நாம் கட்டுகின்ற அனைத்தும் ஒருநாள் உடையும் என்று தெரிந்தும் நாம் ஏன் இன்னும் கட்டிடம் கட்டுகிறோம்? நாம் சேர்க்கின்ற செல்வங்கள் எதையும் நம்மால் கொண்டு செல்ல முடியாது என்று தெரிந்தும் ஏன் செல்வம் சேர்க்கிறோம்? நாம் படிக்கின்ற அனைத்தையும் ஒருநாள் மறப்போம் என்று தெரிந்தும் ஏன் படிக்கிறோம்? நாம் உண்கின்ற உணவு சில மணி நேரங்களில் செரித்து மீண்டும் பசிக்கும் என்று தெரிந்தும் ஏன் உண்கின்றோம்? நாம் உடுக்கின்ற உடை அந்த நாளின் மாலையில் அழுக்காகிவிடும் என்று தெரிந்தும் நாம் ஏன் தூய்மையான ஆடை அணிகின்றோம்? நாளின் இறுதியில் எல்லாம் உடையும், களையும், மறக்கும், செரிக்கும், அழுக்காகும், இறக்கும். ஆனால், நாள் முழுவதும் அது வாழ்கிறதே அந்த ஒன்றிற்காகத்தான் நாம் அனைத்தையும் செய்கின்றோம். நாம் கட்டுகின்ற போது காட்டுகின்ற உழைப்பு, செல்வத்தைச் சேர்க்க நாம் மேற்கொள்ளும் முயற்சி, படிப்பதற்கு நாம் காட்டும் ஆர்வம், உணவில் நாம் பெறும் ஆற்றல், ஆடையில் நாம் பெறும் தன்மதிப்பு போன்றவைதாம் நாளின் இறுதியில் நாம் அனுபவிக்கும் இறப்பு அனுபவத்தை நிரப்பும் நம்பிக்கை நீரூற்றுக்களாக இருக்கின்றன.
இறப்பு என்னும் நிகழ்வு எல்லாவற்றையும் வெறுமையாக்கிவிடுகிறதோ என்ற அச்சம் அன்று முதல் இன்று வரை எல்லாருக்கும் இருக்கிறது. இறப்புக்குப் பின் ஒன்றும் இல்லை என்று சொன்னால் நாம் வாழ்வது எல்லாம் வீணாகி விடுமே என்ற கவலையும் அத்தோடு சேர்ந்துவிடுகிறது.
இறப்பு என்னும் வெறுமையை நம்பிக்கை நிரப்புகிறது என்று நமக்கு முன்மொழிகிறது இன்றைய இறைவாக்கு வழிபாடு.
இன்றைய முதல் வாசகம் (காண். 2 மக் 7:1-2,9-14) இணைத்திருமுறை நூல்களில் ஒன்றான மக்கபேயர் நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. கி.மு. 168 ஆம் ஆண்டு, இஸ்ரயேல்-பாலஸ்தீனத்தை ஆளுகின்ற அந்தியோக்கஸ் எபிஃபேனஸ் என்ற மன்னன் கிரேக்க கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை யூத மக்கள்மேல் புகுத்தி, யூத சமயத்திற்கும், கடவுளுக்கும் பிரமாணிக்கமாக இருந்த அனைவரையும் கொல்கின்றான். அவர்கள் தங்களுடைய சட்டங்களைப் பின்பற்றுவதிலிருந்து விலக வேண்டும் என்று வலியுறுத்துகின்றான். அவர்கள் விலகிவிட்டார்களா என்று பார்ப்பதற்கான ஒரு வழியாக அவர்களை பன்றியின் இறைச்சி உண்ணுமாறு கட்டளையிடுகின்றான். இப்படியாக, ஒரு குடும்பத்தில் உள்ள ஏழு மகன்களையும் அவர்களின் தாயாரையும் பன்றி இறைச்சி உண்ணச் செய்யும் நிகழ்வே இன்றைய முதல் வாசகம். தங்களுக்கு எந்த தீங்கு வந்தாலும், தாங்கள் எவ்வித சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டாலும் தங்களுடைய சட்டத்தை விட்டுவிட மறுக்கிறார்கள் இவர்கள். முதல் சகோதரர், ‘கடவுளின் திருச்சட்டத்தை மீறுவதைவிட சாவதே மேல் என்றும், கடவுள் அவர்மேல் நம்பிக்கைக் கொண்டவர்கள் நிலைவாழ்வுக்கு உயிர்ப்பிப்பார்’ என்றும் சொல்லிக்கொண்டு உயிர் துறக்கிறார். இரண்டாமவரின் நாக்கும் கைகளும் வெட்டப்பட்டபோதும் குறைவான அவருடைய உடலை கடவுள் உயிர்ப்பின்போது நிறைவானதாக்குவார் என்று சொல்லி இறக்கிறார். மூன்றாமவர் கடவுளின் நீதியையும் மற்றும் நேர்மையையும் முன்னிறுத்தி, கடவுளுக்காக இறப்பவர்கள் வாழ்வைப் பெறுவார்கள் என்றும், தீய அரசன் உயிர்ப்பை அனுபவிக்க மாட்டான் என்றும் எச்சரிக்கின்றார்.
இவர்களுடைய இந்த வார்த்தைகள் வீண் பிடிவாதத்தால் எழுந்த வார்த்தைகள் அல்ல; மாறாக, அவர்கள் கடவுளையும் கடவுளின் மறைநூலையும் அறிந்திருந்த அறிவின், அனுபவத்தின் பின்புலத்தில் எழுந்த வார்த்தைகள். கடவுள் தம்மை நம்பும் அடியார்களை நீடித்த அழிவுக்கு உட்படுத்தமாட்டார் என்று அவர்கள் புரிந்துவைத்திருந்தார்கள். இறப்புக்குப் பின் வாழ்வு அல்லது நிலைவாழ்வு பற்றிய நம்பிக்கை இஸ்ரயேல் மக்கள் வரலாற்றில் மிகவும் பிந்தைய காலத்தில்தான் உருவாகிறது. “இறந்த உம் மக்கள் உயிர்பெறுவர். அவர்களின் உயிரற்ற உடல்கள் மீண்டும் எழும்” என்று எசாயாதான் இந்த நம்பிக்கையை முதன்முதலில் விதைக்கிறார் (காண். 26:19). தொடர்ந்து எசா 25:8, ஓசே 13:14, திபா 16:9-11, 17:15 ஆகிய இடங்களிலும் இதையொத்த குறிப்புக்களைப் பார்க்கின்றோம். இறப்புக்குப் பின் நிகழும் தண்டனைத் தீர்ப்பு பற்றிய புரிதல் தானியேல் 12:2 இல் இடம் பெறுகிறது: “இறந்துபோய் மண்புழுதியில் உறங்குகிற அனைவருள் பலர் விழித்தெழுவர். அவருள் சிலர் முடிவில்லா வாழ்வு பெறுவர். வேறு சிலரோ வெட்கத்திற்கும் முடிவில்லா இழிவுக்கும் உள்ளாவர்.” இது ஏறக்குறைய மக்கபேயர் நூல் காலத்தில் எழுதப்பட்டதே. தங்களுடைய கடவுளின் நன்மைத்தனம் பற்றியும், அவருடைய பேரன்பு பற்றியும் அனுபவித்த இஸ்ரயேல் மக்கள் தங்களுடைய கடவுள் தங்களை எதிரியின் பிடியில் விட்டுவிட்டாலும், எதிரியை நீடித்த அழிவிற்கும், தங்களை நீடித்த வாழ்விற்கும் உயிர்ப்பிப்பார் என்று உறுதியாக நம்பினார்கள். ஏழு சகோதரர்களும், அவர்களுடைய தாயாரும் இறக்கத் துணிந்தது இந்த நம்பிக்கையால்தான். ஆக, இவர்களுடைய இறப்பை நிரப்பியது ‘இறப்புக்குப் பின் வாழ்வு’ என்ற நம்பிக்கையே.
இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 2 தெச 2:16-3:5), ஆண்டவரின் இரண்டாம் வருகை பற்றிய போலிப் போதனையை விலக்கும் நோக்குடன் அவர்களுக்கு அறிவுறுத்தும் பவுல், அவர்களை ஊக்கப்படுத்தி அவர்களுக்காக இறைவேண்டல் செய்கின்றார். ‘ஆண்டவர் விரைவில் வருகிறார்’ என்ற எண்ணத்தில் ‘வாழ்வில் எதுவுமே நிலையானது அல்ல’ என்று சொல்லிச் சிலர் சோம்பித் திரிந்தனர். ‘ஆண்டவர் வரக் காலம் தாழ்த்துகிறார்’ என்ற எண்ணத்தில் இன்னும் சிலர், ‘இப்போது இருக்கும் பாவ நிலையிலேயே தொடர்ந்து இருப்போம்’ என்றனர். இந்த இரண்டுமே தவறான எண்ணங்கள் என்று அறிவுறுத்துகின்ற பவுல்,“ஆண்டவர் நம்பிக்கைக்குரியவர். அவர்கள் உங்களை உறுதிப்படுத்தி, தீயோனிடமிருந்து காத்தருள்வார். கடவுளின் அன்பையும், கிறிஸ்துவின் மன உறுதியையும் அடைய ஆண்டவர் உங்களைத் தூண்டுவாராக!” என்று ஆசீர்வதிக்கின்றார்.
ஆக, இரண்டாம் வருகை அல்லது உலக அழிவு என்னும் இறப்பின் வெறுமையை நிரப்புவது கடவுளின் அன்பும் கிறிஸ்துவின் மனஉறுதியுமே.
இன்றைய நற்செய்தி வாசகம் (காண். லூக் 20:27-38) சதுசேயர்களுக்கும் இயேசுவுக்கும் இடையே நிகழ்ந்த விவாதத்தை நம் கண்முன் கொண்டுவருகிறது. சதுசேயர்கள் இயேசுவின் சமகாலத்தில் உள்ள யூத சமூகத்தின் ஒரு பிரிவினர். இவர்கள் செல்வந்தர்கள். ஆளும் வர்க்கத்தினர். மேட்டுக்குடியினர். எருசலேம் ஆலயத்தையும் அதன் வரவு செலவுகளையும் இவர்களே மேலாண்மை செய்தார்கள். உரோமை அதிகார வர்க்கத்தோடு தோளோடு தோள் கொடுத்து நின்றனர். விவிலியத்தின் முதல் ஐந்து நூல்களை (தொடக்கநூல், விடுதலைப் பயணம், லேவியர், எண்ணிக்கை, இணைச்சட்டம்) மட்டுமே தூண்டப்பட்ட நூல்களாக ஏற்றுக்கொண்டனர். அவற்றில் சொல்லப்படாத எதையும் நம்பாதவர்கள். உயிர்ப்பு, இறப்புக்குப் பின் வாழ்வு, வானதூதர்கள் ஆகியவற்றில் நம்பிக்கை இல்லாதவர்கள். இந்தப் பின்புலத்தில் ‘உயிர்ப்பு’ அல்லது ‘இறப்புக்குப் பின் வாழ்வு’ என்னும் நம்பிக்கை ஐந்நூல்களுக்கு முரணாக இருப்பதை இயேசுவிடம் உணர்த்த விரும்புகிறார்கள்.
இச 25:5 அறிவுறுத்தும் ‘லெவிரேட் திருமணம்’ (‘சகோதரர் திருமணம்’) என்னும் கூற்றை எடுத்து, ஒரு பெண் இவ்வுலகில் திருமணத்திற்காக ஏழு சகோதரர்களை மணந்தால், இறப்புக்குப் பின் ஏழு பேரை மணமுடிக்க வேண்டுமே, அது யூதச் சட்டத்திற்கு எதிரானதாகுமே என்றும் கேள்வி எழுப்புகின்றனர் சதுசேயர்கள். அவர்களின் வாக்குவாதம் ஆதாரமற்றது என எண்பிக்கிறார் இயேசு. முதலில், மறுவாழ்வில் இறப்பு இல்லை என்பதால் திருமணம் முடிக்கவும், குழந்தை பெற்றுக்கொள்ளவும், குழந்தைகள் வழியாகப் பெற்றோர்கள் வாழவும் தேவையில்லை. அவர்கள் ‘சாகமுடியாத’, ‘வானதூதரைப் போல இருக்கின்ற’ ஒரு நிலையை அடைவார்கள். இது பூமியில் நம் வாழ்க்கையைவிட வித்தியாசமானது. இரண்டாவதாக, சதுசேயர்கள் தங்களுடைய மறைநூலை அறியாதவர்களாக இருப்பதை அவர்களுக்கு உணர்த்துகிறார் இயேசு. விப 3:1-6, எரியும் முட்புதர் நிகழ்வில், தம்மை மோசேக்கு வெளிப்படுத்தும் கடவுள், தம்மை குலமுதுவர்களின் - ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் - என்று வெளிப்படுத்துகின்றார். கடவுள் வாழ்வோரின் கடவுளாக இருப்பதால் இறந்தவர்களும் அவரோடு வாழ்வார்கள். ஆக, இறப்புக்குப் பின் வாழ்வு இல்லை என்பது பொருளற்றது.
ஆக, இறப்பு என்னும் வெறுமையை கடவுள் நிரப்புகிறார்.
இவ்வாறாக, இன்றைய முதல் வாசகத்தில் இறப்பு என்னும் வெறுமையை ‘இறப்புக்குப் பின் வாழ்வு’ என்ற நம்பிக்கையும், இரண்டாம் வாசகத்தில் ‘கடவுளின் அன்பும் கிறிஸ்துவின் மனஉறுதியும்,’ நற்செய்தி வாசகத்தில் ‘வாழ்வோரின் கடவுளில் நாம் வாழ்கிறோம்’ என்ற நம்பிக்கையும் நிரப்புகின்றன.
இறப்பு ஏற்படுத்தும் வெறுமையை நாம் எளிதாகச் சொல்வதுபோல நிரப்பிவிட முடியாது. அதற்குச் சில நாள்கள் ஆகலாம், மாதங்கள் அல்லது வருடங்கள் ஆகலாம். அதே வேளையில் இது சாத்தியமில்லை என்றும் சொல்லிவிட முடியாது.
நம்முடைய வாழ்விற்குப் பொருள் இல்லை என்று புலம்புவதை விடுத்து, நம் வாழ்விற்குப் பொருள் கொடுப்பது நம் கையில் என்ற பொறுப்புணர்விற்குக் கடந்தால், திருப்பாடல் ஆசிரியர் போல், “நானோ! நேர்மையில் நிலைத்திருந்து உமது முகம் காண்பேன். விழித்தெழும்போது உமது உருவம் கண்டு நிறைவுபெறுவேன்” (17:15) என்று நாமும் சொல்ல முடியும்.