பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் கிறிஸ்மஸ் பெருவிழாவுக்கு முந்திய நாளான டிசம்பர் 24 ஆம் தேதி அன்று நடைபெற இருக்கின்ற உள்ளாட்சித்தேர்தல், நாட்டின் அரசியலமைப்பில் கிறிஸ்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை மீறுவதாக உள்ளதால் இத்தேர்தல் நாள் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று தேசிய மனித உரிமை ஆணைய உறுப்பினர் மஞ்சூர் மசிஹ் அவர்கள் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியுள்ளார்.
பாகிஸ்தான் இஸ்லாமிய நாடாக இருந்தாலும், அந்நாட்டின் தந்தையான முகமது அலி ஜின்னா அவர்களின் பிறந்த நாளான டிசம்பர் 25 ஆம் தேதி அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றும், டிசம்பர் 23 முதல் சனவரி 3 வரை நீண்ட குளிர்கால விடுமுறையாக இருப்பதால், பலரும் தங்களது சொந்த கிராமத்திற்குச் செல்வார்கள் என்றும், இதனால் உள்ளாட்சித்தேர்தலில் ஆர்வமுடன் பங்கேற்பது குறைவுபடும் என்றும் மஞ்சூர் மசிஹ் குறிப்பிட்டுள்ளார்.
101 இடங்களில் நடைபெறும் உள்ளாட்சித்தேர்தலில் ஏறக்குறைய 50,000 கிறிஸ்தவர்கள் பங்கேற்க உள்ளார்கள் எனவும், ஒவ்வோர் இடத்திலும் நான்கு இடங்கள் பெண்கள், தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையினர், இளையோர்க்கு என்று ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன எனவும் கூறப்பட்டுள்ளது.