(கடந்த ஆகஸ்டு மாத இறுதியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தை டெல்லியின் முன்னாள் துணை ஆளுநர் நஜூப் யுங், இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைவர் சயத் குரோஷி, அலிகார் முஸ்லீம் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் சமீர் உதின் ஷா, ராஷ்டிரிய லோக் தள் அமைப்பின் தேசியத் தலைவர் ஷாகித் சித்திக், தொழிலதிபர் ஷையத் ஷெர்வானி ஆகிய முஸ்லீம்கள் சந்தித்து உரையாடினர். இது குறித்த புகழ்பெற்ற இணையத்தள இதழான The Wire-ல் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்)
புகழ்பெற்ற இசுலாமியர்களுக்கும் இசுலாமிய வெறுப்பு அமைப்பின் தலைவருக்கும் இடையேயான அண்மைக்கால சந்திப்பு இந்துத்துவாவின் தொடர் பயணத்திற்கு கொடுக்கும் அர்த்தம் என்ன?
ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) தலைவரான மோகன் பகவத்தை சில பிரபல இசுலாமியர்கள் சமீபத்தில் சந்தித்தனர். அவர்களில் சிலர் அரசு இயந்திரத்தில் வகித்த உயர் பதவிகளுக்கும், அவர்களின் பெருமைக்கும் நிறைய தொடர்பு உள்ளது - ஒருவர் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர், மற்றொருவர் டெல்லியின் முன்னாள் லெஃப்டினன்ட் கவர்னர், மூன்றில் ஒருவர் இராணுவத்தின் துணைத் தலைவர்.
அரசாங்கத்தில் எந்தப் பதவியையும் வகிக்காவிட்டாலும், அவர்கள் சந்தித்த நபரும் புகழ்பெற்றவர். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிறரைக்கொண்டு தற்போது இந்திய அரசை இயக்கும் ஓர் அமைப்பிற்கு அவர் தலைவர்.
ஆகஸ்டு மாத இறுதியில் புகழ் பெற்ற இசுலாமியர்கள் மோகன் பகவத் உடனான சந்திப்பு குறித்து, சில தகவல்களை வழங்கினர். செய்தித்தாள் கட்டுரைகள் மற்றும் வீடியோ நேர்காணல்கள் மூலம், அவர்கள் சந்திப்பின் முக்கியத்துவத்தையும், அவருடன் சந்திப்பில் ஈடுபடுவது ஏன் அவசியம் என்று அவர்கள் நினைத்தார்கள் என்றும் விளக்கினார்கள்.
ஆச்சரியம் என்னவென்றால், அவர்கள் பார்வையிட்ட புகழ்பெற்ற நபர் இந்த சந்திப்பைப் பற்றி, ஒரு வார்த்தைகூட சொல்ல வேண்டிய அவசியம் இருப்பதாக கருதவே இல்லை. அவரின் உதவியாளர் ஒருவர் விளக்கியது போல், ‘எல்லாவகையான மக்களும் அவரைப் பார்க்க வருகிறார்கள்’. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்த உரையாடல் அத்தகைய ஒரு சந்திப்பாகும். மேலும், இதில் கூடுதலாக பேசுவதற்கும் அர்த்தம் கொள்வதற்கும் ஏதுமில்லை என்பதாகும்.
யார் யாரை சந்திக்க அதிக ஆர்வமாக இருந்தார்கள் என்பதை இதுவே விளக்குகிறது.
ஆர்.எஸ்.எஸ் மேலிடத்துட னான அவர்களின் உரையாடல் மிகவும் சாதகமாக இருந்ததாக மேற்படி பிரபல இசுலாமியர்கள் ஊடகங்களுக்குத் தெரிவித்தனர். அவர்கள் சொல்வதை எந்த இடையூறும் இல்லாமல் பகவத் அமைதியாகக் கேட்டார். அவர்கள் பேசும் பேச்சைக் கேட்பதில் அவர் மிகவும் தீவிரமாக இருக்கிறார் என்பதை அவருடைய கவனம் அவர்களை நம்ப வைத்தது.
ஏன் முஸ்லீம்கள் அதிக எண்ணிக்கையில் இனப்பெருக்கம் செய்யமுடியாது என்று அவர்கள் விளக்கும்போது, ஒரு சந்தர்ப்பத்தில் அவர் வெளிப்படையாக சிரிக்கவும்கூட செய்தார். இது பெரும்பாலும் ஆர்.எஸ்.எஸ் இசுலாமிய
சமூகத்தின்மீது சுமத்தும் குற்றச்சாட்டு. இசுலாமியர் இனப்பெருக்கத்தின் வழியாக இந்துக்களை விட மக்கள்தொகையை அதிகரிக்க செய்யும் நடவடிக்கையாக கருதப்படுகிறது. பகவத்தின் சிரிப்பு இந்த முக்கியமான விஷயத்தையும் அவர் கூர்ந்து கவனித்தார் என்பதை காட்டுவதாக பொருள் கொள்ள வேண்டும் என்பதாகும்.
எனவே, இதன் பொருள் என்ன? இசுலாமியர் மக்கள் தொகையை பெருக்க சதிசெய்கிறார்கள் என்று இந்துக்களிடம் சொல்வதை நாளை முதல் ஆர்.எஸ்.எஸ் நிறுத்துமா? பிறக்கும் ஒவ்வொரு முஸ்லீமும் இந்துக்களுக்கு அச்சுறுத்தலாகப் பார்க்கக்கூடாது என்று அது சொல்லுமா?
எனவே, முதலில் கவனத்தில் கொள்ள வேண்டியது இதோ.
சங்கப் பிரமுகரின் அறை மிகவும், எளிமையாக இருந்ததால் பகவத்தின் பார்வையாளர்கள் பெரிதும் ஈர்க்கப்பட்டனர். அவரும் நேரம் தவறாமல் நடந்துகொண்டார். அவருடைய எளிமையும், நேரந்தவறாமையும் அவர்களுக்கும், நமக்கும் எவ்வளவு அசாதாரணமான குணங்களாகவும், அரிதானவைகளாகவும் ஆகிவிட்டன என்பதை காட்டுகிறது.
மறுபுறம், எளிமை, ஒழுக்கம், பணிவு மற்றும் பல பண்புகளைக் கொண்டிருப்பதன் மூலம், வெறுப்பு சித்தாந்தத்தைப் பரப்புவதற்கான உரிமத்தைப் பெறலாம் என்றும் அது உங்களுக்குச் சொல்கிறது.
எளிமையான வாழ்க்கை வாழ்ந்த காந்தி, ஆர்.எஸ்.எஸ் - ன் ஷாகாக்களில் காட்டப்படும் எளிமை மற்றும் ஒழுக்கத்தால் சிறிதும் குழப்பமடையவில்லை. ஒழுக்கமும் நாஜிகளின் நற்பண்பு என்று, அவர் தனது நண்பர்களை எச்சரித்தார்.
இந்தச் சந்திப்பு ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதப்பட்டதற்கு காரணம், ஒருவேளை இஸ்லாமிய வெறுப்பு அமைப்பின் தலைவரைப் பார்ப்பவர்கள் இசுலாமியர்கள் என்பதால் இருக்கலாம். ஆனால், அவர்கள் முன்னாள் அரசு அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் என்பதால் அதற்கான முக்கியத்துவம் அதிகமாகிறது. அவர்களின் மேன்மை இந்த சந்திப்பை முக்கியத்துவம் வாய்ந்ததாக மாற்றியது. அவர்கள் இந்திய அரசின் தீர்க்கமான பதவிகளில் பணியாற்றியவர்கள்.
இந்த மேன்மையே ஆர்.எஸ்.எஸ்-ஆல் அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகிறது என்பது தூதுக்குழுவுக்குத் தெரியுமா, அவர்கள் இந்த விஷயத்தை பகவத்திடம் எழுப்பினார்களா?
ஆர்.எஸ்.எஸ் - இன் மிக உயர்ந்த முடிவெடுக்கும் அமைப்பான அகில பாரதிய பிரதிநிதி சபாவால் மார்ச் 2022 இல் ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிக்கை, அரசாங்க இயந்திரத்திற்குள் ஊடுருவ ஒரு ‘குறிப்பிட்ட சமூகத்தின்’ மோசமான சதி குறித்து கவலைதெரிவித்தது.
ஆர்.எஸ்.எஸ் தலைவரைச் சந்திக்கச் சென்றவர்கள் அந்தச் சங்கம் பேசும் அதே ‘குறிப்பிட்ட சமூகத்தைச்’ சேர்ந்தவர்கள். சங்கத்தின் பார்வையில் ஆரம்பகால ‘ஊடுருவிகள்’ அவர்கள். மேலும், அவர்களைப் போன்ற அதிகமானோரை அரசு இயந்திரத்தில் ஆர்.எஸ்.எஸ் விரும்பவில்லை.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சுதர்சன் நியூஸ் கூறியதும் இதே சங்கத்தின் அறிக்கை போன்றது தான். அது இசுலாமியர்களை ‘யுபிஎஸ்சி ஜிஹாத்’, ‘வேலை ஜிஹாத்’ மற்றும் ‘கல்வி ஜிஹாத்’ என்று குற்றம் சாட்டியது. இசுலாமியர்கள் அரசு வேலைகளை பிடித்து அரசு இயந்திரத்திற்குள் ஊடுருவ வசதி செய்கிறார்கள் என்று இந்த விஷத்தை இந்த சேனல் பரப்ப முயன்றது. செப்டம்பர், 2020 இல் உச்ச நீதிமன்றம், அதை நிறுத்த உத்தரவிட்டது.
எனினும், ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, ஆர்.எஸ்.எஸ். முறையான எழுத்துப்பூர்வ அறிக்கையில், இந்த போலிக் குற்றச்சாட்டை மீண்டும் கூறுகிறது. ஒரு இசுலாமிய நடுத்தரவர்க்கம் உருவாவதை சங்கம் எதிர்க்கிறது. ஏனெனில், நடுத்தர வர்க்கத்தினர் குரல் கொடுக்க முடியும் மற்றும் அந்தக் குரல் தங்களுக்கு மட்டுமல்ல; பரந்த சமூகத்தின் சார்பாகவும் ஒலிக்கும்.
இந்திய சமூகத்தில் முடிவெடுக்கும் நிலையை இசுலாமியர் அடைவதை சங்கம் விரும்பவில்லை. அதற்குப் பதிலாக, அவர்கள் இந்துக்களுக்கு அடிபணிந்து, ஆர்.எஸ்.எஸ் - இன் விருப்பப்படி தங்கள் வாழ்க்கையை வாழ வேண்டும். ஆர்.எஸ்.எஸ்.க்கு வாய்ப்புக் கிடைக்குமேயானால், இசுலாமியர் மேன்மை பெறுவதை அனுமதிக்க மாட்டார்கள். சில சதாப்தங்களுக்கு முன்பு இப்பொழுது சக்திவாய்ந்ததாக இருப்பதுபோல் ஆர்.எஸ்.எஸ் இருந்திருந்தால், பகவத்தை சந்தித்த ஐந்து புகழ் பெற்ற இசுலாமியர்கள், அவர்கள் முதலில் பெற்றிருந்த பதவிகளை அடைய ஒருபோதும் அனுமதித்திருக்கமாட்டார்கள்.
இந்த கருத்து எப்போதாவது விவாதத்தில் வந்ததா என்பது நமக்குத் தெரியாது. ஆனால், இந்த சந்திப்பு, ஒரு தொடர் செயல் முறையின் ஆரம்பம் மட்டுமே என்று நாம் அறிய வருகிறோம். எனவே, அவர்களின் அடுத்த சந்திப்பில், ஐவரும் ஆர்.எஸ்.எஸ் இன் அந்த அறிக்கையை திரும்பப் பெற கோரிக்கை வைப்பார்கள் என்று நம்புவோம்.
இசுலாமியர்கள் இந்துக்களை ‘காஃபிர்கள்’ என்று அழைப்பதால், சங்கத் தலைவர் வருத்தம் அடைவதாகச் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறோம். எனது நீண்ட வாழ்க்கையில் - நான் ஒரு இசுலாமிய வட்டாரத்தில் வளர்க்கப்பட்டேன் - எந்த இசுலாமியரும் என்னை காஃபிர் என்று அழைத்ததாக எனக்கு நினைவில் இல்லை. மாறாக, பள்ளிகளிலும், தெருக்களிலும், அலுவலகங்களிலும் தங்களுக்குப் பயன்படுத்தப்பட்டு வரும் எண்ணற்ற இழிவான வார்த்தைகளை பல இசுலாமியர்கள் நினைவு கூருகிறார்கள். இசுலாமியர்கள் ஏன் இப்படிப் பேசப்படுகிறார்கள் என்று இந்தக் குழு குறை கூறியதா? என்றும் தெரியவில்லை அல்லது ஆர்.எஸ்.எஸ் தலைவர் அதைக் குறிப்பிடும்போது, சிரித்தாரா? என்றும் தெரியவில்லை.
முஸ்லீம்கள் மாட்டிறைச்சி சாப்பிடுவதை இந்துக்கள் மோசமாக உணர்கிறார்கள் என்று, பகவத் தனது பார்வையாளர்களிடம் கூறியதாக தெரிகிறது. குழு இதை ஒப்புக்கொண்டு, இசுலாமியர்கள் மற்ற புரதசத்துக்களை தேர்ந்தெடுக்கலாம் என்று கூறியுள்ளது. ஏற்கனவே பல மாநிலங்களில் பசுவதைக்கு எதிரான சட்டம் அமலில் உள்ளதாகவும், முஸ்லீம்கள் இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
கேரளா, கோவா, நாகாலாந்து போன்ற மாநிலங்களில் மாட்டிறைச்சி உண்பது குறித்து, சங்கமும் பாரதிய ஜனதாவும் ஏன் வாய் திறப்பதில்லை என்று கேட்டால் ஆச்சரியமாக இருக்கிறது. சங்கத்தில் பசுவை நேசிப்பது முஸ்லீம்களுக்கு எதிரான வெறுப்பை பரப்புவதற்கும் வன்முறையை நியாயப்படுத்துவதற்கும் ஒரு சாக்கு மட்டுமே என்பது இதிலிருந்து தெளிவாகிறதே தவிர, மாட்டிறைச்சி சாப்பிடுவது முஸ்லீம்கள் மட்டும் அல்ல; இந்து மதத்திலும் பல சமூகங்கள் அவ்வாறு செய்கின்றனர்.
இந்த காலத்தில் ஹிட்லரைப் போல், செயல்படுவது மிகவும் கடினம் என்பது ஆர்.எஸ்.எஸ்-க்கு தெரியும். ‘இறுதி தீர்வு’ என்ற ஆர்.எஸ்.எஸ் இன் கருத்து கவர்ச்சிகரமானதாக இருக்கலாம். ஆனால், அது நடைமுறைக்கு உகந்தது அல்ல; மற்றும் அதை அடைவதற்கான விலை அதிகம். எனவே, இசுலாமியர்களை என்றென்றும் இரண்டாம் தர குடிமக்களாக மாற்றுவதே சிறந்த மற்றும் மலிவான தீர்வு என்று ஆர்.எஸ்.எஸ் கருதுகிறது.
சில வருடங்களுக்குமுன் ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் ஆர்.எஸ்.எஸ் அறிவு ஜீவி ஒருவர் கூறியது எனக்கு நினைவிருக்கிறது. அது முகரம் பண்டிகை காலம். டெல்லியில் நடந்த ஒரு சம்பவத்திற்குப் பிறகு, நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். அதில் ஒரு தாஜியாவை (முகரம் பண்டிகையின்போது இசுலாமியர் ஊர்வலமாக எடுத்துச்செல்லும் தேர் போன்ற அமைப்பு) டெல்லியில் உள்ள ஒரு பகுதியின் சதுக்கத்திற்கு கொண்டு வரவிடாமல் இசுலாமியர் தடுக்கப்பட்டனர். அப்போது பேசிய ஆர்.எஸ்.எஸ் அறிவு ஜீவி, இசுலாமியருக்கு இந்தியாவில் சுதந்திரம் கிடைக்கும். ஆனால், சில கட்டுப்பாடுகளுடன் என்று, மிகவும் பணிவுடன் கூறினார். அந்த எல்லைக்குள் இருக்கும் வரை இசுலாமியருக்கு எந்த பிரச்சனையும் இருக்காது.
ஜெர்மனியின் மாதிரியை மீண்டும் இங்குசெய்ய முடியாது என்பது ஆர்.எஸ்.எஸ்-க்குத் தெரியும். இசுலாமியர்களையும், கிறிஸ்தவர்களையும் நிரந்தரமாக அடிமைப்படுத்திய மக்களாக சங்கம் வகுத்துள்ள வாழ்க்கை முறைப்படி வாழ, ஒப்புக்கொள்கிறவர்களாக மாற்றுவதே நல்லது என்று, சங்கம் நினைக்கிறது. விஸ்வ ஹிந்து பரிஷத் அல்லது பஜ்ரங் தள் போன்ற தீவர அமைப்புகள் தங்களுக்கு எதிராக வன்முறையைப் பயன்படுத்துவதில்லை என்பதை உறுதிப்படுத்த விரும்பினால், இந்துக்களை பொறுமை இழக்கச் செய்யும் செயல்களைச் செய்வதை இசுலாமியர் நிறுத்த வேண்டும்.
இந்த சந்திப்பின் போது, இசுலாமியர் படுகொலை செய்யப்பட மாட்டார்கள் என்ற சில உறுதி மொழிகளை தூதுக்குழுவினர் பெற முடிந்ததாக சொல்லப்படுகிறது. அதன் உறுப்பினர்களில் ஒருவர், ‘இந்தியா, ஒரு இந்து ராஷ்டிரம்’ என்பதையும் ஏற்றுக்கொண்டார்.
இருப்பினும், இந்தக் குழுவுக்கும் - ஆர்.எஸ்.எஸ்-க்கும் முன் உள்ள பிரச்சனை என்னவென்றால், பெரும்பான்மையான முஸ்லீம்கள் இந்தியக் குடியரசில் தங்களுக்குரிய உரிமைகளை மீட்டெடுப்பதற்காகத் தங்களின் எல்லா சக்திகளையும் கொண்டு, இன்னும் போராடி வருகின்றனர். சம உரிமை உள்ள மதச்சார்பற்ற இந்தியாவில்தான் வசிக்கிறோம் என்ற எண்ணத்தை இசுலாமியர்கள் இன்னும் கைவிடவில்லை.