட்டு முயற்சியும்

இஸ்ரயேல் மக்கள் அமலேக்கியரோடு போரிட்டு பெற்ற வெற்றி, இறைவனின் அருள் மற்றும் மனித முயற்சி ஆகியவற்றின் இனிய கலவையாக இருக்கிறது. மேலும், சிறிய குழுமத்தின் முயற்சி பெரிய குழுமத்திற்கு வெற்றியைத் தருகின்றது. ஆக, நாம் வாழும் நம்முடைய குடும்பம், சமூகம், குழுமம், பங்கு, ஊர், நகரம் ஆகிய அனைத்தும் குழுமங்களே. இவை அனைத்துமே இறைமின்னேற்றிகளே. இவை அனைத்தின் வழியாகவும் இன்று நாம் நம்மையே ஆற்றல்படுத்திக்கொள்ள முடியும். ஆனால், இதற்கு மாற்றாக இன்றைய உலகம் தனிநபர் வாழ்வை அதிகமாக முதன்மைப்படுத்துகிறது. ஒவ்வொருவரும் தன்னுடைய வீடியோ கேம், காணொளி, சமூக வலைதளம் என்று மூடிக்கிடக்கவும் அல்லது எல்லா மனிதர்களையும் துறந்துவிடும். பின் நவீன சந்நியாசிகளை உருவாக்குவதையும் இன்றைய உலகம் விரும்புகிறது. ஆனால், ‘யாரும் எனக்கு வேண்டாம்என்று, எல்லாரையும் இயல்பு வாழ்க்கையில் துறந்துவிட்டு, செயற்கையான எண்ணியல் வாழ்வில் நண்பர்கள் வட்டத்தைப் பெருக்கிக் கொள்ளும் அதிநவீன சந்நியாசிகள், தங்களுடைய குழுமங்களுக்குத் திரும்ப வேண்டும். ஏனெனில், ஒருவர் மற்றவரை அன்பு செய்யும் குழுமத்தில், அவர்கள் தங்களையே இணைத்துக்கொள்ள வேண்டும். குடும்பத்திலும், குழுமத்திலும்தான் ஒருவருக்கு முதல் இறைமின்னேற்றி கிடைக்கிறது.

2. மறைநூல் அல்லது இறைவார்த்தை

மறைநூல் அனைத்தும் கடவுளால் தூண்டப்பட்டதுஎன்று பவுல் சொல்லும்போது, அவர் முதல் ஏற்பாட்டு மறைநூலையே மனத்தில் வைத்திருக்கிறார். ஏனெனில், பவுல் இத்திருமுகத்தை எழுதும் காலத்தில் இரண்டாம் ஏற்பாட்டு நூல்களும், திருமறையும் முழுமை பெறவில்லை. இயேசு நிகழ்வில் வார்த்தையே மனிதராக நம்மோடு குடிகொண்டுள்ளது. விவிலியத்தை நாம் வாசிக்கும்போது, நாம் இறையறிவில் வளர்வதோடு, நம்மைப் பற்றிய, உலகைப் பற்றிய, மற்றவர்களை பற்றிய அறிவும் நமக்கு வளர்கிறது. இன்று நாம் மறைநூலை இறைமின்னேற்றியாகப் பயன்படுத்துகிறோமா? நாம் மறைநூல் அறிவைப் பெற விரும்புகிறோமா? கற்பிக்கவும், கண்டிக்கவும், சீராக்கவும், நேரிய வழியில் நடக்கப் பயிற்றுவிக்கவும் மறைநூலைப் பயன்படுத்துகிறோமா? அல்லது ஆலயத்திலும், செபக்கூட்டங்களிலும் மட்டுமே வாசிக்கப்படும் நூலாக நாம் அந்நியப்படுத்தி விடுகிறோமா?

3. விடாமுயற்சியுடன்கூடிய இறைவேண்டல்

நாம் செபிக்கின்றோம். சொந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி, முறைப்படுத்தப்பட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தி செபிக்கின்றோம். ஆனால், வேண்டுவது கிடைக்கும் வரை செபிப்பதில்லை. பல நேரங்களில் மனம் தளர்ந்து போகின்றோம். நம்முடைய தவறான வாழ்க்கை முறை, மற்றவர்களைப் பற்றிய எண்ணம், கடவுளைப் பற்றிய எதிர்மறை எண்ணங்கள் ஆகியவற்றால் இறைவேண்டலைக் கைவிடுகிறோம். கைம்பெண்ணுக்கு வேறு வழியே இல்லை. ஆகையால் நடுவரை உறுதியாகப் பற்றிக்கொண்டாள். இந்த இறைச்சார்பு நிலை என்னிடத்தில் இருக்கிறதா? சில நேரங்களில் கடவுளை நான் என் வாழ்வில் இறுதியான தேடுபொருளாகவே வைத்துள்ளேன். என்னுடைய மனமும், கால்களும் தளர்வதற்கான காரணிகள் எவை? கைகள் செய்யாததை முழங்கால்கள் செய்யும் என்றால், நான் அவர்முன் எத்தனை முறை மண்டியிடத் தயாராக இருந்துள்ளேன்? இறைவேண்டலை நான் ஆற்றல்பெறும் இடமாக பார்க்கிறேனா?

இறுதியாக,

இன்று நம்மைச் சுற்றி நிறைய போலி சார்ஜர்கள் இருக்கின்றன. இவை நம்மை சார்ஜ் செய்வதுபோல, செயல்பட்டு நம் உடலில் எஞ்சியிருக்கும் ஆற்றலையும் உறிஞ்சிவிடுகின்றன. குழுமமும், இறைவார்த்தையும், இறைவேண்டலும் நம்மை உற்சாகப்படுத்தும். நமக்கு வெற்றியைக் கொடுக்கும் மின்னேற்றிகள்.

இதை அறிந்ததால்தான் திருப்பாடல் ஆசிரியர், “மலைகளை நோக்கி என் கண்களை உயர்த்துகின்றேன். விண்ணையும், மண்ணையும் உண்டாக்கிய ஆண்டவரிடமிருந்தே எனக்கு உதவி வரும்” (121:1) என்று முழங்குகின்றார். இறைமின்னேற்றிகளோடு நாம் தொடர்பு கொண்டிருந்தால், ‘போகும் போதும், உள்ளே வரும்போதும், இப்போதும், எப்போதும் நம்முடைய வாழ்வு என்னும் அலைபேசியும், மடிக்கணினியும் இயக்கத்தில் இருக்கும்!’.