ராகுல் காந்தியின் “பாரத ஜோடோ யாத்திரை” தேசிய ஒற்றுமையை இலக்காகக் கொண்டு நடத்தப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் 137 ஆண்டு கால வரலாற்றில், இப்போது இந்த யாத்திரை மிகவும் தேவைப்படுகிறது. அரசியல் வலிமை இழந்துக்கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில் காங்கிரஸ் கட்சியை ராகுல் காந்தியின் தேசிய ஒற்றுமை யாத்திரை வலிமை பெறச் செய்யும் என்று நம்பப்படுகிறது.
பா.ஜ.க. வலிமை நிறைந்த கட்சியாக மத்தியிலும், மாநிலங்களிலும் உள்ளது. பாராளுமன்றத்தில் மக்கள் நலனுக்கு எதிரானதாக இருந்தாலும், தாங்கள் விரும்பும் சட்டங்களை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறது. மாநிலங்களில் தொடர்ந்து அநீதியாக ஆட்சியைப் பிடிக்கிறது. இந்திய ஊடகங்களை தன் வசமாக்கியுள்ளது. அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் தனி அதிகாரமிக்க அமைப்புகளான சி.பி.ஐ., என்.ஐ.ஏ, இ.டி, ஐ.டி. போன்ற அமைப்புகளை ஏவல் அமைப்புகளாக செயல்பட வைக்கிறது. நீதிமன்றங்களிலும் பல வழக்குகளில் தீர்ப்புகள் ஆளுங்கட்சிக்கு சார்பாக அமைக்கிறது. இவ்வாறு ஜனநாயக நீதி நிலை நாட்டுவதற்கான கதவுகள் அடைக்கப்பட்டதால் இந்த தேசிய ஒற்றுமை யாத்திரையில் நேரிடையாக மக்களிடம் செல்கிறது. மக்கள் நீதியான தீர்ப்பை 2024 பாராளுமன்றத் தேர்தலில் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாரத் ஜோடோ யாத்திரை
கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி பாரத் ஜோடோ யாத்ரா என்ற இந்திய ஒற்றுமைப் பயணத்தைத் தொடங்கினார் ராகுல் காந்தி. கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை, 150 நாள்கள் 3570 கிலோமீட்டர் பயணம் செய்து ஸ்ரீநகரில் முடிவடையும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தது. யாத்திரை தொடங்கிய மூன்று நாள்களில் கேரளாவை வந்தடைந்த ராகுல், அங்கே 18 நாள்கள் யாத்திரை மேற்கொண்டார். செப்டம்பர் 30 ஆம் தேதி, கர்நாடகாவில் யாத்திரையைத் தொடங்கிய ராகுல், இரண்டு வாரங்களாக கர்நாடகாவில் சுழன்றடித்து வருகிறார். கர்நாடக மாநிலத்தில் மொத்தமாக 21 நாள்கள் யாத்திரை செல்ல ராகுல் திட்டமிட்டிருக்கும் நிலையில், நாளுக்கு நாள் அதிகரித்துவரும் ஆதரவைப் பார்த்து காங்கிரஸாரே வியந்து நிற்கிறார்கள். பா.ஜ.க ஆட்சியில் கார்ப்பரேட் பணக்காரர்கள் வளர்ந்து உலக பணக்காரர் வரிசையில் முன்னிலையில் உள்ளனர். ஏழைகள், மேலும் ஏழ்மையில் தள்ளப்படுகின்றன. மதத்தின் பெயரால் மக்களை பிரிக்கின்றனர். இந்த யாத்திரையில் மக்கள் அனைவரும் ஒற்றுமையாகவேண்டும். சமய நல்லிணக்கத்தையும், சமத்துவத்தையும், காக்கவேண்டும் என்ற ராகுலின் குரல் மக்களை ஈர்க்கிறது. குறிப்பாக, இளைஞர்கள் பெருவாரியாகக் கலந்துகொள்வது நம்பிக்கை அளிக்கிறது. ஆனால், ஊடகங்கள் தேசிய ஒற்றுமை யாத்திரையை இருட்டடிப்பு செய்கின்றன.
காங்கிரஸ் இன்றைய நிலை
2014 நாடாளுமன்றத் தேர்தலில் வீசிய மோடி அலையால், 543 தொகுதிகளில் வெறும் 44 தொகுதிகளில் மட்டுமெ வெற்றிபெற்றது காங்கிரஸ். 2019 நாடாளுமன்றத் தேர்தலில், அதைவிடக் கூடுதலாக எட்டு இடங்கள் அதிகம் பெற்று 52 தொகுதிகளில் வென்றது.
2014-க்குப் பின்னர் சரியான தலைமை இல்லாததால், அதிக எண்ணிக்கையிலான தலைவர்கள் கட்சியைவிட்டு விலகிச் சென்றிருக்கிறார்கள். 2019 நாடாளுமன்றத் தேர்தல் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல், அப்போதைய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியே தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இதுவே காங்கிரஸ் தொண்டர்களிடம் எஞ்சியிருந்த உற்சாகத்தையும் வற்றச்செய்தது. பல ஆண்டுகளாக ஆட்சி செய்த சில மாநிலங்களில், இன்று காங்கிரசுக்கு ஒரு எம்.எல்.ஏ கூட இல்லை என்பதுதான் நிஜம்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் 10 சதவிகித இடங்களைக்கூடப் பிடிக்காததால் இந்திய நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சி என்று ஒன்றே இல்லை என்றாகிவிட்டது. இருப்பினும், பா.ஜ.க-வுக்கு அடுத்து அதிக இடங்களைக் கைப்பற்றிய கட்சி என்கிற வகையில் மட்டுமே, பரிதாப எதிர்க்கட்சியாகச் செயல்பட்டுவருகிறது காங்கிரஸ். எதிர்க்கட்சியின் பணிகளில் முக்கியமானது மக்களுக்கு எதிரான சட்டங்களை அரசு கொண்டுவரும்போது களத்தில் இறங்கிப் போராடுவதும், அந்தச் சட்டங்களைத் திரும்பப் பெற வைப்பதும்தான். ஆனால், இந்தியாவில் சி.ஏ.ஏ, புதிய வேளாண் சட்டங்கள் உள்ளிட்ட மக்கள் விருப்பத்துக்கு எதிரான சட்டங்கள் அமல்படுத்தப்பட்டபோது, மக்களே களத்தில் இறங்கிப் போராடினர். அவர்களுக்கு பெயரளவுக்கு மட்டுமே ஆதரவு தந்தது காங்கிரஸ் கட்சி.
இந்த அலட்சியத்தால்தான் இந்தியாவின் 31 மாநிலங்களில் வெறும் இரண்டில் மட்டுமே ஆட்சி செய்துவருகிறது காங்கிரஸ். அங்கும் உட்கட்சிப்பூசல்கள் கட்சியைக் கறையான்களாக அரித்துவருகின்றன. சொந்தக் கட்சியினரையே தவறவிட்டுக் கொண்டிருக்கும் காங்கிரஸ் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒரு குடையின்கீழ் எப்படி ஒன்றிணைக்கப்போகிறது என்பதுதான் பலரின் கேள்வியாக உள்ளது. பழம்பெரும் காங்கிரஸ் தலைவர்கள் எதிர்ப்பை தெரிவிக்கின்றனர். எதிர்க்கட்சிகள் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமைக்க தயங்குகின்றன. இந்நிலையில் தேசிய ஒற்றுமை யாத்திரை மாற்றம் கொண்டுவரும்.
காங்கிரஸ் தலித் தலைமை
நேரு குடும்பத்தை சாராதவர் காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார். பலமுறை கட்சித்தலைவர்கள் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். காங்கிரஸ் வரலாற்றில் 5 முறை மட்டுமே போட்டியுடன் தலைவர் பதவிக்கான தேர்தல் நடந்துள்ளது. கடந்த 1939 இல் நடந்த தேர்தலில் மகாத்மா காந்தி, பி. சீதாராமய்யா மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் சுபாஷ் சந்திர போஸ் வெற்றி பெற்றார். 2000 ஆம் ஆண்டு, நடந்த தேர்தலில் சோனியா காந்திக்கும் ஜிதேந்திர பிரசாதாவுக்குமிடையே போட்டி ஏற்பட்டது. இதில் சோனியா 7,400 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
நீண்ட காலமாக நிரந்தர தலைவர் இல்லாமல் காங்கிரஸ் உள்ளது. அதிருப்தி ஜி 23 காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து தலைமை மாற்றம் வேண்டும் என்று வலிந்து கூறிவந்தனர். காந்தி குடும்பம் அல்லாதவர் தேர்ந்தெடுக்கப்படுவார். இவ்வேளையில் ராகுல் காந்தியின் தேசிய ஒற்றுமை யாத்திரை காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் ஆதரவை பெருக்கும். திரு. மல்லிகார்ஜூன கார்கே காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் இவர் மிகச் சிறந்த தலித்தலைவர், அம்பேத்கரின் வாரிசு, தேர்தலில் தொடர்ந்து வெற்றிகண்டவர், நேர்மையான அரசியல்வாதி. நீண்ட அரசியல் அனுபவம் கொண்டவர். இந்துத்துவாவை எதிர்த்து புத்த மதம் தழுவியவர். சீதாராம் கேசரிக்கு அடுத்துவரும் தலித் காங்கிரஸ் தலைவர். இவரின் தலைமையில் காங்கிரஸ் வளரும்.
ஜனநாயக ஆட்சி
மாநில காங்கிரஸ் தலைவர்கள் இந்த யாத்திரையை தொடர்ந்து மக்கள் மத்தியில் தீவிர பணியாற்ற வேண்டும். மக்களை மதத்தின் அடிப்படையில் பிரிக்கும் மதவாக பா.ஜ.க-வுக்கு எதிராக இத்தேசிய ஒற்றுமை யாத்திரை மக்களை ஒன்று சேர்க்கவேண்டும். அனைத்து கட்சிகளும் ஒன்றாக இணைந்து மதவாதக்கட்சியை வரும் 2024 ஆண்டு பாராளுமன்றத்தில் வீழ்த்தினால் மட்டுமே ஜனநாயக ஆட்சி மலரும்.