உரோம் நகரின் கொலோசியம் அரங்கில் இம்மாதம் (அக்டோபர்) 25 ஆம் தேதி மாலை உலக மதத்தலைவர்கள் பங்குகொள்ளும் அமைதிக்கான ஜெப வழிபாட்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கலந்துகொள்ள உள்ளார். கத்தோலிக்க பிறரன்பு நிறுவனமான சான் எஜிதியோ அமைப்பு இம்மாதம் 23 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை உரோம் நகரில் ஏற்பாடு செய்துள்ள ‘அமைதிக்கான அழுகுரல்’ என்ற கருத்தரங்கின் இறுதி நிகழ்வாக கொலோசியத்தில் இடம்பெற உள்ள செப வழிபாட்டில் திருத்தந்தையும் கலந்து கொள்வது மிகவும் பாராட்டுக்குரியது. அசிசியின் புனித பிரான்சிஸ் அவர்களின் உணர்வுடன் சான் எஜிதியோ அமைப்பு, போர்களால் அழிவும் உயிரிழப்புகளும் இடம்பெறும் இன்றைய சூழலில், வருங்காலம் குறித்த நம்பிக்கையை அனைவருக்கும் வழங்கவேண்டிய கடமையை வலியுறுத்தி இதனை ஏற்பாடு செய்துள்ளது.