Namvazhvu
ஆர்.எஸ்.எஸ், பாஜக Operation South சதித்திட்டம் - ஓர் எச்சரிக்கை
Tuesday, 18 Oct 2022 05:45 am
Namvazhvu

Namvazhvu

ஆர்.எஸ்.எஸ்-ன் தற்போதைய திட்டம் ஆப்பரேசன் சவுத்! இத்திட்டத்தின் கீழ் தெலுங்கானாவும், கேரளாவும், தமிழ்நாடும்தான் முதற்கட்ட இலக்குகள். தேசத்தின் பிரச்சனைகளைத் திசைத்திருப்ப பாஜக ஆளாத ஏனைய மாநில அரசுகளை எப்போதும் சீண்டிப்பார்ப்பதும், ஆளுநர்களைக் கொண்டு அதிகார தும்சம் செய்வதும், அனைத்தையும் மதமாக குறுக்கிப் பார்த்து, சாமானிய மக்களைக் கூறுபோட்டு, ஆர்.எஸ்.எஸ் வேரூன்றலை கச்சிதமாய் நிறைவேற்ற எத்தணிப்பதும் தொடர் கதையாக நீள்கிறது. ஒரு கட்சியின் மாநிலத் தலைவருக்குரிய எவ்வித பண்பாடுமின்றி, மக்களர் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசுக்கே மிரட்டல் விடும் திரு.அண்ணாமலையின் செயலே ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

ஆர்.எஸ்.எஸ் - இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல்என்ற நூலை புகழ்பெற்ற உச்சநீதிமன்ற வழக்கறிஞர் .ஜி. நூரனி எழுதியுள்ளார். அதில் ஆர்.எஸ்.எஸ் ஏற்படுத்தப்பட்டதன் நோக்கம் துவங்கி, வரலாற்றில் அதன் போக்கு, சுதந்திரத்தின்போது அந்த அமைப்பு என்ன செய்தது, இந்து மகா சபாவைக் கைப்பற்றும் சாவர்க்கர், காந்தி கொலையில் பங்கு, ஆர்.எஸ்.எஸ் மீதான தடைகள், ஜனசங்கத்தின் உருவாக்கம், நெருக்கடிநிலை காலகட்டத்தில் அதன் செயல்பாட்டு வன்முறை, அதன் துணை அமைப்புகள் என விரிவாக விவரிக்கிறார். இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை ஒரு விரோதமாக பார்க்கும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங்பரிவாரக் கும்பலின் அரசியல் நிலைப்பாடுகளை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துகிறார். இறுதியில், அவர்தற்போது இந்தியாவின் ஆன்மா, அபாயத்தில் இருக்கிறதுஎன்கிறார். இதுதான் நமக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை!

இந்தியாவின் ஆன்மாவிற்கு ஆபத்து!

இந்தியாவின் ஆன்மா எது? “6 லட்சம் கிராமங்களில்தான் இந்தியாவின் ஆன்மா குடிகொண்டிருக்கிறதுஎன்றார் மகாத்மா. எழுபது விழுக்காடு மக்கள் கிராமங்களில் வாழ்கிறார்கள். அதில் வாழும் மக்களின் தேவைகளை நிறைவேற்றி, அவர்களுக்கு வாழ்வளிக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு. அடித்தட்டு சாமானிய மக்களின் நலனில் இந்தியாவின் ஆன்மாவை கண்டார் மகாத்மா. இன்று கிராமங்களின் அவல நிலைகள் சொல்லிமாளா. இந்திய அரசியலமைப்பு தந்திருக்கும் அடிப்படை உரிமைகள், வேற்றுமையில் ஒற்றுமை, பல்வேறு மொழி பண்பாட்டு கலாச்சாரங்களை உள்ளடக்கிய கூறுகள், ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான செயல்திட்டங்கள் என, இந்திய ஆன்மாவின் கூறுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஆனால், மதத்தை கையிலெடுத்து மக்களைக் கூறுபோட்டு, கார்ப்பரேட்டுகளுக்கு பல்லக்குத் தூக்கும் ஆர்.எஸ்.எஸ் - பாஜக கும்பல்களுக்கு இந்தியாவின் ஆன்மா என்பது ஒரே நாடு - ஒரே மொழி - ஒரே மதம் - ஒரே தேர்தல் - ஒரே கட்சி - ஒரே கலாச்சாரம் என்று, இருப்பதில் ஆச்சரியமில்லை.

சூரத் நகரில் நடைபெற்ற இந்திமொழி நாள் விழாவில் (செப்டம்பர் 14), மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “நமது கலாச்சாரம், வரலாற்றின் ஆன்மாவைப் புரிந்து கொள்ள நமது அலுவல் மொழியான இந்தியைக் கற்கவேண்டும்என்றார். அவருடைய பேச்சிற்கு தமிழக முதல்வர் மு..ஸ்டாலின், “இந்தி மொழி தோன்றுவதற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழை முதன்மையாகக் கொண்ட திராவிடமொழிக் குடும்பமும், அதன் பண்பாட்டு விழுமியங்களும் இன்றைய இந்தியாவின் நிலப்பரப்பையும், அதன் எல்லைகளைக் கடந்தும் பரவியிருந்ததை வரலாற்று ஆசிரியர்கள் பலரும் எடுத்துக்காட்டியுள்ளனர்என்று அறிக்கை வெளியிட்டு, பதிலடி கொடுத்தார். இந்தியாவின் ஆன்மாவைப் புரிந்துகொள்ள இந்தியைக் கற்க வேண்டும் என்று ஒன்றிய அரசின் அதிகாரவர்க்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அவ்வாறே ஒரே மதக்கொள்கை என்கிற ரீதியில் மக்களைக் கூறுபோடுகிறது.

நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமை அலுவலகத்தில் விஜயதசமி தினத்தில் உரையாற்றிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், “ஆன்மீகம்தான் இந்தியாவின் ஆன்மாஎன்றார். மதச்சார்பின்மை, ஜனநாயகம், கூட்டாட்சி போன்ற கோட்பாடு விழுமியங்களை அழித்து, இந்தியாவை மதவெறி இந்து ராஷ்டிராவாக மாற்ற எத்தணிக்கும் ஆர்.எஸ்.எஸ் கும்பலின் பேச்சுக்குப் பின்னால் மறைந்திருக்கும் மதவெறி ஆன்மீகம் நமக்கு புலப்படாமல் இல்லை.

எங்கும் எதிலும் ஊடுருவும் ஆர்.எஸ்.எஸ்

கடந்தகாலம் துவங்கி, இன்றுவரை இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளில் ஏகல் வித்யாலயா, வனவாசி கல்யாண் ஆசிரமம், ராஷ்ட்டிர சேவிகா சமிதி, வித்யாபாரதி மற்றும் விவேகானந்த கேந்திரா போன்ற அமைப்புகள் மூலம் இளைஞர்களை ஆர்.எஸ்.எஸ். கபளீகரம் செய்து, தங்கள் திட்டத்தை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. அங்குள்ள மாநில அரசின் உயர் கல்வி மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் அதனை தனது இலக்கை அடைய பயன்படுத்திக் கொள்கிறது. முன்னதாக, இப்பகுதிகளில் உயர்தர கல்வி கிறிஸ்தவ மிஷனரிகள் மூலம் மட்டுமே வழங்கப்பட்டது நினைவு கூரத்தக்கது. வடகிழக்குக்கு வெளியே டெல்லி, மும்பை மற்றும் பெங்களூரு போன்ற கல்வி மையங்களில் கூட, இன்று வடகிழக்கு மாணவர்களுக்காக திட்டங்களை ஆர்.எஸ்.எஸ் செயல்படுத்துகிறது.

கேரளாவில் ஆர்.எஸ்.எஸ் தனது இருப்பை 1942 களில் பதிவு செய்தது. அதன் செயல்பாடுகளை கோழிக்கோடு மீனவ சமூகங்கள் மூலம் தொடங்கியது. 2017 ஆம் ஆண்டளவில், ஒவ்வொரு நாளும் சுமார் 5000 ஷாகாக்கள் நடைபெறும் மாநிலங்களில் கேரளாவும் ஒன்றாக இருந்தது. மாநிலத்தில் எந்த இடத்திலும் வெற்றிபெற முடியாவிட்டாலும், 2019 லோக்சபா தேர்தலில் அதன் வாக்கு சதவீதம் 2014 இல் 10.85ரூ இருந்து 15.2ரூ ஆக உயர்ந்ததை உதாசீனப்படுத்த முடியாது.

இன்றளவும் மாநிலத்தின் சாதி மற்றும் மத உணர்வுகளில் இந்துக்களைத் தூண்டிவிடுவதில் இவ்வமைப்பிற்கு பெரும் பங்குண்டு. சபரிமலை உட்பட பல்வேறு சர்ச்சைகளின் வழியாக தொடர்ந்து தங்களது இருப்பை நிரூபிக்கத் துடிக்கிறது.

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்

சில தினங்களுக்கு முன் பாஜக -வின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தமிழ்நாடு வந்தார். அந்நாள் முதல் ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி பி.ஜே.பி பாசிச வெறியர்களின் வீடுகள், அலுவலகங்கள் என, சில இடங்களில் பெரிய சேதமில்லா வகையில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இதுபோன்ற யுக்திகள் ஆர்.எஸ்.எஸ் - பாஜக கும்பலுக்கு கைதேர்ந்த யுக்திகள் என்பதை நாம் அறிவோம். இவ் வன்முறையைக் காரணமாகக் கொண்டு, மாநிலம் முழுவதும் உள்ள இசுலாமியர்கள் குறிப்பாக, எஸ்.டி.பி. அமைப்பினர் என்ஐஏ விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டு, சிலர் கைது செய்யப்பட்டனர்.

விஜயதசமி, 75 ஆவது சுதந்திர தினம் ஆகியவற்றை முன்னிட்டு காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2 ஆம் தேதி, தமிழகம் முழுவதும் 50 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ் இயக்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. மகாத்மா காந்தி பிறந்தநாளன்று தங்களது அணிவகுப்பை நடத்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தேர்வு செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

உடனே, ஆர்.எஸ்.எஸ் பேர்வழிகள் காந்தியின் பிறந்தநாள் என்பதற்காக நாங்கள் அணிவகுப்பு நடத்தவில்லை. மாறாக, சுதந்திரதினத்தின் பவள விழாவைக் கொண்டாடவும், அம்பேத்கரின் நூற்றாண்டைக் கொண்டாடவும் (????), ஆர்.எஸ்.எஸ் அமைப்பு உருவாக்கப்பட்ட விஜயதசமியை கொண்டாடவும் இந்த நாளை தேர்வு செய்ததாக விதவிதமாக விளக்கமளித்தனர்.

புதுச்சேரியில் இதே நாளில் பாஜக கூட்டணி அரசு ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு அனுமதி வழங்கியது. நமச்சிவாயம் உள்ளிட்ட மூன்று மாநில அமைச்சர்களே ஆர்.எஸ்.எஸ் சீருடையுடன் கலந்துகொண்டனர். அங்கு காந்தியின் பிறந்தநாள் மற்றும் வள்ளலாரின் 200 ஆவது ஆண்டை கொண்டாட அணிவகுப்பு நடத்தியதாக ஆர்.எஸ்.எஸ் கூறியது.

இந்த நிலையில்தான், தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு நடைபெறும் அதே நாளில்

சமூகநல்லிணக்க பேரணி நடைபெறும் என, விசிக தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்தார். பிறகு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விசிக ஆகிய அமைப்புகள் இணைந்து, அக்டோபர் 2 ஆம் தேதி, தமிழகம் முழுவதும் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலியை நடத்த அறைகூவல் விடுத்ததோடு, அனைத்து ஜனநாயக முற்போக்கு சக்திகளும் இதில் இணைய வேண்டும் என அழைப்பு விடுத்தன.

ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு மற்றும் மனித சங்கிலி உட்பட, எந்த இயக்கத்திற்கும் அக்டோபர் 2 ஆம் தேதி அனுமதி இல்லை என, தமிழக காவல்துறை அறிவித்ததைத் தொடர்ந்து, சமூக நல்லிணக்க மனித சங்கிலி அக்டோபர் 11 ஆம் தேதி நடைபெற்றது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கிறித்தவ வாழ்வுரிமை இயக்கம் உட்பட 46க்கும் மேற்பட்ட கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள் மனித சங்கிலியில் பங்கேற்றனர்.

தமிழகத்தின் அமைதியைப் பாதுகாக்கவும், மதவெறி சக்திகளின் சவால்களை முறியடிக்கவும் மதநல்லிணக்கத்தையும், மதச்சார்பின்மையையும், உயர்த்திப் பிடிக்கவும், மனுநீதியை மாய்ப்போம் என முழக்கமிட்டு, நடைபெற்ற மனித சங்கிலி பேரணி அண்ணாமலை போன்ற வகையறாக்கள் மூலம் தமிழகத்தில் மதவெறியைத் தூண்ட நினைக்கும் ஆர்.எஸ்.எஸ் பாசிச வெறியர்களுக்கு விடுக்கப்பட்ட மரணஅடியாகவே அமைந்தது.

இனியும் அலட்சியம் வேண்டாம்

தமிழ்நாடு பெரியார் மண்தான். மாற்று கருத்தில்லை. ஆனால், இன்று தமிழகத்தின் கிராமங்கள் வரை பாசிசம் ஊடுருவியிருக்கிறது. நம்மையும் சுற்றிப்பரவியிருக்கிறது என்கிற விழிப்புநிலை அவசியம். உதாரணத்திற்கு 100 நாட்கள் வேலைத்திட்டத்திற்கு பெயர் என்ன? யார் கொண்டு வந்தது? என்று, கேட்டால் மோடி கொண்டு வந்தார் என்கின்றவர்கள் தான் இங்கு பெரும்பாலும் இருக்கிறார்கள்.

ஊடக மாயை! குக்கிராமம் எனினும் தங்களது பொய்ப்பிரச்சாரங்களை பாஜக கச்சிதமாய் பரப்பிக் கொண்டிருக்கிறது. அனைத்து திட்டங்களுக்கும் மோடி பெயரை வைத்து, அரசியல் செய்யும் யுக்தியை சமீபத்தில் தமிழக நிதியமைச்சரும் குற்றம் சுமத்தி, பேட்டியளித்தார்.

தொழிலாளர்கள் இடம் பெயர்ந்து, வேலை செய்வது ஒரு முக்கிய பிரச்சனை. வடமாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு பலரும் வருகிறார்கள். தொழிலாளர்களை நாம் குற்றம் சாட்டவில்லை. எல்லா தொழில் நிறுவனங்களிலும் வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். அவர்கள் அணியும் காவி உடை துவங்கி, நாட்டார் தெய்வமான காளியம்மன் கோயிலுக்குச் சென்றாலும், ஸ்ரீராம ஜெயம் சொல்வதையும் எப்படி கணிப்பது?

மோடிஅமித்ஷா அல்லது பாஜக ஆட்சியைப் பற்றி விமர்ச்சித்தாலே அவர்களிடம் கோபம் பெருக்கெடுப்பது எதன் வெளிப்பாடு?

மூளைச்சலவை நன்கு நடந்திருக்கிறது என்றுதானே பொருள் கொள்ள முடியும்.

நாட்டார் தெய்வ வழிபாட்டு முறைகளில் தொடர்ந்து, பார்ப்பனிய கருத்துகள், இந்து மதவெறி கருத்துகள் ஊடுருவிக் கொண்டேயிருக்கிறது.

தமிழகத்திலும் பல தனியார் பள்ளிகளில் ஷாகா பயிற்சி நடக்கிறது. கடந்த வாரம் கோவை மாவட்டம், ஆர்எஸ்புரம் பகுதியிலுள்ள மாநகராட்சி பள்ளி வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பயிற்சி நடப்பதாக புகைப்படம், வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியதும், அதனை எதிர்த்து தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தைக் காவிமயமாக்கத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ்-ன் சூழ்ச்சிகளை மக்கள் முன் தொடர்ந்து அம்பலப்படுத்த வேண்டிய தேவை அதிகமாகவே உள்ளது.

தேவை எச்சரிக்கையும் ஒன்றிணைவதும்

இந்தியக் குடிமைப்பணி தேர்வில் தேர்ச்சி பெற்று 4000 ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் முக்கிய அதிகாரிகளாக ஆனது எப்படி? பிரதமர் மோடி பெயரளவில் மட்டுமே பிரதமராக பதவி வகிக்கிறார். இந்திய நாட்டின் பணிகள் அனைத்தும் ஆர்எஸ்எஸ் தலைவர்களின் திட்டபடிதான் நடக்கிறது. இங்ஙனம் சமீபத்தில் கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி கேள்வி எழுப்பினார்.

பாஜக ஆட்சிக்கு வந்தபின் நாடு சந்திக்கும் அச்சுறுத்தல்கள், ஏற்றத்தாழ்வுகள், வேலையின்மை, வறுமை, பசி பட்டினி, உயிர்க்கொலை அதிகரிப்பு... யாவும் மிகையல்ல; காவல்துறை, இராணுவம், நீதித்துறை என, அனைத்துத் துறைகளிலும் தனது ஆட்களை நிரப்பி, எவ்வித தடையுமின்றி இந்துராஷ்டிரத் திட்டங்களை நிறைவேற்றி வருகின்றது என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.

இந்து ராஷ்டிரத் திட்டத்திற்குரிய நிதி ஆதாரங்களை அம்பானி-அதானி கூட்டுக்களவாணிகள் வழங்கி வருகின்றனர். எனவே, நமது ஒன்றிணைதல் என்பது ஆர்.எஸ்.எஸ் - பி.ஜே.பி, அம்பானி-அதானி பாசிஸ்டுகளின் ஒவ்வொரு மக்கள் விரோத நடவடிக்கைக்கும் எதிரான அணிதிரட்டுதல்களாக மாற வேண்டும். ஆர்.எஸ்.எஸ் - பா.., அம்பானி-அதானி கும்பலை நாம் வீழ்த்தவில்லை என்றால் நாம் வீழ்ந்து விடுவோம்.

எப்படி சீனாவில் அபின் யுத்தம் நடந்ததோ, அதுபோல அதானி துறைமுகத்தில் கஞ்சா கடத்தப்படுகிறது. வேலை இல்லா திண்டாட்டம் பெருகிவரும் சூழலில்தான், கஞ்சா போன்ற சீரழிவு கலாச்சாரத்தை மாணவர்கள் மத்தியில் பரப்பி சிந்திக்க விடாமல், போராடவிடாமல் செய்வதுதான் அவர்களின் சதித்திட்டம்.

இந்தியாவில் இப்போதைய தேவை அனைத்து மக்களுக்கும் கல்வி, சுகாதாரம், அடிப்படைவசதிகளை மேம்படுத்துவது, பன்மைத்துவத்தைக் காப்பாற்றுவது. இதை மூடி மறைக்க மக்களிடம் மத ரீதியான பகைமையை தூண்டிவிட்டுக் கொண்டேயிருப்பார்கள் இந்த ஆர்.எஸ்.எஸ் விஷப் பாம்புகள். ஹிட்லரின் நாசிசக் கொள்கை என்பது ஒரே இனம், ஒரே மொழி. இங்கும் இதுதான் நடக்கிறது. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கட்சி, ஒரே ஆட்சி பன்மைத்துவத்திற்கு இடமில்லை. இதுதான் பாஜகாவை இயக்கும் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம்.

இனி, தேர்தல் அரசியலில் இவர்களை வீழ்த்த முடியுமா? பாஜக தவிர்த்து இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளும் சேர்ந்து வீழ்த்தினாலும் நிலையாக ஆட்சி நடத்த முடியுமா? என்கிற கேள்விக்கான பதிலும் தொக்கியே நிற்கிறது. அந்த அளவிற்கு இந்த அரசு கார்ப்பரேட் நலன் கொண்ட அரசாக இயங்குகிறது.

பணத்தால் எதையும் சாதிக்கலாம் என்கிற வறட்டுகௌரவம் அதிகமாவே இருப்பதை காலங்கள் நமக்கு காண்பிக்கிறது. இந்நிலையில் எல்லோரும் ஓரணியாய் இணைவது அவசியமாகிறது. அரசியல் கட்சிகளுக்கிடையே நிறைய முரண் இருக்கலாம், நிறைய பகை இருக்கலாம். ஆனால், நம் இந்தியாவின் ஆன்மாவைக் காப்பாற்ற அடிப்படை முரணாகவும், பிரதான முரணாகவும் ஆர்.எஸ்.எஸ் சனாதனமே இருக்கிறது என்பதை ஒருபோதும் மறவோம். இதனை உலக நாடுகளே கண்டுபிடித்து எச்சரிக்கிறது.

சமீபத்திய ஓர் எச்சரிக்கைதான் அமெரிக்க வெளியுறவுத்துறை தனது நாட்டுக் குடிமக்களுக்கு அண்மையில் வழங்கியிருக்கும் புதிய பயண ஆலோசனை: “பயங்கரவாதம், அமைதியின்மை காரணமாக ஜம்மு மற்றும் காஷ்மீர் (கிழக்கு லடாக் மற்றும் லே தவிர) பயணம் செய்ய வேண்டாம். இந்தியாவில் பலாத்கார சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பாலியல் வன்கொடுமை போன்ற வன்முறைக் குற்றங்கள் சுற்றுலாத் தளங்களிலும், பிற இடங்களிலும் அதிகமாக நடக்கிறது. சுற்றுலா இடங்கள், போக்குவரத்து மையங்கள், சந்தைகள், வணிக வளாகங்கள் மற்றும் அரசு அலுவலர்களைக் குறிவைத்து எவ்வித முன்னெச்சரிக்கையும் இல்லாமல் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும். கிழக்கு மகாராஷ்டிரா, வடக்கு தெலுங்கானாவில் இருந்து மேற்குவங்கம் வரை இருக்கும் அமெரிக்கக் குடிமக்களுக்கு அவசரக்கால உதவிகளை அதிகம் வழங்க முடியாது. ஏனென்றால், இந்த பகுதிகளுக்குச் செல்ல அமெரிக்க அதிகாரிகள் சிறப்பு அனுமதியைப் பெற வேண்டும்என்று, குறிப்பிட்டுள்ளது.

இதுதான் உலகளவில் இந்தியாவின் தற்போதைய லட்சணம்.

இதை நாம் அலட்சியம் செய்யலாமா?