இந்திய அரசியல் சாசனத்தின் பிரதிநிதியாக நியமிக்கப்படும் ஒவ்வொரு மாநில ஆளுநரும் மாண்புக்குரியவர்கள். ஆனால், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பதவிகளில் உள்ள ஆளுநர்கள் மாண்புக்குரியவர்களாக தங்களை அடையாளப்படுத்துவதில்லை. குறிப்பாக அண்மைக்காலங்களில், மத்தியில் பாஜக பொறுப்பேற்றதிலிருந்து நியமிக்கப்படும் ஆளுநர்கள், அரசியல் சாசனத்தின் கடமைகளை நிறைவேற்றாமல், தாங்கள் சார்ந்த இயக்கங்களின் கொள்கை பரப்புச் செயலாளர்களாக - (கொபசெக்களாக) - இருக்கின்றனர்.
இந்திய வரைபடத்தில் மிகப்பெரிய மாநிலங்களான மேற்கு வங்கம், தெலுங்கானா போன்ற மாநிலங்களில் கூடுதல் பொறுப்புடன் அண்டை மாநில ஆளுநர்கள் நியமிக்கப்பட்டு, அரசியல் சாசனம் சார்ந்த அலட்சியம் திட்டுமிட்டு மேற்கொள்ளப்பட்டு, நிர்வாக ரீதியாக எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் முடக்கப்படுகின்றன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் மேல் இந்த அரசியல் சாசன பிரஜைகளின் வல்லாதிக்க வன்முறை கடுமையாக உள்ளது. குடியரசுத் தலைவருக்கும் மாநில அரசுக்கும் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கும் மாநிலத்திற்கும் இடைநிலை தொடர்பாளர்களாக உள்ள அவர்கள், தங்களின் அரசியல் சாசன கடமைகளை நிறைவேற்றுவதில் திட்டமிட்ட நீண்ட கால தாமதம் செய்கின்றனர்.
சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, மாநில அமைச்சரவையின் ஒப்புதலோடு அனுப்பப்பட்ட நூற்றுக்கணக்கான மசோதாக்களுக்கு, தமிழக ஆளுநரைப் பொறுத்தவரை கூட்டுறவுச் சட்டத் திருத்தம், துணைவேந்தரை மாநில அரசே நியமிக்கும் மசோதா, ஆன்லைன் ரம்மி தடைச்சட்ட மசோதா உள்ளிட்ட இருபது மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் உறங்குநிலையில் வைத்திருக்கின்றனர். மேற்கு வங்க மாநில அரசுக்கு நெருக்கடி கொடுத்த மாநில ஆளுநரே இந்திய துணைக் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படும் நெருக்கடி நிலைதான் இந்தியக் குடியரசில் உள்ளது. நிர்வாக ரீதியாக மட்டுமல்ல, கொள்கை ரீதியாகவும் படமெடுக்கும் பாம்பு தலை தூக்குவதைப் போல சீறுகின்றனர்; சில சமயங்களில் கொத்துகின்றனர்.
பாஜக ஆளும் கட்சி உள்ள மாநிலங்களில் உள்ள ஆளுநர்கள், இருக்கிற இடம் தெரியாமல் சாகச பவ்யத்துடன் நடந்துகொள்கின்றனர். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் நியமிக்கப்படும் ஆளுநர்கள் அரசியல் ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் கொள்கை ரீதியாகவும் மிகுந்த நெருக்கடி தருகின்றனர்.
தமிழக ஆளுநர் மாண்புமிகு ஆர்.என்.ரவி, மாளிகைக்குள் பேச வேண்டியதை அரங்கத்திற்குள் பேசுகிறார். அரங்கத்தில் பேச வேண்டியதை இரகசிய அறைக்குள் பேசுகிறார். அதிகாரிகளைக் கூப்பிட்டு கேட்க வேண்டியதை பொதுவெளியில் கூப்பாடு போட்டு கேட்கிறார். அரசியல்வாதிகள் தரம் தாழ்ந்து போகலாம்; ஆனால் அரசியல் சாசன பிரதிநிதிகள் ஒருபோதும் தரம் தாழ்ந்து போகக் கூடாது. தமிழக ஆளுநர் நாக்பூர் தலைமையின் கொ.ப.செக்களாக செயல்படுவதுதான் வேதனை. ரிஷிகளாலும் சனாதன தர்மத்தாலும் உருவானதுதான் பாரதம் என்கிறார். ஷாகக்களில் பேச வேண்டியதை கல்விச் சாலைகளில் பேசுகிறார்.
‘இந்தியாவை மதச்சார்பற்ற நாடு எனச்சொல்கின்றனர்; எந்த ஒரு நாடும் ஏதாவது ஒரு மதத்தைச் சார்ந்துதான் இருக்க முடியும். அதில் இந்தியா விதிவிலக்கல்ல என்று அக்டோபர் 29 ஆம் தேதி சமணத் துறவி ஆச்சார்ய துளசியின் 109 வது பிறந்த நாள் நினைவேந்தல் நிகழ்ச்சியில் தன்னிலை மறந்து உளர்கிறார்.
ஐ.நா அங்கீகரித்த 195 நாடுகளில் 30 நாடுகள்தான் மதச்சார்புடையவை. இந்துக்கள் மிகுந்த நேபாளம்கூட மதச்சார்பற்ற குடியரசாகவே பரிணமிக்கிறது. உயர்நீதிமன்ற நீதிபதியால் அரசியல் சாசன பிரமாணிக்கத்தோடு பொறுப்பேற்றுக்கொண்ட ஓர் ஆளுநரே, இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான கருத்தை தெரிவித்தபோது தார்மீக ரீதியாக தன் பதவியை இழக்கிறார். அரசியல் சாசனத்தின் அடிப்படைக்கொள்கையான மதச்சார்பின்மைக்கு எதிராக தன் கருத்தை தெரிவித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராகவே செயல்படுகிறார்.
நிர்வாக ரீதியாக அவர் ஏற்படுத்தும் முட்டுக்கட்டைகளைவிட, கொள்கை ரீதியாக அவர் முன்வைக்கும் கட்டுப்பாடற்ற மதவாதக் கொள்கைகள் மிகவும் ஆபத்தானவை. கோவில் கோவிலாக அவர் மேற்கொள்ளும் ஆலய தரிசனம் அவர்தம் தனிப்பட்ட உரிமை என்று நாம் மௌனித்தாலும், கொள்கைசார்ந்து அரசியல் சாசனத்திற்கு எதிராக அவர் முன்வைக்கும் வாதங்கள் ஒருபோதும் ஏற்புடையவை ஆகாது. பாஜக, அதிமுக நீங்கலாக, மாநிலத்தின் அனைத்துக் கட்சிகளும் ஒரே நேர்க்கோட்டில் அணிதிரண்டு நிற்பது, இப்பதவிக்கு எதிராக அல்ல; மாறாக, இப்பதவியை வகிப்பவருக்கு எதிராக என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
கறுப்புக்கொடிகளுக்கு முன்பு காவிக் கொடிகள் பணிந்துதான் ஆக வேண்டும். இது தமிழக நிதர்சனம். அரசியல் சாசனத்தின் காவலர் ஒருபோதும் சனாதனத்தின் காவலராக முடியாது. சனாதனத்தின் காவலர் ஒருபோதும் அரசியல் சாசனத்தின் காவலராக முடியாது. இது நகைமுரண் என்பதைவிட இது ஒரு பகைமுரண். காந்தப்புலத்தில் வேண்டுமானால் வடதுருவம் தென்துருவத்தோடு இணையும். ஆனால் திராவிட, வங்கப் புலத்தில் இது சாத்தியமில்லை. மக்களைப் பிளவுப்படுத்தும் தமிழக ஆளுநரின் போக்கு 75 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் அரசியல் சாசன விரோதம் மட்டுமன்று. இது தேசத் தூரோகமும் ஆகும். இப்படி மாநிலத்தில் நிலவும் சமய, சமூக நல்லிணக்கத்தைக் குலைப்பது மிகவும் ஆபத்தானது.
வேரோடும் வேரடி மண்ணோடும் அகற்றப்பட வேண்டிய ஒன்று. வள்ளுவருக்கு வக்காலத்து வாங்குவதுபோல் சீகன் பால்குவுக்கு எதிராக வாய்தா வாங்குவதும் இவர்தம் காவிக்கொள்கையையே அடையாளப்படுத்துகிறது. கோவை கார்வெடிப்பு சம்பவத்தைப் பற்றி பொதுவெளியில் அவர் முன்வைத்த விமர்சனம் அரசியல் சாசனப் பதவிக்கு அழகல்ல; தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அளவுக்கு இறங்கி ஆளுநர் அரசியல் செய்வது ஏற்புடையதுமல்ல. கால்டுவெல்லின் திராவிடம் வேண்டுமானால் ஆளுநருக்குப் பிடிக்காமல் போகலாம். கால்டுவெல், சீகன் பால்கு, வீராமமுனிவர் போன்றவர்களும் கூட பிடிக்காமல் போகலாம். எல்லாம் தனியறைக்குள் மட்டுமே இருக்க வேண்டும். அவர்தம் உயர்ரக தேநீர் விருந்தினருக்கு வேண்டுமானால் உபதேசிக்கலாம். ஆனால் காவிப்பாடம் மாணவர்களுக்கு எடுக்கக்கூடாது.
திராவிடத்தை இழிவுப்படுத்த சனாதனத்தைத் தூக்கிப் பிடிப்பதும், தமிழ் மொழி வளர்த்த கிறிஸ்தவ மிஷனரிகளை இழிவுப்படுத்த காவி பூநூல் வள்ளுவரை விளம்பரப்படுத்துவதும் வெட்கக்கேடானது. தமிழக எம்பிக்கள் கையொப்பமிட்டு தமிழக ஆளுநருக்கு எதிராக குடியரசுத் தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள மனு, சுதந்திர இந்திய வரலாற்றில் முதன்முறையாகும். இந்திய இறையாண்மைக்கு எதிராக, இந்திய அரசியல் சாசனம் முன்வைக்கும் மதச்சார்பின்மைக்கு எதிராக உள்ள தமிழக கவர்னர் ஆர். என். ரவி அவர்கள் தார்மீக ரீதியாக பதவியை இழந்துவிட்டார். இழப்பது ஆட்சியாளருக்கு அழகல்ல; கொடுப்பதுதான் ஆட்சியாளருக்கு அழகு. ‘நாக்பூர் சனாதனம்’ பேசி மக்களின் மனத்தில் சலிப்பை ஏற்படுத்துவதைவிட ‘ஜனநாயக சமாதானம்’ பேசி மக்களின் மனங்களில் நிற்க வேண்டும்.